புதன், 21 நவம்பர், 2018

சுவாதி நந்தீஷ் .. உயிரோடு ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த தந்தை ..கமலஹாசன் நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவார்கள் என்று தெரிந்தது

பெண்ணின் தந்தை சீனிவாசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் நான் அவமானம் அடைந்தேன். இதனால் நான் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டேன். கடந்த 10-ந் தேதி ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் வருவதாக அறிந்தேன். அவரை பார்ப்பதற்காக எப்படியும் நந்தீஸ், சுவாதி வருவார்கள் என அறிந்து கொண்டேன். இதனால் அங்கு வந்த அவர்களை எனது உறவினர்கள் மூலமாக நைசாக பேசி அழைத்து சென்றேன். பின்னர் ஆத்திரத்தில் அவர்களை அடித்து கொலை செய்தோம்.
காதல் திருமண தம்பதியை சித்ரவதை செய்து கொன்றனர்- ஆணவ கொலை பற்றி பரபரப்பு தகவல்தினத்தந்தி :காதல் திருமணம் செய்த நந்தீஸ் - சுவாதியை பெற்றோர்கள் ஆணவ கொலை என்ற பேரில் மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஓசூர்: பெற்ற பிள்ளையா? சாதியா? என்றால் சாதிதான் முக்கியம் என்று சொல்லும் அளவுக்கு மனிதர்கள் மாறி வருவது வேதனையானது. இதனால்தான் ஆணவ கொலைகள் செய்யும் அளவுக்கு கொடூரர்களாக மாறி வருகிறார்கள். ஓசூர் காதல் தம்பதியை பெற்ற தந்தையே சித்ரவதை செய்து கொன்ற கொடூரம் நெஞ்சை பதற வைக்கிறது. ஓசூர் அருகே உள்ள சூடு கொண்ட பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவருக்கு 2 மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அடுத்த மகள் சுவாதி பி.காம் படித்தார். தம்பி பிளஸ்-1 படித்து வருகிறார்.


அதே ஊரை சேர்ந்த நந்தீஸ் (25) என்பவர் ஓசூரில் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. மனிதர்கள் சந்திக்கும் போது நட்பு, காதல், மரியாதை என்று ஏதாவது ஒரு ‘கெமிஸ்டிரி’ உருவாகும். அதற்கும் சாதிக்கும் சம்பந்தம் இல்லை.

அப்படித்தான் நந்தீஸ்- சுவாதி இடையே காதல் உருவாகி இருக்கிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களின் காதலுக்கு சுவாதி வீட்டார் சிவப்பு கொடி காட்டி இருக்கிறார்கள். எதிர்ப்பை மீறி அவர்கள் தங்கள் காதலை வளர்த்து இருக்கிறார்கள்.

கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி சுவாதி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சேர்ந்து இருக்கிறார். இருவரும் சூளகிரி திம்மராய சுவாமி கோவிலில் சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

சுவாதி ஓடிப்போய் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தந்தை சீனிவாசன் மற்றும் உறவினர்கள் அவமானம் அடைந்தனர். இளைய மகள் ஓடிப்போனதால் மூத்த மகள் திருமணம் தடைபடும். சமூகத்தில் தலைக்குனிவு ஏற்படுமே என்று சீனிவாசன் ஆத்திரத்தில் கொந்தளித்தார்.

இதனால் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று கருதி நந்தீஸ் வேலை பார்த்து வந்த கடையின் மேல் தளத்திலேயே வீடு வாடகைக்கு எடுத்து தனது காதல் மனைவியை குடியமர்த்தி இருக்கிறார்.

பெற்றோருக்கு பயந்து காதல் ஜோடியினர் வாழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பெற்றோர் வீடு தேடிவந்து சமாதானம் பேசி இருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளைக்கு தங்க மோதிரமும் பரிசு வழங்கி இருக்கிறார்கள்.

பெற்றோர் மனம் மாறிவிட்டனர் என்று மகிழ்ந்த சுவாதியும் அவரது கணவர் நந்தீசும் அவர்களுடன் காரில் சென்று இருக்கிறார்கள்.

காரில் உறவினர் வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட்ராஜ் ஆகியோர் இருந்திருக்கிறாரகள். டிரைவர் சாமிநாதன் காரை ஓட்டி இருக்கிறார்.

கார் சூடுகொண்டா பள்ளிக்கு செல்வதற்கு பதில் கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்று இருக்கிறது. அதைபார்த்ததும் சுவாதி தந்தையிடம் கேட்டுள்ளார்.

உடனே அவர் அமைதியாக இரு என்று சத்தம் போட்டு இருக்கிறார். ஏதோ நடக்கப்போகிறது என்பதை புரிந்துகொண்ட இருவரும் பயந்து நடுங்கி இருக்கிறார்கள்.

மாண்டியா மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் காரை விட்டு இருவரையும் இறக்கி பிரிந்து விடும்படி மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் இருவ்ரும் அதற்கு சம்மதிக்கவில்லை.

சரிபட்டு வரமாட்டார்கள் என்று ஆவேசம் அடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் இருவரது கை, கால்களையும் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள்.

காரில் தயாராக இருந்த அரிவாள், கத்தியை எடுத்து வந்து மிரட்டி இருக்கிறார்கள். பளபளத்த அரிவாள், கத்தியுடன் நிற்பதை பார்த்ததும் நம்மை பலிகொடுத்து விடுவார்கள் என்று பயத்தில் உறைந்தபோன காதல் ஜோடி உயிருடன் விட்டு விடும்படி கெஞ்சி இருக்கிறது.

கை, கால்களில் அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். சிறுக சிறுக சித்ரவதை செய்து இருவரையும் கொன்று இருக்கிறார்கள்.

அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. சுவாதியின் அடிவயிற்றையும் அரிவாளால் வெட்டி சிதைத்து இருக்கிறார்கள். தலையை மொட்டை அடித்து முகத்தையும் சிதைத்து இருவரது உடல்களையும் ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்கள். நந்தீசையும் அவரது மனைவியையும் காணவில்லை என்றதும் நந்தீசின் தம்பி சங்கர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.

தமிழகத்தில் போலீசார் தேடிக்கொண்டிருந்தபோது மாண்டியா மாவட்டத்தில் ஆற்றில் கிடந்த சடலங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. போலீசார் விசாரித்தபோது நந்தீஸ்-சுவாதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடிவருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக