வெள்ளி, 2 நவம்பர், 2018

சர்கார் திருட்டு கதை.. பாக்கியராஜ் பதவி விலைகலை திரை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்க மறுப்பு

பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மறுப்பு!மின்னம்பலம்: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாக்யராஜ் அளித்த கடிதத்தை சங்கம் ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் பாக்யராஜுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சர்கார் படத்தின் கதை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்த பின்னரும் அதன் தாக்கம் இன்னும் தமிழ்த் திரையுலகில் குறைந்தபாடில்லை. கதை திருட்டு தொடர்பாக தமிழ்த் திரையுலகில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள போதும் சர்கார் சர்ச்சையில் உடனடியாக தீர்வு எட்டப்பட்டதற்குச் சங்கத்தின் நிலைப்பாடு முக்கியமாகப் பேசப்பட்டது. இருப்பினும் அதே சர்ச்சை அவரது பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு அவரைத் தள்ளியுள்ளது. ராஜினாமா செய்வதாக அறிக்கை வெளியிட்ட பாக்யராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது அறிக்கையையே விளக்கமாக அளித்தார்.

“சர்கார் படம் சம்பந்தமா சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க பொறுப்பில் இருக்கிற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து, நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சது. ஆனா.. அதுல பல அசௌகரியங்கள் நான் சந்திக்க வேண்டிவந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்” என்று பாக்யராஜ் தனது அறிக்கையில் கூறினார்.
தனக்கு நேர்ந்த அசௌகரியங்கள் என்ன என்பதைச் சங்கத்தின் நலன் கருதி பாக்யராஜ் கூற மறுத்துவிட்டார். இருப்பினும் உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து சங்கத்தலைவராக விரும்புவதாகத் தெரிவித்தார். இதனால் சங்கத்துக்கு செலவு ஏற்பட்டாலும் சங்க நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதே சரியானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சங்கம் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ் குமார், பாக்யராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். மேலும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் நீங்களே தலைவராகத் தொடரவேண்டும் என்று அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தையே செயற்குழுவின் தீர்மானமாக எடுக்கப்பட்டுவிட்டது. எனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறீர்கள் என்பதை இதன்மூலம் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக