வியாழன், 18 அக்டோபர், 2018

ஆன்லைன் விற்பனையில் போலி பொருட்கள்... முறைப்பாடுகள்

ஆன்லைன் ஷாப்பிங்: அதிகரிக்கும் புகார்கள்!மின்னம்பலம்: இந்தியாவின் ஆன்லைன் விற்பனைச் சந்தை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அந்நிறுவனங்கள் மீதான புகார்களும் அதிகரித்துள்ளன.
அக்டோபர் மாத ஆன்லைன் சில்லறை விற்பனையில் குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு அதிகளவில் புகார்கள் தெரிவித்துள்ளனர். ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதும் புகார்கள் குவிந்துள்ளன. இதனால் அக்டோபரில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் 20 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் இது 18 விழுக்காடாக மட்டுமே இருந்தது.

இதில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீதுதான் அதிக புகார்கள் வந்திருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். அதேபோலத் தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்கள் மீது 12 விழுக்காடும், வங்கித் துறை மீது 8 விழுக்காடும் புகார்கள் பதிவாகியுள்ளன. செப்டம்பர் மாதத்தில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது 8,500 புகார்கள் வந்துள்ளன. இவை கடந்த ஆண்டில் 6,908 ஆக மட்டுமே இருந்தது. இதில் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரையிலான காலத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது 1,236 புகார்களும், அமேசான் மீது 1,052 புகார்களும், பேடிஎம் மால் மீது 765 புகார்களும், ஸ்னாப்டீல் மீது 400 புகார்களும் பதிவாகியுள்ளன.
இதில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் 1,125 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொருட்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் ஆர்டர்களை நீக்கம் செய்வதில்தான் அதிகளவில் புகார்கள் பதிவாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக