சனி, 24 நவம்பர், 2018

இதயம் செயல் இழந்த பின்பு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி? ஆணையத்தின் கேள்வி.. அப்பல்லோ மருத்துவர் திணறல்

இதயம் செயல் இழந்த பின்பு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி? ஆணையத்தின் கேள்வியால் அப்பல்லோ மருத்துவர் திணறல்தினத்தந்தி :‘இதயம் செயல் இழந்த பின்பு, ஜெயலலிதாவுக்கு இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று அப்பல்லோ மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் மாணிக்கவேல், இதய நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயின் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.
ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதியான 22.9.2016 முதல் 25.10.2016 வரை அவருக்கு மூச்சுத்திணறல் தொடர்பாக எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே முடிவுகளை மருத்துவர் சுரேஷ் மாணிக்கவேல் ஆய்வு செய்துள்ளார்.


இதுதொடர்பாக ஆணையத்தின் வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் சுரேஷ் மாணிக்கவேல், ‘நான் ஜெயலலிதாவை நேரடியாக பார்க்கவில்லை. எக்ஸ்-ரே முடிவுகளை பார்த்தபோது அவருக்கு நுரையீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வெறும் 24 மணி நேரத்தில் கூட இதுபோன்ற நிலை ஏற்படலாம்’ என்று பதில் அளித்தார்.

இறப்பு சான்றிதழில் மூச்சுத்திணறல் காரணமாகவே (மாரடைப்பு) ஜெயலலிதா இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் அவர் இறக்கும் வரை மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை என்றால் சரிதானா? என்று ஆணையத்தின் வக்கீல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மருத்துவர் சுரேஷ், ‘இதுபோன்ற பிரச்சினை சரி செய்யப்படக்கூடியது தான். ஆனால், ஜெயலலிதாவுக்கு கடைசி வரை சரியாகவில்லை’ என்று கூறினார்.

மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயின், ‘4.12.2016 அன்று மாலை 5 மணிக்கு தான் ஜெயலலிதா இருந்த தீவிர சிகிச்சை பிரிவுக்கு என்னை அழைத்தனர். அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் இதயப்பகுதியில் மருத்துவர்கள் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட எக்கோ பரிசோதனை முடிவுகளை பார்த்து விட்டு நான் அறிக்கை அளித்தேன்’ என்று வாக்குமூலம் அளித்தார்.

அவர் அளித்த அறிக்கை ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘ஜெயலலிதாவுக்கு ரத்தத்தை இதயத்தில் இருந்து வெளியேற்றும் சக்தி 60 சதவீதம் இருந்தது. இதயத்தில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. மிகச்சிறப்பாக இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை சுட்டிக்காட்டி ஆணையத்தின் வக்கீல், ‘அன்றைய தினம் மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு இதய அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதயம் செயல் இழந்த பின்னர், ரத்தத்தை இதயத்தில் இருந்து வெளியேற்றும் சக்தி எப்படி 60 சதவீதம் இருந்திருக்க முடியும்’ என்று மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயினிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். மேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

யாரேனும் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயின் இதுபோன்று அறிக்கை அளித்தாரா? என்பது குறித்து ஆணையம் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக