வெள்ளி, 19 அக்டோபர், 2018

சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் திருப்பி அனுப்பட்டனர்

Raj Dev: சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள் மறுபடியும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் கேரள அரசு காட்டும் சுணக்கம் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா டுடே செய்தி ஓடையின் கூற்றுப்படி ஐயப்பன் சன்னிதானத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 60-லிருந்து 80 வரை தான் இருக்கிறது. அவர்களுடன் மிகவும் கீழிறங்கி பேசுகிறார் போலீஸ் டி.ஐ.ஜி. போலீசின் எண்ணிக்கை 200 -ஆக உள்ளது. தேவையற்ற மோதல் தவிர்க்கப்பட வேண்டியது தான் என்றாலும் இரு பெண்களையும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து விட்டு பின்னர் திரும்ப அனுப்புவது இந்துத்துவ வன்முறை கும்பலுக்கு தங்கள் நோக்கம் வெற்றி பெறுதல் சம்பந்தமாக பாதி வெற்றியை பரிசளிப்பதாகும்.
தேவஸம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் சபரிமலைக்கு சென்றிருக்கும் இரு பெண்களில் ஒருவரை குறை கூறியிருக்கிறார். 'இது ஆன்மீக பூமி. எல்லோரும் வந்து விட முடியாது' என்கிறார். இது அப்படியே ஆர்.எஸ்.எஸின் குரலாக இருக்கிறது. எல்லா பெண்களும் இயல்பாக சென்று வரும் சூழல் இருந்தால் எதற்காக பெண்ணிய செயல்பாட்டாளர்கள் செல்கிறார்கள்? இரண்டாவது, சபரிமலையில் பாதுகாப்பான சூழல் நிலவுகிறது என்ற செய்தி பரவினால் மட்டும் தான் பல பெண்கள் செல்ல தயாராவார்கள். அதற்கு முதலில் ஒன்றிரண்டாக செல்லும் பெண்கள் தாக்கப்பட்டால் அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்ற செய்தி உறுதிப்பட வேண்டும்.

இந்த பிரச்சினையில் கேரள அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஐயப்பப் பக்தர்கள் சந்தேகிக்க எதுவுமில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அது செயல்படுத்துகிறது, அவ்வளவு தான். உண்மையான பக்தன் அதிர்ச்சியடையலாம்; தன்னை மாய்த்தும் கொள்ளலாம். ஆனால் பெண்களின் வழியை மறிக்க எந்த உண்மையான பக்தனும் முன்வர மாட்டான். சபரிமலையின் வன்முறைக் காட்சிகள் இப்பிரச்சினையின் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருப்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
எனவே இந்த பிரச்சினையில் அரசு காட்டுகின்ற சுணக்கம் ஆர்.எஸ்.எஸுக்கே சாதகமாக முடியும். அமைச்சர் சுரேந்திரனின் குற்றச்சாட்டை அடுத்து சபரிமலைக்கு சென்றிருக்கும் பெண்ணிய செயல்பாட்டாளரின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்வது போல் ஓரறையில் அடைத்து வைத்து விட்டு பின்னர் திரும்ப அனுப்பியிருக்கிறது, போலீஸ். சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சதித்திட்டம் நிறைவேற விடமாட்டோம் என்று ஊடகங்களில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். ஆர்.எஸ்.எஸிடம் அயோத்தி வீழ்ந்தது ஆர்.எஸ்.எஸின் முயற்சியால் மட்டுமல்ல. அப்போதிருந்த உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப் பந்த்-ன் அரைமனது செயல்பாடுகளும் தான் காரணம் என்பதை மறந்து விடலாகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக