வெள்ளி, 23 நவம்பர், 2018

புயல் பாதிப்பு .. மத்திய அரசின் கள்ள மௌனத்தை திசை திருப்ப பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை வன்முறை .. மாக்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி கடும் கண்டனம்


THE HINDU TAMIL< : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்றுத்தராமல் மத்திய அரசின்
பராமுகத்தை திசைத்திருப்ப பொன் ராதாகிருஷ்ணன் வன்முறையை தூண்டிவிடுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை: “கஜா புயலின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பொருளாகவும், பணமாகவும் நேரடி நிவாரணப்பணிகளிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை. ஏற்கெனவே, ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே சிதைந்து சின்னாபின்னமாகி மக்கள் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளானபோது இதே பொன்.ராதாகிருஷ்ணன் சொந்த தொகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மாறாக, வெளிநாடுகளில் சுற்றுலாப்பயணத்தை முடித்து பல நாட்கள் கழித்த பிறகே  திரும்பி வந்ததை குமரி மாவட்ட மக்கள் இன்றும் மறக்கவில்லை.

புயல் சேதப்பிரச்சனையில் மத்திய அரசின் பாராமுகத்தை திசை திருப்புவதற்காக மத்திய அமைச்சர் பக்தர் வேடத்தில் சபரி மலைக்குச் சென்று அங்கு அவர் அவமானபடுத்தப்பட்டதாகக் கூறி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக முழு அடைப்புப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
இதற்காக நேற்றைய தினமே அரசு பேருந்துகள் பலவற்றை பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு மத்திய அமைச்சர், மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல திசை திருப்பும் முயற்சியிலும், வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், நாகர்கோவில் நகரத்திலும், மார்த்தாண்டத்திலும் இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மார்த்தாண்டத்தில் மேம்பாலம் கட்டுமானப்பணி முடிந்து மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தில் மக்கள் மேலே சென்று பார்க்கின்றபோது மேம்பாலத்தில் அதிர்வு ஏற்பட்டு மக்கள் பீதியாகி ஓடி வந்து விட்டனர்.
மேம்பாலம் கட்டுமானப்பணியில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது கடுமையான கோபம் உள்ளது. இப்பிரச்னையை திசை திருப்புவதற்காகவும் பாஜகவினர் சபரிமலை பிரச்சனையை வைத்து நாடகமாடுகின்றனர் என்பதே உண்மை.
மத்திய அமைச்சரும், பாஜகவும் பந்த் என்கிற பெயரில் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதும் அதே வெறித்தனத்தோடு பேருந்துகளை அடித்து நொறுக்குவது, அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை சேதப்படுத்துவது போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையாளர்களை கைது செய்வதுடன், பேருந்து இயக்கத்தை மேற்கொள்வதற்கு மாறாக, அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும், காவல்துறை வன்முறையாளர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பதன் மூலம் பாஜகவின் வெறியாட்டத்திற்கு அதிமுக அரசு துணை போவதும் கண்டனத்திற்குரியதாகும்.
மத்திய அமைச்சர் என்கிற பொறுப்புணர்வோடு செயல்பட்டு இனிமேலாவது தமிழக மக்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற மத்திய அரசை வலியுறுத்தவும், மார்த்தாண்டம் மேம்பாலத்தை சரி செய்திடவுமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே அவரது கடமையாகும்.
மாறாக, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் மத்திய அமைச்சரின் நடவடிக்கைகள் எதிர்விளைவுகளையே உருவாக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.”
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக