புதன், 21 நவம்பர், 2018

பிடிபி, காங்கிரஸ், என்.சி.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சி

பிடிபி, காங்கிரஸ், என்.சி.பி ஆகிய  கட்சிகள் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சிதினத்தந்தி : பிடிபி, காங்கிரஸ், என்.சி.பி கட்சிகள் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியிலிருந்த மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி திரும்ப பெற்றது. இதனால், பிடிபி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. மாநில சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் மாலிக் முடக்கி வைத்தார்.  ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு வரும் டிசம்பர் மாதம் 19-ஆம் தேதியுடன் 6 மாதங்கள் ஆகின்றன. இதன்பின்னர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த முடியாது என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் 2 எம்எல்ஏக்களை கொண்ட சஜத் லோனேயின் மக்கள் மாநாட்டு கட்சி தலைமையில் புதிய அரசமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதன்படி, மக்கள் மாநாட்டு கட்சிக்கு இருக்கும் 2 எம்எல்ஏக்கள், பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் ஆகியோரை சேர்த்தால், மொத்தம் 27 எம்எல்ஏக்களின் பலம் வருகிறது. அதேநேரத்தில், 87 உறுப்பினர்களைக்கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் பெற 44 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாகும். இதற்கு ஏதுவாக, மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து சில எம்எல்ஏக்கள் விலகி, இக்கூட்டணியில் இணையலாம் என தகவல்கள் பரவின.

இந்த சூழலில், புதிய அரசமைக்கும் பாஜகவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், காஷ்மீரில் மீண்டும் பாஜக ஆதரவு அரசு அமைவதை தடுக்கும் நோக்கிலும் , பிடிபி, காங்கிரஸ், என்.சி. ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவுகின்றன.

சட்டப் பேரவையில் பிடிபிக்கு தற்போது 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர, தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரஸுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரின் எண்ணிக்கையையும் சேர்த்தால், மொத்தம் 55 எம்எல்ஏக்கள் வருகிறது. இதன்படி பார்த்தால், ஆட்சியமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்கள் ஆதரவை விட கூடுதலாகவே இக்கூட்டணிக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். இதே கூட்டணி, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2002-2007ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக