வெள்ளி, 16 நவம்பர், 2018

தமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது

தமிழகத்தில் கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததுமாலைமலர் : தமிழகத்தில் பல மாவட்டங்களை பதம்பார்த்த கஜா புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது.
அதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின் முன் பகுதி தமிழக கடலோரத்தை தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்க தொடங்கியது. வேதாரண்யத்துக்கும் நாகைக்கும் இடையே புயல் கரையை கடந்தது.
புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதியான கண் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது.


இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் புயலின் மையப் பகுதி கடலோரத்தில் இருந்து கடந்தது. புயலின் கடைசி பகுதி கரையைக் கடப்பதற்கு காலை 6 மணி வரை ஆனது. இந்த இடைப்பட்ட சுமார் 5.30 மணி நேரத்தில் சூறாவளி காற்று தாக்கு பிடிக்க முடியாதபடி இருந்தது.


கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

குறிப்பாக நாகை மாவட்டம் கஜா புயலால் கடும் நாசத்தை சந்தித்துள்ளது. அங்கு மின்சாரம் சீராகி, மக்களின் இயல்பு நிலை திரும்ப குறைந்தது 2 நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

கஜா புயலின் சீற்றத்துக்கு 18 பேர் பலியாகி விட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அய்யம்மாள் (32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொல்லையில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு படுத்திருந்த சதீஷ் (22), ரமேஷ் (21), தினேஷ் (19) மற்றும் இவர்களின் உறவினர் அய்யாதுரை (19) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். 4 பேர் உடலையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வடமனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி மகள் பிரியதர்ஷினி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 7 மணி முதல் கஜா புயல் காரணமாக மழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடி பாடுகளுக்குள் அனைவரும் சிக்கினர். சுவர் மேல் விழுந்ததில் துளசியின் 2-வது மகள் பிரியாமணி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 50), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தார்.

அறந்தாங்கி பகுதியில் ‘கஜா’ புயலால் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் காசிநாதன் வசித்த கூரை வீட்டின் அருகே இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்து அமுக்கியது.

இதில் வீட்டிற்கு இருந்த காசிநாதன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 36). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு ரெங்கநாதன் வேலை முடிந்து நெய்வேலியில் இருந்து பாப்பன் குப்பத்துக்கு தனது மோட் டார் சைக்கிளில் புறப்பட்டார்.

மருங்கூர் அருகே வந்தபோது கஜா புயல் காற்றால் சாலையோரம் இருந்த வேப்பமரம் ஒன்று ரெங்கநாதன் மீது சாய்ந்து விழுந்தது. இதில் ரெங்கநாதன் மோட்டார் சைக்கிளுடன் வேப்ப மரத்தின் இடிபாடுக்குள் சிக்கி கொண்டார். சிறிது நேரத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பலத்த புயல் மற்றும் மழை காரணமாக பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கஜா புயலால் ஏற்பட்ட இடி மின்னல் மழைக்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் இரவில் கஜா புயல் சீற்றத்தால் மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில், ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேராவூரணியை அடுத்த தென்னமங்குடியை சேர்ந்தவர் வள்ளி (65). இவர் அப்பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கஜா புயல் காற்றால் கூரை வீடு சரிந்து அவர் மீது விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி கனகவள்ளி (வயது 48).

நேற்றிரவு கஜா புயல் காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வீட்டு அருகே உள்ள மரம் முறிந்து விழுந்ததில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மனைவி பரமேஸ்வரி (வயது 26). இவர் நேற்று இரவு வீட்டின் மாடி அறையில் குடும்பத்தினருடன் தூங்கினார். இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

இன்று காலை மாடியின் கைப்பிடிச்சுவரை பிடித்தவாறு கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பரமேஸ்வரி மீள முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு மரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னாத்தாள் (வயது 70). இவர் இன்று காலை வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.

இதில் சின்னாத்தாள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52), விவசாயி.

நேற்று நள்ளிரவு கஜா புயலால் அப்பகுதியில் ஏராளமான மரங்கள் விழுந்ததால் பழனிவேல் வீட்டில் இருந்தார்.

இன்று காலை அவர் தன் வீட்டின் முன்னால் மரங்கள் விழுந்து கிடப்பதையும் கூரை வீடுகள் சேதமாகி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, கருப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி எலிசபெத் ராணி (வயது 35). நெற்குப்பை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார்.

திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மழைநீர் வீட்டுக்குள் ஒழுகும் என்று கருதிய எலிசபெத்ராணி, இன்று அதிகாலை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது வீசிய சூறாவளி காற்றில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து எலிசபெத் ராணி மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி பண்டாரஓடையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 72). இவர் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று இரவு புயல் காரணமாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டின் முன்பு நின்ற தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம கிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி மேலும் 5 பேர் உயிரிழந்ததால் கஜா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக