வெள்ளி, 2 நவம்பர், 2018

வைகுண்ட ராஜன் (விவி மினரல்ஸ்-நியூஸ் 7 ) நிதி கொடுத்ததாரா? தினகரன் மறுப்பு!


மின்னம்பலம்: விவி மினரல்ஸ் நிறுவனம் தனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாகப்
பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “பொய் தகவலைப் பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவி மினரல்ஸ் நிதி கொடுத்ததா? தினகரன் மறுப்பு!தமிழகத்தின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான வைகுண்டராஜனுக்குச் சொந்தமாக நெல்லை மாவட்டம் திசையன்விளையைத் தலைமையிடமாக கொண்டு விவி மினரல்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் திசையன்விளை, சென்னையில் எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள விவி மினரல்ஸுக்குச் சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்திவந்தனர்.
சோதனை நேற்றுடன் (நவம்பர் 1) நிறைவடைந்த நிலையில் விவி மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், சோதனையின்போது கணக்கில் வராத எட்டு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.


வைகுண்டராஜன் - தினகரன் நெருக்கம்தான் விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நாம் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, ‘ரெய்டுக்குக் காரணம்: விவி - டிடிவி நெருக்கம்?’ என்ற தலைப்பில் விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ஆர்கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில் விவி மினரல்ஸ் நிறுவனம், தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் வருமான வரி சோதனையின்போது சிக்கியிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது, விவி மினரல்ஸ் நிறுவனம் எனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய பொய்யான தகவலைப் பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக