வியாழன், 22 நவம்பர், 2018

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புதினத்தந்தி :தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
பிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இப்போது உள்தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.
இது தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலு இழக்கக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.


 குறிப்பாக விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட, தென் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேனும் தன்னுடைய பேஸ்புக் பகுதியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக