ஞாயிறு, 25 நவம்பர், 2018

குழந்தைகளின் சத்துணவு முட்டையில் 2400 கோடி ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் .. ஸ்டாலின்

மின்னம்பலம் : சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத்
தொடர்புடைய அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் தெரியவந்தது. சத்துணவுத் திட்டத்துக்குப் பொருட்கள் விநியோகம் செய்துவந்த கிறிஸ்டி பிரைடுகிராம் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரிச் சோதனையில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “கமிஷன், கலெக் ஷன், கரெப்ஷன்” என்று மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது துறை வாரியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
வருமான வரித் துறை சோதனையில், லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. லஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
மணல் மாஃபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் துறையான நெடுஞ்சாலைத் துறை ஊழல் என பல ஊழல் புகார்களை சுட்டிக்காட்டியுள்ள, ஸ்டாலின் ”குட்கா வழக்கில் வருமான வரித் துறையும், சிபிஐயும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தினாலும் “குட்கா” டைரியில் மாமூல் வாங்கியதாக பதிவுகள் இடம்பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, தமிழக டிஜிபி மீதோ இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பாஜக அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
”இந்த வருமான வரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன? ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பாஜக அரசின் முயற்சியா?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அதிமுக அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பாஜக அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின் .2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக