சனி, 3 நவம்பர், 2018

பாலைவனத்தில் எப்படி கப்பல் வந்தது? ஒரு கடலேரி காய்ந்தது .. காப்பரெட் கைங்கரியம்

Image may contain: outdoor Sundar P : கார்த்திக் முத்தையா
நேற்று நேஷனல் ஜியாகரபிக் வைல்ட் சேனலில், அவலமிக்க ஓர் ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.
முதலில் உஸ்பெகிஸ்தான் நாட்டைக் காட்டினார்கள்.
கடுமையான வறட்சியில் இருக்கும் ஒரு பெரும் பாலைவனம். வெண்மணல்திட்டுக்கள். சிறுவர்கள் அம்மணல் திட்டுகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
காமெரா அப்படியே கழுகு பறக்கும் உயரத்துக்குப் போகிறது. அடடா உஸ்பெகிஸ்தானின் சகாரா போல என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, சரேலென பாலைவனத்தில் இருந்த சில குவியலான பொருட்கள் மீது காமிராக் கோணம் குவிக்கப்பட்டு இறங்கியது.
அவையெல்லாம் ஓட்டை ஒடிசலான துருப்பிடித்துப் போயிருந்த பெரிய பெரிய படகுகள்.
பாலைவனத்தில் ஏது படகுகள் ?
ஆய்வாளர் அப்போதுதான் சொல்கிறார், இது மாபெரும் ஏரியாய் இருந்த இடம்.
என்ன? பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா என்கிறீர்களா ?
இல்லை.... வெறும் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர்கள் பரந்து, ஒரு கடல் போல் இருந்த ஏரி இது.

இதோ இந்த உடைசல் படகுகளில் ஆண்டுக்கு பத்தாயிரம் டன்கள் மீன்கள் பிடித்துக்கொண்டிருந்த இடம் இது.
இந்த ஏரி முற்றிலும் வறண்டு விட்டதா என்ன ?
இல்லை இப்போதும் இந்த ஏரியில் நீர் இருக்கத்தான் செய்கிறது ? அதைத் தேடித்தான் போகப் போகிறோம் என்றபடி அந்த வறண்ட பாலைவனத்தையொட்டி இருந்த ஒரு சாலையில் ஒரு காரில் பயணிக்கிறார்கள் ஆவணப்படக் குழுவினர்.
இதோ, இந்த இடத்தைப் படம்பிடிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. இங்கு கேமராவை எடுத்து வருவதே ராஜத்துரோகம். இது தடை செய்யப்பட்ட பகுதி.
ஆனால் ஆளரவமற்ற இப்பகுதியில் நாம் துணிந்து இந்த ஏரிக்கு என்னதான் ஆயிற்று எனப் பார்க்கப் போகிறோம்.
ஒரு இங்கிலாந்து போன்ற பரப்பளவு கொண்ட இந்த ஏரியை இப்படி வற்ற வைக்க பல ஆயிரம் ஆண்டுகள் தேவை. ஆனால் 40 வருடங்களுக்குள் எப்படி சாத்தியமானது ?
உஸ்பெகிஸ்தான் போன்ற ஏழை நாடுகளில் எல்லாம் சாத்தியம். ரஷ்யா போன்ற அதிகார பலமும் ஆணவமுமிக்க நாடுகள் நினைத்தால் தம் வசதிக்காக எந்த இயற்கையையும் அழிக்கத் தயங்காத மாஃபியாக்கள். இதோ இங்கு பாருங்கள். இதுதான் மூல காரணம்.
அங்கு பச்சை பசேலென்று பல ஹெக்டேர்கள் கணக்கில் பருத்தித் தோட்டம். சொட்டு நீர்ப்பாசன முறையில் பல லட்சப் பைப் இணைப்புகள். விச்சுக் விச்சுக் விச்சுக் என்று சுழன்று நீரை பல மீட்டர் உயரத்துக்குக் கொட்டி பருத்தியை அமோகமாக அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறியவாறே செடியிலிருந்து பருத்தியிலிருந்த பஞ்சை பிதுக்கிக் காட்டுகிறார் ஆவண ஆசிரியர்.
கடல் போல் பரந்து விரிந்திருந்த ஏரியைக் கண்டதும் ரஷ்யா உஸ்பெகிஸ்தானின் அப்பகுதியை மொத்தமாய் ஆக்கிரமித்து
(சோவியத் யூனியனின் ராட்சஸ ராணுவத்தை எவர்தான் எதிர்க்க முடியும் ?)
ஏரி நீர், பல புது கால்வாய்களை நிர்மாணித்து அதன் வழியே வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து விவசாயத்திற்காக……… இப் பருத்திக்காக அனுப்பப்படுகிறது. ஏரிக்குள் பல இடங்களில் புதிதாகச் சிறு சிறு தடுப்பணைகள் வேறு கட்டுகிறார்கள்.
பல லட்ச வருடங்களாய் இருந்த ஏரிக்குள் திடுமென இத்தனை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, நீரோட்ட முறைகளை, நீர் வரும் வழிகளையெல்லாம் குதறியபின், வெகுவாய் வெளியேறிய நீர், திரும்ப வருவது குறைந்துக் கொண்டே போகிறது.
நீர் குறையக் குறைய, நீரின் சுத்தத் தன்மையும் மாறுகிறது. சுவையான நன்னீர், உப்பு நீராக மாறுகிறது.
இயற்கை மாறுதல்களால் அந்தப் பகுதியில் எல்லா தாவரங்களும், விலங்குகளும், மீனினங்களும் மடிகின்றன.
தொடர்ந்து மழை பொய்க்கிறது.
மழை பொய்க்க பொய்க்க, வெப்பம் உயர்ந்து, உப்பு நீரை வேகமாக ஆவியாக்கி ஏரி பாலைவனமாக, உப்பு படிந்த வெண்மை பாலைவனமாக மாறிவிட்டது.
மாபெரும் வெட்டவெளி... ஆனால் செடி கொடி கிடையாது என்பதால் தடுக்க ஏதுமேயின்றி படு வேகமான காற்று வீசுகிறது. அருகிலிருக்கும் ஊர்களுக்கெல்லாம் இந்த உப்பு மண் வீசியடித்து சுற்றுச் சூழலை முழுவதுமாக கெடுத்துவிடுகிறது காற்று.
சரி, அந்த மிச்ச ஏரி எங்கே ?
அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட 160 கிலோ மீட்ட்ர்கள் தள்ளி அந்த ஏரி தென்படுகிறது. அதுவே நீல நிறத்தில் வங்காள விரிகுடா போல காட்சியளிக்கிறது.
ஆமாம், உஸ்பெகிஸ்தான் போன்ற, பங்களாதேஷ் போன்ற, இந்தியா போன்ற கேட்க நாதியில்லாத ஏழை நாடென்றால் வல்லரசுகள் இப்படி நடந்துக் கொள்வது இப்போதைய கார்ப்பரேட் மாஃபியா உலகில் சகஜம்தான் என ஆவண இயக்குனர் ஆறுதல் சொல்கிறார்.
ஆசிரியர்,, “அப்படியா ? சரி வாங்க பணக்கார அமெரிக்காவின் நைல் கொலரெடா ஆறுக்கு போவோம்” என்கிறார்.
கொலரடா ஆறு பல அமெரிக்க மாநிலங்களுக்கு குடிநீர் மின்சார ஆதாரமாக இருக்கிறது. லாங் ஜூமில் அந்த ஆறைக் காட்டும்போது நம் கங்கையை விட, பிரம்மபுத்திராவை விட பல மடங்கு பெரிதாக தெரிகிறது.
அங்கே லாஸ்வேகாஸ் அருகே கொலரடாவில் ஒரு மாபெரும் அணையைக் காட்டுகிறார்கள். நம்ம மேட்டுர் அணையைக்காட்டிலும் பத்திருபது மடங்கு பெரியதாய் இருக்கக்கூடும், அவ்வளவு பயங்கர உயரம். அவ்வளவு பிரம்மாண்ட ஆறு அந்த அணைக்கருகே ஒரு பெரிய ஓடையைப் போல் ஆகி விடுகிறது. அணையைத் தாண்டி வரும் நீரையும் பல நகர்களுக்கென பிரித்துக்கொள்கிறார்கள்.
இருந்தும் அது பெரிய ஆறு என்பதால், இத்தனையையும் மீறி, மீறி குறுகிக் கொண்டே ஆனால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
அமெரிக்க பயணம் முடிந்து, மெக்ஸிகோ அருகே வரும்போது, வைகை ஆறு போல் ஒடுங்கி பரிதாபமாக காட்சியளிக்கிறது.
அதைவிட பரிதாபமாய் அந்த ஆற்றுக்கு ஒரு சிற்றணை. ஆம் இது மெக்ஸிகோ. அமெரிக்கா அல்லவே ?
அந்த அணையைத் தாண்டியபின், அந்தப் பேராறு முக்கி, முனகி தவழும் கோரக்காட்சியைப் பார்த்து ஆவணப்பட இயக்குனர் , ஆசிரியருக்கு கண்கள் கலங்குகிறது.
ஆரம்பத்தில் சிறிய விமானத்தில் பறக்குமளவு பிரம்மாண்டமாய் ஓடும் ஆற்றை, , அமெரிக்காவின் ராட்சத அணையைத் தொட்டபின், பெரிய துடுப்புப் படகில் பயணிக்கிறார்கள்.
மெக்ஸிகோவுக்கு பின் அந்தத் துடுப்புப்படகு தரைதட்ட, இலகுவான மிதவையில் பயணிக்கிறார்கள். இந்த ஆறு கடலில் போய்க் கலக்குமிடம் வரை போய்ப்பார்ப்பது என்பது அவர்களின் இலக்கு.
ம்க்கும், கொஞ்ச நேரத்திலேயே அந்த மிதவையும் தரையில் மோதுகிறது.
பலவீனமாகச் சிரித்தபடியே வாழ்ந்து கெட்ட அந்த ஆற்றில், மிதவையை கையால் இழுத்துக்கொண்டே நடக்கிறார்க்ள்.
சொம்பு கவிழ்ந்து நீர் ஓடுவதைப் போல் ஓரிடத்தில் அதன் நெடும்பயணம் முடிவுறுகிறது.
ஐயோ.... இன்னும் கொஞ்சம் தூரம் ஓடினால் போதுமே ஆறுகளின் புகுந்த வீடு வந்துவிடுமே, அங்கு போய்க் கலப்பதுதானே முறை. இது இப்படி உருண்டோடினால் எப்போது கடலுக்குப் போவது ?
பெரிய தூரமில்லை இன்னும் 136 கிலோ மீட்டர்கள் பயணித்தால் இந்த ஆறு கடலை அடைந்துவிடும் என்று அணுகுண்டை வீசுகிறார் இயக்குனர்.
அந்தோ 60 லட்ச வருடங்களாய் இந்த மண்ணில், தன் வழிப்பாதையில் ஒரு பேரரசனாய் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு, தன் இலக்கை 136 கிலோ மீட்டர்களுக்கு முன்னாலேயே துவண்டு, பரிதாபமாய் தத்திக் கொண்டிருக்கிறது.
ஓர் ஆறு, இப்படி தன் இலக்கை இழந்து, வாடினால் இதை நம்பியிருக்கும் ஆற்றின் முகத்துவார ஜீவன்கள், பறவைகள், காடுகள், ஊர்களின் கதி ???
அதோகதிதான்.
கடும் மோசமான விளைவுகள் உண்டாகும். வறட்சி பரவும். ஆறுபடாத மண் கெடும். கடலின் உப்புத்தன்மை கடுமையாக அதிகரிக்கும், இதனால் காற்று மாசுபடும். சுற்றுச் சூழல் பெரிதும் குலையும்.
சரி இப்ப எதுக்கு நமக்கு இந்தப் ஃபாரின் கதைகள் ???
நம் மண்ணில் தாமிரபரணி வேண்டுமானால் தன் புகுந்த வீடு போகும் என நினைக்கிறேன்
அதைவிட பெரிய ஆறான காவிரி கூட தன் புகுந்த வீடு போகும் முன் சாக்கடையாக தேங்கிக் கிடக்கும் அவலத்தை நீங்கள் வரலாற்று நகரமான பூம்புகார் போனால் பார்க்கலாம். காவிரி கடலில் கலப்பது சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நிகழும் அரிய காட்சி
காவிரிக்கே இக் கதியெனில் வைகை, பாலாறு, தென்பெண்ணை, வடபெண்ணை, குசஸ்தலை…….
சரிதான் இதெல்லாம் ஆறுகளா ? இல்லை மணல் வியாபாரக் கேந்திரங்களா ? ஒருவேளை நாளை மழையே பொழிந்தாலும் மணல் இல்லாமல் ஆறு அப்படியே ஓடிப்பாய்ந்து விடப்போகிறது ?
ஆனால், அமெரிக்கா கொஞ்சூண்டு மனிதாபிமானத்தை இந்த ஆவணப்பட ஆளுமைகளிடம் காட்டியது. அவர்கள் நாடு என்பதால்.
அணையில் நீரின் உபயோகம் அவ்வளவாக தேவைப்படாத சமயங்களில் ராட்சத குழாய்கள் வழியாக ஊழிக்கால பெருவெள்ளம் போல தண்ணீரைத் திறந்துவிடுகிறது. இது ஓடாத இடங்களின் கசடுகளை அடித்து நீக்கி, சில சமயங்களிலாவது கடலில் போய்க் கலக்க உதவுகிறது.
- இராஜ ராஜன்
Saravanan Thangappa அவர்களின் முகப்பில் இருந்து....
பங்கு Elango Manickam வழியாக

LikeShow more reactions
Comment
Comments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக