வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பின்புலம் கொண்ட ஒருவர் சிபிஐ இயக்குநர் ..

சிபிஐ இயக்குநர் ராவின் இந்துத்துவப் பின்னணி!மின்னம்பலம்: மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்கு அவசர அவசரமாக இயக்குநராக 23ஆம் தேதி இரவு நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பற்றிய பல்வேறு புலனாய்வுத் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக இருவரையும் நீண்ட விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில் ஆந்திராவைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்கிற அதிகாரியை சிபிஐ இயக்குநராக நியமித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நாகேஸ்வர ராவ் முக்கியக் கொள்கை முடிவுகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்தான்... நாட்டின் முக்கியமான புலனாய்வுத் துறையின் இயக்குநரான நாகேஸ்வர ராவ் இந்துத்துவ இயக்கங்களின் பின்புலம் கொண்டவர் என்பதும், அவரது நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பவர்கள் என்றும் தி எகனாமிக் டைம்ஸ் இன்று (அக்டோபர் 26) செய்தி வெளியிட்டுள்ளது. ‘ராவ்... இந்து கலாச்சாரத்தின் சாம்பியன்’ என்ற தலைப்பில் வெளியான அந்தச் செய்தியின் முக்கிய அம்சங்கள் இதோ...
நாகேஸ்வர ராவ் ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தில் வேதியியல் முதுநிலைப் பட்டம் பெற்றவர். அதன் பின் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர்.
இந்து இயக்கங்களோடு நெருங்கியத் தொடர்புடைய நாகேஸ்வர ராவ் கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான சட்டப் பிரிவுகளை அகற்றுவது, மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு எதிரான கருத்துருவாக்கப் பணிகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
2016ஆம் ஆண்டு சிபிஐக்கு இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், ஆர்எஸ்எஸ், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் ராம் மாதவ்வின் நெருங்கிய நண்பர். ராம் மாதவ் நடத்திவரும் இந்தியா ஃபவுண்டேஷன், சர்வதேச விவேகானந்தா ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் சார்பில் நடக்கும் இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நாகேஸ்வர ராவ் பங்கேற்க கூடியவர்.
டெல்லியில் இந்திய கலை, கலாச்சார தேசிய டிரஸ்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஸ்ரீஜன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்துக்களின் முக்கிய கோரிக்கைகள்,பிரச்சினைகள் என்ன என்பது பற்றி வரையறுப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டன.
கோயில்களை அரசு நிர்வகிக்கக் கூடாது, வெளிநாட்டு நிதி உதவி பெறும் இந்து விரோத தொண்டு நிறுவனங்கள் அந்த நிதியை பெறுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவருதல், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடை, இந்து கலாச்சார செயல்பாடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகள் அங்கே வெளியிடப்பட்டன. மேற்கண்ட இந்துக்களின் முக்கிய பிரச்சினைகளை வகைப்படுத்தி வரையறை செய்த ஏழு பேர்களில் தற்போதைய சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் பற்றி இந்து முக்கியஸ்தர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறார்கள் என்றும் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாகேஸ்வர ராவ், சுமார் இரண்டு மணி நேரம் சின்னச் சின்ன இந்து இயக்கப் பிரமுகர்களோடு கலந்துரையாடியதாகவும் எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவிக்கிறது. இது தொடர்பாக நாகேஸ்வர ராவின் விளக்கத்தைப் பெற அந்த ஏட்டில் இருந்து தொடர்புகொண்டபோது அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை என்றும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.
ஆக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பின்புலம் கொண்ட ஒருவர் சிபிஐ இயக்குநர் என்ற நாட்டின் மிக உயர்ந்த, பொறுப்பு மிக்க பதவியில் இரவோடு இரவாக அமர வைக்கப்பட்டிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக