திங்கள், 15 அக்டோபர், 2018

வீரமணி : மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா? நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழில்
தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் ஒரு கண்ணீர்க் கடிதத்தினை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி எழுதியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தொடங்கியுள்ளது அக்கடிதம். தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கும், கல்வியாளர்களுக்கும் வெட்கமும், வேதனையும் அளிக்கக்கூடியதொன்றாகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் என்பவர் நெல்லை கோயில் ஒன்றுக்குச் சென்று காவி வேட்டி அணிந்து உடுக்கடிக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

மதச்சார்பின்மையை காலில் போட்டு மிதிக்கும் துணைவேந்தர்
மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்ட அடிப்படைக் கொள்கைக்கு இது முற்றிலும் முரணான செயல். பக்தி அவரது பூஜை அறைக்குள் இருக்க வேண்டும். அவர் வெளியே வந்து ஆடினால், அது தனி நபர் ஆட்டமாகப் பார்க்கப்படாமல், துணைவேந்தர் ஆடினார் என்று செய்தி வருகிறது. இது கல்வியாளர்களுக்கு மானக்கேடு. அவரது பல்கலைக்கழகத்தில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழில் தேர்வு எழுத ஏன் உரிமை மறுக்கப்படவேண்டும்? புரியவில்லை.
தமிழ்நாடு அரசின் இருமொழித் திட்டம் என்னாயிற்று?
தமிழ்நாடு அரசின் கொள்கை இருமொழித் திட்டம் (தமிழ் - ஆங்கிலம்) அல்லவா? இது தமிழ்நாடு. இங்கே அரசு ஆணைப்படி வழக்கில் உள்ள தமிழ்மொழி வாழ்த்தின் ஆசிரியர் பெயரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திலா இப்படிப்பட்ட கொடுமை நிகழவேண்டும்? விதிகள் ஏதாவது குறுக்கிட்டால் அதனை உடனடியாக மாற்றி, மாணவர்தம் அறிவை, செறிவை தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதித்து, விடைத்தாளைத் திருத்தி அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும்.
நாடு தழுவிய கிளர்ச்சி - எச்சரிக்கை!
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையினர் குறிப்பாக அமைச்சர், கல்விச் செயலாளர் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, தேவைப்பட்டால் புதிய ஆணை ஒன்றை நிறைவேற்றி முதல் தலைமுறை, கிராமப்புற மாணவர்கள், தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவச் செல்வங்களுக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும். தமிழில் எழுத முயலும் மாணவர்களுக்குத் தடை ஏதும் விதிக்கப்படக் கூடாது.
இல்லையேல், நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது தவிர்க்க முடியாதது. தாமதம் இன்றி தமிழக அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்..  tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக