வியாழன், 22 நவம்பர், 2018

சமூகநீதி காவலர் விபி சிங் தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் உணர்வால் தமிழரே.

Sumathi Vijayakumar : விஸ்வநாத் பிரதாப் சிங். திரைப்பட கதாநாயகன் பெயர்
போல் இருந்தாலும் இவர் நிஜ வாழ்வு கதாநாயகன். V P Singh என்றால் அனைவருக்கும் பரிச்சியம். அவருக்கு இன்னும் வேறு பெயர்களும் இருக்கின்றன. சமூகநீதி காவலர்.மண்டல் கமிஷன் நாயகன். சிறிய வயதில் இந்திய பிரதமர்கள் பற்றி அதிகம் தெரியாமல் இருந்த பொழுதும், முழுதாக ஒரு வருடம் கூட இல்லாத V P Singh யின் பெயர் மட்டும் தெரியும். எதனால் என்று அப்போது தெரியாது, இப்போது புரிகிறது. கூடவே அந்த சமயத்தில் பொது சுவர் எங்கிலும் 'மண்டல் கமிஷன்' என்கிற வாசகங்கள் எழுதி இருக்கும். அப்படி என்றால் என்ன என்று கேட்ட பொழுது எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஒரு வேலை விளக்கம் கிடைத்திருந்தாலும் அது எனக்கு புரிந்திருக்காது.

எங்கெல்லாம் ஒடுக்குமுறை நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கும். உண்மையான விடுதலை கிடைக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும். உலகில் ஒடுக்குமுறை கடைபிடிக்காத தேசங்கள் மிக குறைவு. எந்த வித ஒடுக்குமுறைக்கும் ஆளாகாத, எந்தவிதத்திலும் பிறரால் தாழ்வாக நடத்தப்படாத ஓர் மனிதர், தன் வசதி வாய்ப்புகளை துறந்து ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதெல்லாம் எங்கோ எப்போதோ தான் நடக்கும். இந்திய வரலாறில் அப்படி நடந்த, நடந்து கொண்ட ஒரு சில மனிதர்களில் சிங்கும் ஒருவர்.
சிலர் சொல்லும் ஆண்ட பரம்பரையை போல் அல்லாமல் நிஜமான ராஜ பரம்பரையில் பிறந்தவர். சிறிய வயதிலேயே வேறு ஒரு ராஜபரம்பரையை சேர்ந்தவருக்கு வாரிசு இல்லை என்று இவரை தத்து கொடுத்தார்கள் பெற்றோர்கள். சாதாரண குடும்பத்தில் தத்து பிள்ளையாய் போனாலே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ராஜபரம்பரை தத்து பிள்ளையின் நிலையை விளக்கவும் வேண்டுமா என்ன?
வினோபா பாவேவின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தன் பண்ணை வீட்டையும், அதனை சுற்றி இருந்த நிலங்களையும் ஏழைகளுக்கு கொடுத்தார். இதுவே அவரின் முதல் சமூக பணியாய் அமைந்தது. சிங் அதனுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சாலைகள் செப்பனிடும் பணியிலும், தான் கட்டிக்கொடுத்த பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்கு தானே பாடமும் எடுத்தார்.
காங்கிரஸ் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் இணைத்தார். மக்களுடன் மக்களாக மக்களுக்காக வாழ்ந்த VP சிங் மக்களின் நாயகனாய் விளங்கியதில் ஆச்சர்யம் இல்லை. எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். படிப்படியாக முன்னேறி இந்திரா காந்தியின் ஆட்சியில் துணை வர்த்தக துறை அமைச்சராகவும் பின்னர் இணை அமைச்சராகவும் இருந்தார். அவரின் நேர்மையும் அரசியல் சாதுர்யமும் மக்கள் செல்வாக்கும் அவரை உத்தரபிரதேசத்தின் முதல்வர் ஆக்கியது. உத்தரபிரதேசத்தில் பூலாந்தேவியல் நடந்து வந்த கொள்ளைகளை தடுப்பது தான் VP சிங்கின் தேர்தல் வாக்குறுதியாய் இருந்தது. அதற்காக அவர் பல கட்ட பேச்சுவார்த்தைகளும் முயற்சிகளும் எடுத்திருந்தார். எதிலும் திருப்தி அடையாத பூலாந்தேவி Behmai என்ற ஊரில் 22 பேரை கொலை செய்தார். மேலும் VP சிங்கின் தம்பியும் சுட்டு கொல்லப்பட்டார். தன் வாக்குறுதியை காப்பாற்ற முடியாததினாலும், தன் தம்பியை இழந்த காரணத்தினாலும் விபி சிங் பதவி விலகினார்.
இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் ஆட்சி அமைத்த ராஜிவ் காந்தி விபி சிங்கை நிதி துறை அமைச்சராக ஆக்கப்பட்டார். இந்தியாவின் கடுமையான நிதி பற்றாக்குறைக்கு பெரும் முதலாளிகள் தான் காரணம் என்பதை அறிந்த விபி சிங் எந்த வித தயக்கமும் இன்றி வருமானவரி சோதனைக்கு ஆணையிட்டார். இது இப்போதுள்ள மிரட்டல் சோதனை எல்லாம் இல்லை. நிஜமான நேர்மையான சோதனை. அவர் வருமானவரி சோதனைக்கு ஆணையிட்ட பட்டியலை பார்த்தாலே தெரியும். அதில் அம்பானியும், இந்திய சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் அடக்கம். விபி சிங்கின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கு தொழிலதிபர்களால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதில் இருந்து தப்பிக்க எண்ணிய ராஜிவ் காந்தி தனக்கான ஆப்பு என்பது தெரியாமல் விபி சிங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ஆக்கினார்.
இன்று rafale என்ற வார்த்தை எப்படி பிரபலமோ அதுபோல் அன்று Bofors பிரபலம். ஸ்வீடன் நாட்டுடன் பீரங்கி வாங்கும் ஒப்பந்தத்தில் ராஜிவ் அரசு செய்த முறைகேடுகளை வெளியே கொண்டு வந்தார் விபி சிங். தன் சொந்த கட்சியில் நடந்த ஊழலை வெளியில் கொண்டு வந்தார். இதற்கு மேல் என்ன நடந்தது என்று அனைவருக்கும் சொல்லாமலே தெரியும். அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியப்பட்டார் விபி சிங்.
காங்கிரஸில் இருந்து வெளியில் வந்த விபி சிங் ஜன் மோர்ச்சா என்ற புதிய கட்சியை துவங்கினார். பின்னர் இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். இதில் பிஜேபியும் அடக்கம்.மேலும் காங்கிரஸ் எதிர்ப்பு காட்சிகளை ஒன்றிணைத்து தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினார். இதில் திமுகவும் இடம் பெற்றிருந்தது. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் பிஜேபியின் ஆதரவுடன் விபி சிங் பிரதமர் ஆனார்.
நேர்மையின் மறுமுகமாய் விளங்கிய விபி சிங்கின் ஆட்சி ஏழைஎளிய மற்றும் ஒடுக்கப்பட்ட,பழங்குடி மக்களுக்கான ஆட்சியாய் அமைந்தது. பல திட்டங்களை விபி சிங் கொண்டு வந்திருந்தாலும் அவர் பெயர் இந்திய வரலாறில் என்றென்றும் நிலைத்திருக்க செய்த திடமாகிய மண்டல் கமிஷன் தான் சிறப்பு வாய்ந்தது. அதற்காக அவர் கொடுத்த விலையும் அதிகம்.
அதென்ன மண்டல் கமிஷன். SEBC - Socially and Educationally Backward Classes Commission தான் மண்டல் கமிஷன். BP மண்டல் என்பவரின் தலைமையில் அமைந்ததால் மண்டல் கமிஷன் என்று பெயர் பெற்றது. அதன் பரிந்துரை படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசாங்கத்திலும், பொது பனி துறைகளிலும் 27% ஐடா ஒதுக்கீட்டை அமுல் படுத்தினார். பெரியார், அம்பேத்கரின் கனவை நிஜமாக்குவதாக கூறினார். இதனை அடுத்து நாடெங்கிலும் கலவரங்கள் வெடித்தது.
அதனை தொடர்ந்து LK அத்வானியின் தலைமையில் ர(த்)த யாத்திரை நடந்தது. செல்லும் இடங்களெல்லாம் அமைதியை சீர்குலைத்து சென்று கொண்டிருந்த யாத்திரையை விபி சிங்கின் வேண்டுகோளுக்கு இணங்க பீகார் முதலமைச்சராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்தார். அதனால் ஆத்திரம் கொண்ட பிஜேபி ஜனதா தளத்திற்கான ஆதரவை வாபஸ் வாங்கியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் விபி சிங்கின் ஆட்சி கலைக்க பட்டது.
பின்பு அரசியலில் இருந்து விலகினார். ஆனால் மக்கள் பணியில் தொடர்ந்து செயல் பட்டார். Rss ஆல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நாடெங்கும் கலவரம் வெடித்தது. இதில் மதத்தின் பெயரால் பல அப்பாவி மக்களும் கொள்ள பட்டனர். அதனை எதிர்த்து விபி சிங் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தண்ணீர் கூட அருந்ததலினால் அவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்டது.இதனுடன் ரத்த புற்று நோயும் சேர்ந்து கொண்டது.
உலகமயமாக்கலின் அடுத்தகட்டமாக பழங்குடிகளின் நிலங்கள் அரசு துணையுடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. அதனை கண்ட விபி சிங் 'என் உடலில் மட்டும் வலுவிருந்தால் நானும் துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்ட் ஆகியிருப்பேன்' என்றார். அதன் பின் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட /பழங்குடி மக்களின் நிலங்களை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசிவந்தார். Dadriயில் விவசாய நிலங்களை அம்பானிக்கு கொடுத்ததை எதிர்த்து, காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி அம்பானிக்கு கொடுக்கப்பட்ட விவசாய நிலத்தில், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், தன் எதிர்ப்பை தெரிவிக்க ஏர் உழுதார்.
விபி சிங்கை இந்திய மக்கள் கொண்டாட மண்டல் கமிஷன் காரணமாக இருந்தாலும், தமிழகம் அவரை கொண்டாட பல காரணங்கள் இருக்கிறது. அவரது ஆட்சியின் பொழுதுதான் காவேரி நடுவர் மன்றம் அமைக்க பட்டது. ராஜிவ் காந்தியின் ஆட்சியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி படை, அங்கு செய்து அராஜகங்களால் அதை திருப்ப பெற வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு இணங்க அமைதி படையை திரும்ப பெற்றார் விபி சிங். காங்கிரெஸ்ஸை விட்டு வெளியில் வந்து தனி கட்சி துவங்கிய வித் சிங்கிற்கு முதல் வெற்றியை கொடுத்தது தமிழகம் தான். கலைஞர் - விபி சிங் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. விபி சிங் தனது இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த பொழுது தமிழகமே நான் நீ என்று தனது சிறுநீரகத்தை தர முன் வந்தது. அதனை மறுத்த விபி சிங் 'அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் தமிழனாய் பிறக்க வேண்டும் ' என்றார். மண்டல் கமிஸ்ஸியனை அமல் படுத்திய பொழுது நாடெங்கிலும் எதிர்பிருந்த பொழுதும் தமிழகம் மட்டும் அவரை போற்றி கொண்டிருந்தது. பிரதமர் பதவிவை துறந்த பொழுது கலைஞர் விபி சிங்கை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்து அவருக்கு உற்சாகத்தை அளித்தார்.
எப்படியும் வாழலாம் என்னும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் விபி சிங்.
'எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு'
நீங்கள் மத்திய அரசு வெளியிலோ அல்லது பொது பனி துறையிலோ வேலை செய்யும் பிற்படுத்தப்பட்டவராக இருந்தால் ஒவ்வொரு நாளும் விபி சிங்கிற்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள். குறைந்த பட்சம் அவரை உங்கள் குழந்தைகளுக்காவது அறிமுகப்படுத்துங்கள்.
சமூகநீதி காவலர் விபி சிங் தமிழகத்தில் பிறக்கவிட்டாலும் உணர்வால் தமிழரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக