செவ்வாய், 6 நவம்பர், 2018

சபரிமலை வன்முறை : கேரள பாஜக தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் !

கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்
vinavu :பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் உரையாற்றிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன், பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு அனைவரும் அடிபணிந்து விட்டனர் எனக் கூறியுள்ள வீடியோ பதிவு பிரபல மலையாள பத்திரிகையான மலையாள மனோரமாவின் இணையதளத்தில் வெளிவந்துள்ளது. பூட்டிய அரங்கிற்குள் நடத்தப்பட்ட பாஜக உட்கட்சிக் கூட்டத்தில் கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் சபரிமலையின் தந்திரி (தலைமைப் பூசாரி) தனக்கு அழைத்ததாகவும், தனது ஆலோசனையின் பெயரிலேயே வயதுக்கு வந்த பெண்கள் வந்தால் கோவில் நடையை இழுத்து மூடுவேன் என தந்திரி அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.
“சபரிமலை நமக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு. அது ஒரு பிரச்சினைக்குரிய விசயம். நேர்வழியில் சபரிமலைப் பிரச்சினையை தீர்ப்பது என்பது சாத்தியமற்றது. நாம் (பாஜக) ஒரு நிகழ்ச்சிநிரலை முன் வைத்தோம். எதிர்க்கட்சிகளைத் தவிர அனைவரையும் அது அடிபணியச் செய்துவிட்டது” என்று கூறியிருக்கிறார் ஸ்ரீதரன்.

படிக்க:
♦ சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

மேலும், அக்டோபரில் கோவில் திறந்ததுமே ஒட்டுமொத்த போராட்டத்தையும் பாஜக திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். ”நமது பாஜக செயலாளர்கள், தங்களால் என்ன எவ்வலவு வெற்றிகரமாக செய்யமுடியுமோ அதனை செய்து முடித்தனர். இரண்டு பெண்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீஜித் ஐ.ஏ.எஸ் அவர்கள் மலைக்குச் செல்கையில், ஒரு இளைஞரணித் தலைவர்தான் பக்தர்களை அழைத்து அவர்களைத் தடுத்து  நிறுத்தினார். வெளி உலகிற்கு இது எதுவும் தெரியாது.” என்றார்.
ஆண்கள் பலரைக் கொண்ட கும்பல் ஒன்று கேரள ஐ.ஜி ஸ்ரீஜித், கவிதா ஜக்கால் மற்றும் ரெஹானா பாத்திமா ஆகிய இரண்டு பெண்களை அழைத்துச் செல்கையில் தடுத்து நிறுத்தியது.


கலவரத்தில் ஈடுபட்ட சங்கபரிவார காலிகள்
மேலும், கோவில் தந்திரி கண்டரரு ராஜீவாரு, பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடுவது குறித்து தன்னிடம் ஆலோசித்ததாகவும், அவ்வாறு செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருமா எனவும் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
“தந்திரி சமூகம் பாஜகவை நம்புகிறது. குறிப்பாக அதன் மாநிலத் தலைவரை நம்புகிறது. பெண்கள் கோவிலுக்கு அருகில் அழைத்து வரச் செய்யப்பட்ட போது, அவர் எனக்கு அழைத்தார். என்னிடம் கோவில் நடையை மூடுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா என்று கேட்டார். நான் அவரிடம், அது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது என்றும், அவர் தனியாக இல்லை என்றும் கூறினேன்.
ஒருவேளை அவ்வாறு வழக்கு பதியப்படுவதாக இருப்பினும் அது பாஜகவுக்கு எதிரானதாக இருக்கும். ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தருவர். நான் அவரிடம் பயப்பட வேண்டாம் எனச் சொன்னபோது, அவர் அப்போதுதான் தான் நிம்மதியாக இருப்பதாகச் சொன்னார்” என்று கூறினார்.


திருப்பி அனுப்பப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த பெண்மணி மாதவி
வெளியான இந்த வீடியோவில் தந்திரியின் பங்கு குறித்து ஸ்ரீதரனிடம் பத்திரிகையாளர்கள் கேட்கையில், தாம் கோவில் தலைமை தந்திரியிடம் ஒரு வழக்கறிஞராகப் பேசியதாகக் கூறினார்.
“தந்திரி உட்பட பல்வேறு மக்கள் என்னை அழைத்து சட்டரீதியான ஆதரவு கோரினர். எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இருந்ததால், நான் எதுவும் பதிலளிக்கவில்லை. அவ்வழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த ஒருவரால் தொடுக்கப்பட்டது” என்றார் ஸ்ரீதரன்
கேரளாவில் இந்தப் பேச்சு மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசும், சி.பி.ஐ(எம்)-ம் கேரளத்தில் பாஜகவின் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் திட்டம் அம்பலமாகியுள்ளதாகக் குற்றம்சாட்டி இருக்கின்றன. மாநில காங்கிரசு தலைவர் சென்னிதாலாவிடம், காங்கிரசும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்ததா எனக் கேட்கையில், சபரிமலையில் வயது வந்த பெண்கள் நுழைவது கூடாது என்ற கருத்து புதியது அல்ல” என்று கூறியிருக்கிறார்.
மீடியாக்களில் வெளியாகியிருக்கும் இந்தப் பேச்சு, சங்கப் பரிவாரத்தின் நடைமுறை உத்திகளின் ஒரு வகை மாதிரியை அம்பலப்படுத்தியிருக்கிறது. அனைத்து விவகாரங்களிலும், பிரச்சினையாக இல்லாததைக்கூட  பிரச்சினையாக மாற்றுவது, பொய்களையும், பீதியையும் பரப்பிவிட்டு பொதுமக்களை வன்முறைக்குள் இழுத்துவிடுவது போன்ற வேலைகளைத்தான் இவ்வளவு காலமாக செய்து வருகிறது சங்க பரிவாரக் கும்பல். தற்போது சபரிமலையில் தாம் தூண்டிவிட்ட வன்முறைகளைத் தனது வாயால் தானே ஒப்பித்துள்ளார் ஸ்ரீதரன்.
ஸ்ரீதரன் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, அமைதியான ஒரு சூழலை வெறிகொண்ட வன்முறைக் களமாக மாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் செயல்தந்திரம் என்பது ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது. ’இந்து’ என்ற அடையாளத்தை வைத்தே நம்மையும் தனது அடியாட்படையாக்கி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடங்கி நடக்கும் ஒரு அடிமையாக நம்மை இருத்தி வைத்திருப்பதே இந்தக் கிரிமினல் கும்பலின் நோக்கம். தற்போது வெளியான இந்த வீடியோவைப் பகிர்ந்து பரப்பி காவிக் கும்பலின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
வீடியோவைக் காண : மலையாள மனோரமா
தமிழாக்கம்:
வினவு செய்திப் பிரிவு
நன்றி : தி நியூஸ் மினிட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக