சனி, 24 நவம்பர், 2018

BBC :ஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்டர் அமேசான் மழைக்காடுகள்


பூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன.
ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரப்பளவு தோராயமாக லண்டன் நகரைப் போல ஐந்து மடங்காகும். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதே இதற்குக் காரணம் என பிரேசில் சுற்றுக்சூழல் அமைச்சர் எட்சன் துவார்த்தே கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற சயீர் பொல்சனாரூ, மரங்கள் வெட்டப்படுவதற்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையையும், அரசு சுற்றுச்சூழல் அமைப்புகளின் அதிகாரத்தையும் குறைப்பதாக உறுதி அளித்திருந்த்தார். >அவரது நெருங்கிய சகா ஒருவர் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று கூறியிருந்தார். இது அமேசான் மழைக்காடுகளுக்கு ஆபத்தான முடிவு என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கூறியிருந்தனர்.
மாடோ கிராசோ மற்றும் பாரா ஆகிய மாகாணங்களில் காடுகள் அழிப்பு கடந்த ஆண்டைவிட 13.7% அதிகரித்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாடோ கிராசோ மாகாணம் பிரேசிலிலேயே அதிக தானிய உற்பத்தி செய்யும் மாகாணமாகும். அங்கு வேளாண்மை நடவடிக்கைகளை விரிவாக்குவது அமேசான் காடுகளை அழிக்க வழிவகுக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
    செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் பிரேசில் அரசு சமீபத்திய தகவல்களை சேகரித்தது.
    பிரேசிலில் காடுகள் அழிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை 2004ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டைவிட காடுகள் அழிக்கப்படும் விகிதம் அதிகமாக இருந்தாலும், 2004ஆம் ஆண்டைவிட தற்போது 72% காடுகள் அழிக்கப்படுவது குறைவாகவே உள்ளது.
    1965இல் இயற்றப்பட்ட சட்டம் ஒன்றின்படி வேளாண் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை காடுகளாகவே வைத்திருக்க வேண்டும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக