வெள்ளி, 30 நவம்பர், 2018

2005ல் புலிகளுக்கு மகிந்த ராஜபக்ச கொடுத்த 200 மில்லியன் பணம் ! ரணில் ஜனாதிபதி தேர்தலில் தோற்றது எப்படி?

பசில் ராஜபக்சவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 200 மில்லியன் பணமும் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு வகையில் பல பில்லியன் பணமும்
Ajeevan Veer : 2005ல் ரணிலின் ஜனாதிபதி பதவி இழக்கப்பட்ட இரகசியம் !
புலிகளுக்கு மகிந்த ராஜபக்ச கொடுத்த 200 மில்லியன் பணம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தமைக்கான  காரணங்கள் வெளிவந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை பெற்றது,186,000 என்ற சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலே என்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணம், வன்னி மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்ட தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 3 லட்ச மக்கள் வாக்களிக்க செல்லவில்லை.

இந்த நிலைமை காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் ஒரு தீர்க்கமான பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அனைத்து முடிவுகளிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் பணம் வழங்கப்பட்டதாக காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 21ம் திகதி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதன் போது தானும் பசில் ராஜபக்சவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 200 மில்லியன் பணமும் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு வகையில் பல பில்லியன் பணமும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ராடா வீடமைப்பு திட்டமும் குறித்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என அவர் மூலம் நாடாளுமன்றில் தகவல் வெளியாகின.
பின்னர் “மவ்பிம” பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டிற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அந்த இடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட முறை தொடர்பிலும் அதற்கு தொடர்புடைய நபர்கள் தொடர்பிலும் தகவல் வெளியிட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்த்தகத் துறை பிரதானியான எமில்காந்தன் என்பவரே இதன் போது இந்த ஒப்பந்தத்திற்காக புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
எமில்காந்தன் மற்றும் டிரான் அலஸ் வர்த்தக பங்காளிகளாக செயற்பட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு டயலொக் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் பரவியதற்கான நடவடிக்கைகளும் குறித்த இருவரினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் பணம் வழங்கியமை தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களும் ரோஸ்மீட் பிரதேசத்தில் டிரான் அலஸின் அலுவலகத்திலே இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ச, எமில் காந்தன், ஜனாதிபதி முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இரு தரப்பினருக்கு இடையிலான நம்பிக்கையை உறுதி செய்துகொள்வதற்காக 180 மில்லியன் கைமாற்றப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான பைகளில் குறித்த பணத்தினை கொண்டு வந்து பசில் ராஜபக்ச, எமில் காந்தனிடம் தன் முன்னால் ஒப்படைத்ததாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பின்னர் விஜேதாஸ ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 784 மில்லியன் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் தூதரகம் மூலம் கிடைத்த அமெரிக்க மில்லியன் டொலர் பணத்தினை ரூபாவாக மாற்றி கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குறித்த பணத்தினை கடந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரபல அமைச்சர் மற்றும் வர்த்தக நிறுவனத்தின் பிரதானியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அண்மையில் லண்டனில் வைத்து இந்த நாட்டு அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் இருவரை சந்தித்த விடுதலைப் புலிகளின் புலம்பெயர் பிரதிநிதிகள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் குறித்த பணம் பெற்றுகொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்கவினால் சூழச்சிகள் மேற்கொள்ளப்பட்டமையினால் அவரை தோல்வியடைய செய்வதற்காக அரசியல் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த பணம் யாரால் பெற்றுகொள்ளப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் குழப்ப நிலை ஒன்று உருவாகியுள்ளது.
அதற்கமைய அந்த பணத்திற்கு என்ன நடத்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற யோசனையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன் வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் பல சாட்சிகள் தன்னிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு தொடர்புடைய வர்த்தக பிரதானியிடமும் இதுவரையில் டுபாய் நாட்டில் வசிக்கும் எமில் காந்தனிடமும் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டால் குறித்த பணம் இறுதியாக யாருடைய கைக்கு சென்றுள்ளது என்து தொடர்பில் தகவல் தெரிந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக