புதன், 10 அக்டோபர், 2018

MeToo :பாலியல் சிக்கிய மத்திய அமைச்சர்... குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள்

tamil.indianexpress.com  : இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை இணை
அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் #MeTooIndia ஹேஷ்டேக் மூலம் பகிரங்கப்படுத்த ப்பட்டுள்ளன.  எம்.ஜே. அக்பர் செய்தித் துறையில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பெண்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதை தற்போது புகார்களாக முன் வைத்திருக்கிறார்கள். அக்பர் தற்போது, வணிகம் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்கேற்க நைஜீரியா சென்றிருக்கிறார். இது புகார்கள் தொடர்பாக அவருக்கு அனுப்பபட்ட மின்னஞ்சல், அழைப்பு, மற்றும் வாட்ஸ்ஆப்
குறுஞ்செய்திகளுக்கு அவரிடம் இருந்து எந்த விதமான பதிலும் இல்லை.< #MeTooIndia புகார்கள் : ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் திரைப்பட உலகம், ஊடகம், இலக்கியத் துறை போன்ற இடங்களில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து மீடூ மூமெண்ட் மூலமாக பொது வெளியில் பேசி வருகிறார்கள்.

இந்தியா டூடே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மிண்ட் போன்ற நாளிதழ்களில் வேலை பார்த்து வந்தவர் ஊடகவியலாளர் பிரியா ரமணி. ஊடகத் துறை தாண்டி முதல் முதலாக ஒரு மத்திய அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. பிரியா ரமணி கடந்த வருடம் வோக் இந்தியா பத்திரிக்கையில் மை பாஸ் என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், தன்னுடைய 23வது வயதில் நடந்த நிகழ்வொன்றை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

#MeTooIndia – பிரியா ரமணியின் குற்றச்சாட்டு

அதில் தனக்கான இண்டெர்வியூ ஒன்றிற்காக மும்பையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு அவரை இண்டெர்வியூ எடுக்கும் பத்திரிகை ஆசிரியர் வரச் சொல்லியிருக்கிறார். அதில் “More date, less interview” என அன்று நடைபெற்ற இண்டெர்வியூ பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அச்சமயம் அந்த பத்திரிக்கை ஆசிரியர் பழைய இந்தி பாடல்களை பாடச் சொல்லி, ரமணியை அங்கே இருக்கும் கட்டிலில் அமரக் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு ரமணி மறுத்துவிட்டதாக அந்த கட்டுரையை, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் முடித்துவிட்டார்.
ஆனால் இந்த மீடு இயங்க ஆரம்பித்த பின்னர், திங்கள் கிழமையன்று எம்.ஜி. அக்பர் பற்றி தான் நான் எழுதினேன். அவர் என்னை எதையும் செய்யவில்லை என்பதால் எனக்கு அவருடைய பெயரை குறிப்பிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அவரின் இச்சைக்கு பலியான பெண்கள் இங்கு நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் இதைப்பற்றி பேசுவார்கள் என்று ட்வீட் செய்திருந்தார்.
இதன் பின்னர் பிரியா ரமணியிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேச முற்பட்டபோது, அதற்கு பதி கூற மறுத்துவிட்டார்.

கனிகா கஹ்லவ்த்

ஃப்ரீலேன்ஸ் ஊடகவியலாளர் கனிகா கஹ்லவ்த் தற்போது அக்பர் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார். அக்பருடன் 1995-97 வரை வேலை செய்தவர் கனிகா ஆவார். அவர் ஆசியன் ஏஜ் தொடங்கி இதர பல பத்திரிக்கைகளில் இருவரும் சேர்ந்து வேலை பார்த்திருக்கிறார்கள். ரமணியின் புகார் குறித்து பேசிய கனிகா “நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை. நான் அக்பருடன் 3 வருடம் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் அதை படிக்க வேண்டிய அவசியம் இல்லை என உணருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக பேசிய கனிகா “நாங்கள் வேலையில் சேருவதற்கு முன்பே அக்பர் பற்றிய தகவல்கள் எங்களை வந்தடைந்தன. அக்பர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாகவே நடந்து கொள்வார்” என்று கூறி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஹோட்டலிற்கு காலை உணவு உண்ண எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சரி என்று கூறிவிட்டு பின்பு நான் போகவில்லை. அதன் பின்னால் நான் அவருக்கு போனில் அழைப்பு விடுத்து “மன்னித்துவிடுங்கள் சார்… நான் நன்றாக தூங்கிவிட்டேன்” என்று கூறிவிட்டேன். அதன் பின்னால் அவர் என்னை தொந்தரவு செய்யவில்லை. இது போன்ற தொந்தரவுகள் அனைவருக்கும் நடந்ததா என்று தெரியாது. ஆனால் எனக்கும் என் தோழிக்கும் நடந்ததை என்னால் உறுதியாக கூற இயலும் என்று கனிகா கூறியிருக்கிறார்.

சுபர்னா ஷர்மா

தற்போதைய ஆசியன் ஏஜ் ஆசிரியர் சுபர்னா ஷர்மா தன்னுடைய 20 வயதுகளில் அக்பருடன் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார். அக்பர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிக்கை ஒன்றில் அக்பருக்குக் கீழே 1993 முதல் 1996 வரை வேலை பார்த்தவர் சுபர்ணா. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்கு அவர் அளித்த பேட்டியில் “செய்தித்தாளிற்கான பணி ஒன்றில் நின்று கொண்டிருந்த போது அவர் எனக்கு பின்னால் நின்றிருந்து என்னுடைய உள்ளாடையின் ஸ்டார்ப்பினை இழுத்து ஏதோ ஒன்றை கூறினார், அது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் அன்று நான் கத்திவிட்டேன்.
மேலும் படிக்க பெண்களின் பாலியல் புகார்கள் குறித்து பேசிய மேனகா காந்தி 
அதன் பின் ஒரு நாள் அவருடைய அலுவல் அறைக்கு சென்ற போது என்னுடைய டீசர்ட்டில் எழுதிய வாசகத்தை பார்த்து, என்னுடைய ஆடையை முறைத்தவாறே ஏதோ ஒன்றைக் கூறினார்.  பின்பு ஒரு நாள் எங்களின் அலுவலகத்திற்கு புதிதாக் சேர்ந்திருந்த பெண்ணைப் பற்றி என்னிடமே அவள் யார் என்று கேள்வி கேட்டார். அந்த சமயத்தில் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம். எங்களின் புகார்களை பதிவு செய்ய அன்று எங்களுக்கு என ஒரு தளம் இல்லை என்று அவர் சுபர்ணா கூறியிருக்கிறார்.
அக்பர் இச்சைக்கு ஆளாகும் பெண்கள் அனைவரும் தனியாக தங்கியிருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் தங்களின் பணிகளை மிகவும் நேசிப்பவர்கள் தான். அவர்களிடத்தில் ஒரு செய்தியை சேகரிக்கச் சொல்லி வேறொரு ஊருக்கு அனுப்புவது, பின்னர் அவர்களை பார்க்கச் செல்கின்றேன் என பின்னால் செல்வது, தன்னுடன் ஒரே காரில் பயணிக்க நிர்பந்திப்பது என பல்வேறு வேலைகளை செய்திருக்கிறார் அக்பர்.
சுபர்ணா சர்மாவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமா ரஹா

எழுத்தாளர் சுமா ரஹா தனக்கு நடந்த அனுபவங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸோடு பகிர்ந்து கொண்டார். ஆசியன் ஏஜ் இதழில் வேலைக்கு சேர்வதற்காக ஒரு இண்டர்வியூவை அட்டென் செய்ய அழைத்திருந்தார் அக்பர். கல்கத்தாவில் இருக்கும் தாஜ் பெங்கால் ஹோட்டலில் 1995ம் ஆண்டு, அவரின் அறையில் இந்த இண்டெர்வியூ நடை பெற்றது. இண்டெர்வியூ நடைபெற்று முடிந்தவுடன் அக்பர் பேசிய பேச்சு என்னை அந்த வேலையில் சேர்வதைப் பற்றி யோசிக்க வைத்துவிட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ப்ரெர்னா சிங் பிந்திரா

ஊடகவியாலாளர் பிந்திரா தன்னுடைய அனுபவம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அக்டோபர் 7ம் தேதி பெயர் ஏதும் குறிப்பிடமால் ட்வீட் செய்தார். திங்களன்று காலை அந்த அறிவாளி எடிட்டர் இவர் தான் என்று அடையாளம் காட்டிவிட்டார்.
மேலும் அதில் குறிப்பிட்டிருக்கிறார் என்னுடைய அனுபவங்கள் 17 வருடங்களுக்கு முற்பட்டவை. அதே நேரத்தில் என்னிடம் எந்த ஆதரங்களும் இல்லை. ஆனால் நடந்த அனைத்தும் உண்மை. உண்மைக்கு மாறாக ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் ஏற்படும் நிலை பற்றி நான் நன்றாகவே அறிவேன் என்று கூறியிருக்கிறார்.

ஷுட்டபா பால்

ஷுட்டபா பால் என்ற ஊடகவியலாளர் ரமணியின் ட்விட்டை ரிட்வீட் செய்து அதில் #MeToo #MJAkbar 2010-11 while in @IndiaToday in Kolkata என்று குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக அவரிடம் பேச முற்பட்ட போது எந்த பதிலும் வரவில்லை.
கனிகா குறிப்பிடுகையில் அதன் பின்னர் எந்த நிர்பந்தமும் அக்பரிடம் இருந்து வரவில்லை. ஆனால் சில பெண்களின் நிலையை என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது. அவரின் இன்றைய அதிகார பலம் நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்தும். அனைவரும் இது போன்ற பெரிய ரிஸ்க்கை எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை நான் முற்றிலுமாக உணருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
நான் வேலை பார்த்த பல்வேறு இடங்களில் இது போன்ற பெண்களுக்கு பாதுகாப்பற்ற அச்சுறுத்தும் சூழல் நிலவி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சுபர்ணா சர்மா பேசுகையிலும் இதையே தான் குறிப்பிட்டிருக்கிறார். அக்பர் பெரிய அறிவாளி, சிறந்த பத்திரிக்கையாசிரியர் மற்றும் நல்ல ஊடகவியலாளர். அவரின் உழைப்பைப் பார்த்து அவரின் வேலையைப் பார்த்து ஊடகத்துறைக்கு வரும் ஆண்களும் பெண்களும் அதிகம். அன்றைய காலத்தில் நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து வேலைக்கு வரும் இரண்டாவது அல்லது முதல் தலைமுறை பெண்கள். எங்களால் எதுவும் முடியும், எதுவும் எங்களை தடுத்து நிறுத்தாது எனபதை நான் பலமாக நம்பினேன் என சுபர்ணா குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ட்விட்டர் பதிவுகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில் “இதை இப்படியே விட்டுச் செல்ல இயலாது. விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். பாஜக தரப்பில் இருந்து இந்த புகார் குறித்து எந்த விதமான கருத்துகளும் வரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக