வியாழன், 1 நவம்பர், 2018

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக முடிவா?.. மத்திய அரசுடன் மோதல் எதிரொலி

மாலைலமலர் : மத்திய அரசுடனான மோதல்
மத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக முடிவா?
போக்கினால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுடெல்லி: ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. கடந்த வாரம் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,  ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் வி. ஆச்சார்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு விளையாட நினைத்தால், அது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.< இதற்கு பதிலடி தருகிற வகையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். அப்போது அவர், ரிசர்வ் வங்கியை கடுமையாக சாடினார். குறிப்பாக, “2008-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு வரையில் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு வங்கிகள் கண்மூடித்தனமாக கடன் களை வழங்குமாறு (ரிசர்வ் வங்கியால்) கூறப்பட்டன.

அப்போதைய மத்திய அரசு மற்றொரு பக்கம், வங்கிகள் இன்னொரு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையில் இருந்த ரிசர்வ் வங்கி அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது? அவர்கள் உண்மையை கம்பளியின் கீழ் வைத்து மறைத்து விட்டார்கள்” என்று சாடினார்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சட்டப்பிரிவானது, பொது நலனை கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி, உத்தரவுகளை பிறப்பிக்க வழி வகுத்துள்ளது.

இப்படி மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்தால், அதை ஏற்று செயல்படுத்துவதை விட ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக முடிவு எடுத்து விடுவார் என தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “தகவல்கள் வெளியானபடி, ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ மத்திய அரசு நடைமுறைப்படுத்தி, இதுவரை இல்லாத வகையில் சில உத்தரவுகளை ரிசர்வ் வங்கிக்கு பிறப்பித்துள்ளது. இன்று (நேற்று) இன்னும் சில மோசமான செய்திகள் வரக்கூடும் என பயப்படுகிறேன். 1991 அல்லது 1997 அல்லது 2008 அல்லது 2013 ஆண்டுகளில் நாங்கள் ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது அதை பயன்படுத்த என்ன அவசியம் ஏற்பட்டது? பொருளாதாரம் பற்றி உண்மைகளை மத்திய அரசு மறைத்து வருகிறது, இது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது” என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ன் கீழ், ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளனவா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரிசர்வ் வங்கி சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு, மத்திய வங்கிக்கு (ரிசர்வ் வங்கிக்கு) அவசியமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்னாட்சி தேவை. இந்தியாவில் இருந்த அரசுகள், இதை வளர்த்து வந்துள்ளன. மதித்து வந்துள்ளன.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தங்கள் செயல்பாட்டில் பொதுநலன் கருதியும், இந்திய பொருளாதார தேவைகளின் அடிப்படையிலும் வழிநடத்தப்பட வேண்டும்.

இந்த நோக்கத்துக்காக, பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.

இந்த ஆலோசனைகள் குறித்து இதுவரை பகிரங்கமாக தெரிவித்தது கிடையாது. இறுதி முடிவுகள் மட்டுமே தெரியப்படுத்தப்படுகின்றன. இந்த ஆலோசனைகள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை அளவிடுகிறது. அதன்பேரில் சாத்தியமாகக் கூடிய தீர்வுகளை எடுக்குமாறு கூறுகிறது. அதை அரசு தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு 7-ஐ பயன்படுத்தி, கடந்த சில வாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 3 தனித்தனி கடிதங்கள் எழுதி இருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக