புதன், 3 அக்டோபர், 2018

ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகள் ... சீமான் , குமரி அனந்தன், விவேகானந்தர் இல்லம் .. இன்னும் பல

LR Jagadheesan : இந்த செய்தியைப்பார்த்ததும் இதே போன்ற வேறு இரண்டு
செய்திகள் நினைவுக்கு வருகின்றன.
முதலாவது பாஜக தமிழ்நாட்டு தலைவி தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையார் குமரி அனந்தன் தனிக்கட்சி நடத்தியபோது அதற்காக தியாகராயநகரில் வெங்கட்நாராயணா சாலையை ஒட்டிய தனிப்பெரும் வீட்டை வாடகைக்கு எடுத்தார். பின் சீமானைப்போலவே அவரும் காலி செய்ய மறுத்தார். வீட்டின் முதலாளி தட்டாத கதவில்லை. முறையிடாத அதிகாரமில்லை. குமரி அனந்தனின் அரசியல் செல்வாக்கும் ஜாதிச்சங்கத்தொடர்புகளும் அவருக்கு பாதுகாப்பாகவும் வீட்டு உரிமையாளருக்கு எதிராகவும் இருந்தன. அதன் இறுதி முடிவு என்ன என்பது தெரியாது.
இரண்டாவது கடற்கரையை ஒட்டிய விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ணமடம் கைப்பற்றிக்கொண்ட நிகழ்வு. தமிழக அரசுக்கு சொந்தமான விவேகாநந்தர் இல்லத்தை பராமரிக்கிறோம் என்று நைச்சியமாக உள்ளே நுழைந்த ராமகிருஷ்ண மடம், பின்னர் அந்த இல்லத்தில் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை அமைக்க தமிழக அரசு நினைத்தபோது தமிழக அரசிடம் தர மறுத்தது. அரசுக்கு சொந்தமான இடத்தை அரசே நினைத்தாலும் திரும்ப எடுக்க முடியாமல் போனது.
காரணம் தமிழ்நாட்டு ஊடகங்களில் ஊடுருவியிருக்கும் ஒற்றை ஜாதியைச்சேர்ந்த மடத்தின் ஆதரவாளர்கள் தங்களின் சுயஜாதிப்பாசத்தை அன்றைய முதல்வர் கலைஞருக்கு எதிராகத்திருப்பி பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதினார்கள். அரசாங்க கட்டிடத்தை மடம் ஆக்கிரமிக்கப்பார்க்கிறது என்கிற அடிப்படையை எழுத மறுத்தார்கள்.
ராமகிருஷ்ண மடத்தை நாத்திகர் கருணாநிதி பழிவாங்குவதாக நெஞ்சறிந்து பொய் சொன்னார்கள். ஆர் எஸ் எஸ் அமைப்பின் சங்கபரிவாரங்கள் சகலமும் களத்தில் குதித்தன. கலைஞரும் எதற்கு இன்னொரு தலைவலி என்று ராமகிருஷ்ண மடத்தின் பராமரிப்பிலேயே அதை விட்டுவைத்தார். சென்னை கடற்கரை சாலையில் அந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே இன்றும் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துறவிகளின் மடமே அரசு கட்டிடத்தின் ஆக்கிரமிப்பாளராக மாறிய ஆனப்பெரிய அசிங்கத்தின் சின்னமாக இன்றும் இருக்கிறது சென்னை விவேகானந்தர் இல்லம்.
இப்படி தனிநபரின் ஆக்கிரமிப்பு, நிறுவனத்தின் ஆக்கிரமிப்பு என்கிற தமிழ்பாரம்பரியத்தைத்தான் செந்தமிழன் சீமானும் நடத்திக்காட்டியிருக்கிறார். அரசுக்கு சொந்தமான டான்ஸி நிலத்தை ஆட்டையை போட்ட ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் பட்டம் கொடுத்தவர் தனியார் வீட்டை காலி செய்ய மறுத்து அடம் பிடித்ததில் ஆச்சரியமில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டை ஆள ஜெயலலிதாவைப்போல தனக்கு எல்லாத்தகுதியும் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார். எனவே இதற்காக அவரை திட்டாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக