புதன், 21 நவம்பர், 2018

கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் புலம்பல் : இந்தப்பாவம் பழனிச்சாமியை சும்மா விடாது

nakkheeran.in - jeevathangavel: eதமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களில் மிக முக்கியமானது கஜா புயல்.   இதற்கு அரசின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மக்களுக்கு விழுப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.   இதனை தொடர்ந்துதான் புயல் பாதிப்பிற்கு உள்ளான நவம்பர் 15ம் தேதி பிரதான எதிர்க்கட்சியான திமுக உட்பட பல கட்சித்தலைவர்கள் புயலை எதிர்நோக்கிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சிறப்பாக செயல்பட்டது என அறிக்கை விட்டார்கள்.   ஆனால், புயலின் பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில்தான் கஜாவின் கோரத்தாண்டவத்தை தமிழகமே அறிந்தது.   குடியிருப்பு வீடுகள் உள்பட தாங்கள் வளர்த்த தென்னை மரங்கள்,   ஆடு, மாடு, கோழிகள் என எல்லாமும் புயல் காற்றின் வேகத்தில் சீரழிந்தன.  ஆரம்ப கட்டத்தில் உயிர் பாதிப்பு 10 பேர் என்றும், மரங்கள் சாய்ந்தது சில ஆயிரம் எனவும் தகவல் வர,  முழுமையான தகவல்கள் 60 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருப்பதும் சுமார் 5 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதும் 17 ஆயிரம் வீடுகள் புயல் பாதிப்பால் தரை மட்டானது என தொடர்ந்து தகவல் வந்தது.  


இந்த நிலைமையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் 14ம் தேதி இரவு முதல் 18ம் தேதி இரவு வரை  முகாமிட்டிருந்தார்.   இது ஏற்கனவே முதல்வரின் பயண திட்டமென கூறப்பட்டாலும்,   புயல் வருகிறது என 10 நாட்களுக்கு முன்பே இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு அறிவிப்பு செய்திருந்தது.    ஆனால் முதல்வர் பழனிச்சாமி எதைக்கண்டும் பதில் பேசாமல் திட்டமிட்டபடி தனது சொந்த ஊருக்கு சென்று நிகழ்ச்சிகள் குடும்பத்தினருடன் செயல்பட்டார்.    இதை உள்வாங்கிய கொங்குமண்டல அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக பேசத்தொடங்கியுள்ளனர்.  குறிப்பாக,   சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒரு வாக்கியத்தை முன்வைக்கிறார்கள்.

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதுபோல,  எடப்பாடி பழனிச்சாமியின் செய்கைகள் உள்ளன.   இந்த பழனிச்சாமியை கட்சிக்கு கொண்டு வந்து கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்பு வாங்கிக்கொடுத்தது செங்கோட்டையன். ஆனால்,  அதே செங்கோட்டையனை புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால்,  செங்கோட்டையன் நேரில் சென்று அந்த மக்களிடம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித்திணறி வருகிறார்.   ஆனால் செங்கோட்டையனால் கொண்டு வரப்பட்ட பழனிச்சாமி, முதல்வர்  நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் கோபம் நேரில் தாங்கமுடியாது என தெரிந்துகொண்டு ஹெலிகாப்டரில் இன்று வலம் வந்துள்ளார்.    முதல்வராக இருந்த அம்மா,  சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது கார் மூலம் நேரில் சென்றார்.  ஆனால் எந்த தகுதியுமே இல்லாத எடப்படி பழனிச்சாமி முதல்வர் என்ற தகுதியை மட்டும் வைத்துகொண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்றுள்ளார்.

இவரைகொண்டு வந்த செங்கோட்டையன் மக்களின் கேள்விகளூக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறார்.  இதுதாங்க கொடுமை.   இந்தப்பாவம்  பழனிச்சாமையை சும்மா விடாது என கொதித்துபோய் பேசுகிறார்கள் கொங்குமண்டல அதிமுக நிர்வாகிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக