புதன், 14 நவம்பர், 2018

மீண்டும் அரசு அமைக்கும் ரனில்

இலங்கை: மீண்டும் அரசு அமைக்கும் ரனில்minnambalam ; இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (நவம்பர் 14) ராஜபக்‌ஷே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதையடுத்து ராஜபக்‌ஷேவால் பிரதமர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றியும், அதன் முடிவுகள் பற்றியும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு முறைப்படி அனுப்பி வைத்துவிட்டார். இதை இலங்கை சபாநாயகர் அலுவலகத்தின் ஊடகப் பிரி்வு அறிவித்துள்ளது.
“நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் நகலையும், அதில் 122 பேர் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராகக் கையெழுத்திட்ட ஆவணங்களையும் அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் அனுப்பியிருக்கிறார்.
இதன் மூலம் அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்‌ஷே அவரது அமைச்சரவை சட்டவிரோதமானது என்று நாடாளுமன்றம் முடிவெடுத்திருக்கிறது. எனவே இந்தத் தீர்மானம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சபாநாயகர் அலுவலக ஊடகக் குறிப்பு தெரிவிக்கிறது.
இது தொடர்பாக ரனில் விக்ரசிங்கே இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “அக்டோபர் 26 ஆம் தேதிக்கு முந்தைய ஜனநாயக பூர்வமான அரசாங்கத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இருக்கிறோம். அனைத்து அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன். பெரும்பான்மை இழந்த சட்டவிரோதமான அரசின் எந்த உத்தரவுகளையும் செயல்படுத்தாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூட இருக்கும் நிலையில், சபாநாயகரின் கடிதம் மீது அதிபர் என்ன முடிவெடுக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக