திங்கள், 22 அக்டோபர், 2018

பஞ்சாப் ரயில் ஓட்டுனர் : அவசரமாக பிரேக் போட்டேன் .. ஆனால் பலர் கல் எறிந்தனர் .. பாதுக்காப்புக்காக வேகமாக

ரயில் பயங்கரம்: ஓட்டுநர் விளக்கம்!மின்னம்பலம்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாபின் அமிர்தசரஸில் ரயில்வே பாதைக்கு அருகே உள்ள தோபி கத் என்ற மைதானத்தில். இரு தினங்களுக்கு முன்பு தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாகக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழுவை அமைத்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பஞ்சாபில் போராட்டம் நடைபெற்றது.

ஆனால், ரயில் ஓட்டுநர் விதிகளுக்கு உட்பட்டுத்தான் ரயிலை இயக்கியுள்ளார். எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக விளக்கமளித்து, ரயில் ஓட்டுநர் அரவிந்த் குமார் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், ரயில் தண்டவாள பகுதியில் ஏராளமானோர் நிற்பதைப் பார்த்ததும் அவசரமாக பிரேக்கை இயக்கியதுடன் வேகமாக ஹாரனும் அடித்தேன். எனினும் சிலர் அடிபட்டதும் அங்கிருந்தோர் ரயில் மீது கல்வீசி தாக்கத் தொடங்கியதால் பயணிகளைப் பாதுகாக்க ரயிலைத் தொடர்ந்து இயக்க நேரிட்டது என்று கூறியுள்ளார். மேலும், அவ்விடத்தில் ரயிலை நிறுத்தாமல், அடுத்த ரயில் நிலையமான ஏஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தியதாகவும் உடனே இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக