வெள்ளி, 9 நவம்பர், 2018

1996 இல் ஆட்சி அமைத்த அந்த மெகா கூட்டணி மீண்டும் வருகிறது?

1996 மீண்டும் திரும்புமா?மின்னம்பலம்: மக்களவை தேர்தலுக்காக மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
2019 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் அணி சேர்க்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இயங்கி வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். மேலும் அரவிந்த் கேஜ்ரிவால், மாயாவதி, ஃபரூக் அப்துல்லா, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்து கூட்டணி குறித்து பேசியிருந்தார்.

கர்நாடகாவில் தற்போது முடிந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த நிலையில் நேற்று (நவம்பர் 8) பெங்களூரு சென்ற சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமியையும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவையும் பத்மநாபா நகர் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்...
அப்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசுகையில், "அரசியல் அமைப்பிற்கு புதிய புதிய பிரச்சினைகளை மோடி உருவாக்கிக்கொண்டே இருக்கிறார். தற்போதுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்ற மதச்சார்பற்ற கட்சிகள் நிச்சயமாக ஒன்றிணைய வேண்டும். டிசம்பர் கடைசியிலோ அல்லது ஜனவரி முதலிலோ பாஜக தவிர அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தப்படும்" எனக் கூறினார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவிக்கையில், "1996இல் நடந்ததுதான் 2019ஆம் ஆண்டும் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். தேவகவுடாவும், சந்திரபாபுவும் நீண்டகால நண்பர்கள். அவர்களின் கூட்டல், கழித்தல் கணக்கு சிறப்பாக அமையும். நாட்டை வழிநடத்தும் அளவுக்கு எதிர்க்கட்சிகளில் சில தலைவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் யாரென்பது குறித்து பின்னர் விவாதிப்போம்" என்று குறிப்பிட்டார்.
இறுதியாகப் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஜனநாயக தன்மையைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம். ரிசர்வ் வங்கி, சிபிஐ போன்ற தேசத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஜனநாயக ரீதியான நெருக்கடி வரும்போது ஒற்றுமை அவசியமானது. விசாரணை அமைப்பு என்பது சுதந்திரமானது. ஆனால், இவை தற்போது எதிர்க்கட்சிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பிரதமர் வேட்பாளர் யாரென்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், நான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயல்கிறேன்" என்று கூறினார்.
இன்று சென்னை வரும் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசவுள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக