செவ்வாய், 30 அக்டோபர், 2018

கொழும்பில் ரணிலுக்கு ஆதரவான பிரமாண்ட பேரணி ...

விக்ரமசிங்கே பதவி நீக்கத்தை எதிர்த்து இலங்கையில் பேரணிமாலைமலர் :இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்த பிறகுபுதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்று பணிகளை தொடங்கிவிட்ட போதிலும் அரசியல் குழப்பம் இன்னமும் தீரவில்லை. “அரசியல் சாசனப்படி நான்தான் பிரதமர்” என்று ரணில் விக்ரமசிங்கே கூறி வருவதால் சிக்கல் நீடிக்கிறது.
பாராளுமன்றத்தை கூட்டுங்கள், நான் எனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று விக்ரமசிங்கே சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதமும் எழுதி உள்ளார்.
இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முயற்சி செய்தார். ஆனால் அதிபர் சிறிசேனா தலையிட்டு பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் யார்? என்ற சர்ச்சை நீடிப்பதால், பாராளுமன்றத்தை கூட்டி முடிவு செய்யுமாறு பல்வேறு நாடுகளும் அதிபர் சிறிசேனாவிடம் வலியுறுத்தியுள்ளன.


இது தொடர்பாக சபாநாயகர் ஜெயசூர்யா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றம் கூட்டப்படும் தேதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ராஜபக்சேயும், விக்ரமசிங்கேயும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி.க்களை பிடிப்பதற்காக அங்கு குதிரை பேரம் நடந்து வருகிறது.

இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே- ரணில் விக்ரமசிங்கே இருவரும் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வருகிறார்கள்.

ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 95 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற இன்னமும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள சுமார் 20 எம்.பி.க்களை ராஜபக்சே பேரம் பேசி வளைத்து இருப்பதாக கூறப்படுகிறது.



ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 106 எம்.பி.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மேலும் 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில் 16 எம்.பி.க்களை வைத்துள்ள சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 எம்.பி.க்கள் ஆதரவு கிடைத்தால் மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்று ரனில் விக்ரமசிங்கே- ராஜபக்சே இருவரும் கருதுகிறார்கள். எனவே இரு தரப்பினரும் சம்பந்தனுடன் போட்டி போட்டு பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பதவி நீக்கம் செய்ததை கண்டித்து தலைநகர் கொழும்புவில் இன்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டவாறு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினர் கொழும்பு நகரின் முக்கிய சாலையில் பேரணியாக சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக