வியாழன், 22 நவம்பர், 2018

ஈழப்போர் காலத்தில் கைகொடுத்த மில்க் வைட் சோப் ...

Kana Praba : சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின்
அருமை! ஈழப்போர்காலத்துநினைவுகள்!; வீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.
இந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.

விடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.
“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்றி வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.
என்னதான் நம்மூர் உற்பத்தி என்றாலும் நம்மூர் தானே என்ற ஏளனத்தால் மில்க்வைற் பொருட்களை பணக்கார வர்க்கம் அதிகம் சீண்டாது. ஆனாலும் என்ன மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது. என்னுடைய அம்மம்மாவுக்கு மில்க்வைற்றின் நீம் சோப் போட்டுக் குளித்தால் தான் பொச்சம் தீரும். லைஃப் போய் சோப்புக்கு நிகரான சுகம் அவருக்கு. நீம் சோப்பைப் போட்டு விட்டு குளித்து விட்டு கமுக மரத்தில் முதுகைத் தேய்த்து விடுவார். அவரளவில் அவருக்குக் கிட்டும் மசாஜ் அது.
“அழகு ராணிகளின் சோப்” என்று ஶ்ரீதேவி, பூனம் தில்லான் போன்ற அழகிகளின் முகம் போட்டு வெளி வந்த லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான்
பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். உடுப்புத் தோய்க்க இருக்கவே இருக்கு சன் லைற் சவுக்காரம். அந்தக் காலத்தில் எங்கள் உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த காலத்தில் இந்த சோப் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் வழு வழுப்பான காகிதங்களில் கிடைக்கும். ஒரு சுவரொட்டியை வைத்து மூன்று அப்பியாசக் கொப்பிகளுக்கும், பாட விளக்கக் குறிப்புகளுக்கும் (கோனார் நோட்ஸ்) உறை போடலாம்.
அப்போது அந்தச் சவர்க்கார உறைகளின் உட்புறம் போட்டிகள் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கும். தங்க நாணயம் கிடைக்கும், கார் கிடைக்கும் என்றெல்லாம் அந்தப் போட்டியில் சோப் கம்பனிக்காரர் ஆசை காட்டுவார்கள். ஆனால் போட்டியில் பரிசு விழுவது என்னவோ அம்பாந்தோட்டை பியதாசாவுக்கோ அல்லது அனுரதபுரம் குசுமாவதிக்கோ தான். இங்கேயும் கை கொடுப்பது மில்க்வைற் தான். பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுப்பார்கள். அம்மம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நீம் சோப் உறையைப் பிரித்து எடுத்து விட்டு ஒரு சோப்பு டப்பாவில் அந்தச் சோப்பைப் போட்டுக் கொடுத்து விட்டு “நீம் சோப்” உறைகளை மில்க்வைற் நிறுவனத்துக்குத் தபால் மூலம் அனுப்பி புத்தகங்களை வாங்குவோம்.
அரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார். (மில்க்வைற் நிறுவனம் பற்றி நீண்ட விரிவான கட்டுரை எழுத வேண்டும் அதைப் பின்னர் தருகிறேன் இப்போது சோப்புடன் மட்டும் ஒட்டிக் கொள்கிறேன்)
இது இவ்வாறிருக்க இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
ஒரே இரவில் தானும் பயங்கரவாதி ஆக்கப்படுவேன் என்று ராணி சந்தன சோப்போ ஶ்ரீதேவி படம் போட்ட லக்ஸ் சோப்போ நினைத்திருக்கவில்லை அதே சமயம்,மில்க்வைற் நிறுவனம் ஒரே இரவில் யாழ்ப்பாணம் பூராக சூப்பர் ஸ்டாராக மாறியது.
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சோப் என்ற சவர்க்காரம் இல்லை. எனவே கடைகளில் மெல்ல மெல்ல குளிக்கும் சோப் இருப்புத் தீர்ந்து போகவும், உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கோ அல்லது நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினோம். சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.
கையில்ருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினோம். மில்க்வைற்றின் ஆயுட்கால நீம் சோம் வாடிக்கையாளர் எங்கட அம்மம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்திருப்பா அப்போது.
மில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. வாசனை திறம் என்றோ திறமற்றதன்றோ என்று இல்லாத ஒரு மோன நிலையில் இருக்கும். என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியதால்
மில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.
சீயாக்காய் (சிகைக்காய்) அரப்பு அரைச்சுத் தலையில குளிச்சால் தான் பொச்சம் தீரும் என்ற கொள்கையோடு வாழும் என் அம்மாவுக்கு ஷாம்பூ இல்லாதது கூடப் பொருட்டில்லை.
“தம்பி! நீங்கள் அந்த நீட்டுத் தலை முடி ரீச்சரின்ர மேன் எல்லோ” என்று மற்றவர்கள் கேட்கும்
அளவுக்கு முடி வளர்த்தி கொண்ட என் அம்மாவும் சீயாக்காய் தான் தன் முடி வளர்த்தியைத் தீர்மானிப்பதாக நம்புவார். ஆனால் சோப்புத் தட்டுப்பாடு பொதுப் பிரச்சனை ஆகி விட்டதே இப்போது.
இனி சோப்புக்கு மாற்று வழியைத் தேடினோம். எஞ்சியிருந்த சோப்புத் துண்டுகளைச் சேகரிக்கும் படலம் ஆரம்பமாகியது. சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.
பனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு. செவ்வரத்தம் பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.
அந்த நாளில் பெரும்பாலும் துலாக் கிணறுகள் தான் மிஞ்சி மிஞ்சிப் போனால் கப்பி வளையம் போட்டவை. எல்லாக் கிணறுகளுக்கும் பக்கத்தில் சலவைக் கல் இருக்கும். உடுப்புத் தோய்ப்பதோடு காலில் படர்ந்திருக்கும் பித்த வெடிப்புகளை உரஞ்சித் தேய்க்கவும் இந்த சலவைக்கற்கள் அரும்பணியாற்றின. இந்த சலவைக் கற்களில் ஒட்டியிருந்த சோப்புத் துகள்கள் தான் எங்கள் உடுப்புத் தோய்க்கப் பயன்பட்டன. மின்சாரம் இல்லாத சூழலில் அயர்ன் பண்ணவும் வழியில்லாமல் உடுப்புகளை பெரிய புத்தக அடுக்குகளுக்குக் கீழ் நெரித்து வைத்து மடிப்பு வைப்போம்.
ஒன்றல்ல இரண்டல்ல மாதக் கணக்காக, வருடக் கணக்காக இந்த சோப்பு இல்லாப் போராட்டம் நிகழ்ந்தது.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் இருந்து வரும் லக்ஸ், ரெக்ஸோனா சோப் வகைகள் தமிழகத்துக்கு வள்ளம் வழியாக நாடு கடத்தப்படும். இங்கிருந்து வள்ளத்தில் போவோர் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, இராமேஸ்வரத்தில் இறங்கிப் புதுப் படம் பார்த்து விட்டு அங்கிருந்து பட்டு உற்பத்திப் பொருட்களோடு தமிழகம் வந்து சேருவர். இந்த நிலை தொண்ணூறுகளில் மாறியது. தமிழகத்தில் இருந்து மைசூர் சந்தன சோப் கடத்தப்பட்டுக் கொள்ளை விலையில் விற்ற காலமும் உண்டு. அந்த நேரம் யாழ்ப்பாணத்தில் CIMA கற்கை நெறி ஆரம்பித்திருந்தது. அந்த வகுப்பில் என்னோடு படித்தவர் எங்களை விடப் பல வயது மூத்தவர். எங்கட செற்றில் இருந்து பம்பலடிச்சுக் கொண்டு கொட்டம் போட்டுக் கொண்டிருப்பார்.
“அண்ணை என்ன தொழில் செய்யுறீங்கள்?” என்று கேட்டால் “ஸ்மக்ளிங்” என்று சிரிப்போடு சொல்லுவார். அவர் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.
மில்க்வைற் கனகராசா எங்கள் அம்மாவின் சிறிய தந்தையோடும், அயலவர் அண்ணா கோப்பி நடராசா மாமாவுடனும் நட்புடன் இருந்தவர். நான் அவுஸ்திரேலிய வதிவிட உரிமை பெறுவதற்கான நற்சான்றிதழ் கடிதத்தை 1995 இடப்பெயர்வுச் சூழலிலும் அனுப்பி வைத்தவர்.
ஆனால் இந்தப் போர் எல்லாரையும் மாற்றி உருக்குலைத்து விட்டது. தொழிலில் முடங்கியிருந்தாலும் மில்க்வைற் தொழிலகத்தில் வேலை செய்தோருக்குத் தொடர்ந்து பணம் கொடுத்து நொடித்து விட்டார். கனகராசா அவர்கள் இறந்து 19 வருடங்கள் கழித்து அவரோடு இறுதிக் காலத்தில் உறுதுணையாக இருந்த சைவத் தொண்டரிடம் மில்க்வைற் கனகராசா பற்றிய பேச்சு வந்தது.
“பாவம் தம்பி கடைசிக் காலத்தில அவர் பெரியாஸ்பத்திரியில் படுக்கையில கிடக்கேக்க யாருமே வந்து அவரைப் பார்க்கேல்லை. அவர் பெரியாஸ்பத்திரியில் இருக்கிறார் என்று உதயன் பேப்பரில போட்டும் இரண்டு பேர் தான் வந்தவை. ஒரு ஆள் வாய் பேச முடியாத வாகனச் சாரதி”என்று பெருமூச்சோடு சொன்னவர்
“அதையும் தாங்கலாம் ஆனால் இவ்வளவு செழிப்பால வாழ்ந்த மனுசன் ஒரு நாள் வைத்தியசாலைப் படுக்கையில் இருந்து கொண்டு “தம்பி! ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்தா யாரிடமாவது வாங்கித் தாங்கோ” எண்டதைத் தான் பொறுக்க முடியாது”
என்றார்.
மில்க்வைற் தொழிலகம் இருந்த சுவடு இப்போது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் அந்தத் தொழிலகம் இருந்த காணியின் முகப்பில் இருந்த “மில்க்வைற் தொழிற்சாலை” என்ற புகைப்படத்தை மட்டும் என் சேமிப்பில் எடுத்து வைத்திருக்கிறேன்.
கானா பிரபா
22.11.2018
மில்க்வைற் செய்தி நூலகத் தளத்தின் களஞ்சியத்தில்
இங்கே படிக்கலாம்
http://www.noolaham.org/wiki/index.php…

 

Milkwhite reflects ailing industry in Jaffna

[TamilNet, Friday, 27 February 1998, 23:59 GMT]
There is a tragic similarity between the production of Milk white soap and its manufacturer K. Kanagarajah. They are both no longer in active service. Their predicament is however representative of the malaise that ails the once thriving local industry of Jaffna.

The first name that comes to mind when Jaffna's indigenous manufacture is mentioned, is Milkwhite soap.

The 71 year old proprietor of Milkwhite K. Kanagarajah's pioneering efforts came in for a lot of praise in the book 'Jaffna 1981' by the American writer and scholar Dr. Holmes.

But times changed, the reach of Kanagarajah's business shrank, transport became difficult, the sense of insecurity increased, capital dwindled, there was no insurance cover, banking facilities, electricity or telephones.

The constant displacement of the Jaffna people and the volatile political situation added to the manufacturer's woes.

Difficulties in procuring inputs for manufacture and a dwindling market led inevitably to a dearth of capital.

Loans could not be paid back and this in turn resulted in problems of raising fresh capital - a vicious circle.

Mr. Kanagarajah recently reminisced about his life and times in an interview with the Tamil daily Thinakkural.

K. Kanagarajah, one of five children, was compelled to abandon his studies at an early age, because his family could not afford to educate him.

When only 12 years old, he began working with a relative who was a tobacconist at Gampola, near Kandy.

Later he worked with his brother as a rubber-maker at a rubber estate at Ginigathena near Nuwara Eliya.

Soap making began as a family concern, when Kanagarajah's father set it up as a cottage industry.

The son, returning home from his stint outside Jaffna, learnt the ropes of both manufacture and distribution of soap.

Through the perseverance of father and son, Milkwhite was able to compete with even the imported brands.

Milkwhite were the first local concern to add blue - a type of detergent- to soap.

Blue soap, bar soap, medicated soap, washing powder, were among the repertoire of brands that rolled out of the Milkwhite factories. But that was not all.

Organically produced insecticides and organic fertilizers were also produced by Milkwhite.

"High standards, low price, good distribution and contented employees contributed to the success of the product," said Kanagarajah.

Social service was also a part of Kanagaraja's interests.

Wells were dug, tanks excavated, tree planting campaigns were undertaken to help colonists in the Wanni area by Milkwhite and coconut saplings were distributed for planting.

Hospitals, schools, orphanages and places of worship benefited from the largesse of Milkwhite industries.

"Local demand for domestic manufactures, and the confidence our people had in local products helped us to go forward".

"But times have changed. Many people in Jaffna today are spurred by foreign values, which have contributed to our downfall," said Kanagarajah.

Milkwhite soap alone has not earned Kanagarajah plaudits. His novel method of packaging the product has found many admirers, including Dr. Holmes. But Kanagarajah is modest about his gifts.

"It merely expresses my deep-felt sentiments on the matter" he said.

For instance, without going in for the outer cover for Milkwhite soap, local products were distributed as gifts. This benefited not only Milkwhite, but the manufacture of those products too.

The slogan was 'help us to help you'.

Items made of clay like tills, statuettes of the poet Barathy from the pottery makers in Changanai, or handlooms and other items, were given to the customer free of charge.

Rather than spending money on wrappers for Milkwhite soap, stickers of Thiruvazhuvar, a copy of his picture, or even stanzas of the Thirukkural, were given with the product.

During the Sri Lankan Army operations in the Jaffna Peninsula in 1995, the soap making operation had to be moved to Thenmaraadchi and re-launched on a small scale.

The possibility of an epidemic breaking out there due to severe shortage of soap and other detergents was very real at that time.

"I got a lot of satisfaction because I was able to help the Tamil people at their time of need".

"Values such as tolerance, self-control, unity, perseverance and hard work should be promoted. Everyone should live according to the precepts of the sacred Kural. That is my wish," said Kanagarajah.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக