சனி, 6 அக்டோபர், 2018

திமுக- காங். கூட்டணியில் மார்க்சிஸ்ட் இருப்பதை பிரகாஷ் காரத் விரும்பவில்லையாம்.

மின்னம்பலம் :தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்
காங்கிரஸ் இருக்கும் பட்சத்தில் அதில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் காரத் மும்முரமாக முட்டுக்கட்டை போட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் அடங்கிய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அணியில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவதில் பெரும் விருப்பத்துடன் இருக்கின்றன.
தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் இடம்பெறுவோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறி வருகிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதில் தயக்கம் இல்லை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளிப்படுத்தி வருகிறது.

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொல். திருமாவளவன் அக்டோபர் 4 ஆம் தேதிசந்தித்து தங்களது கட்சியின் ‘தேசம் காப்போம்’ மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பாஜக போன்ற மதவாத சக்திகளுக்கு எதிராக திமுகவுடன் மட்டுமல்ல இடதுசாரிகளுடனும் இணைந்து செயல்படவே விரும்புகிறோம் என கூறியிருந்தார்.
மேலும் திமுகவின் தோழமை கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்படும் எனவும் ரவிக்குமார் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் திமுகவின் பொருளாளர் துரைமுருகனோ, இதுவரை கூட்டணி தொடர்பாக பிற கட்சிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என கூறியிருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதில் மகிழ்ச்சி என்கிற நிலைப்பாட்டுடன் உள்ளனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தயக்கம் தொடருகிறது.
அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் சிபிஎம் இணையாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பிரகாஷ் காரத்தின் இந்த நிலைப்பாடு தேசிய அளவில் பாஜகவுக்குத்தான் ஆதாயம் என்பது மதச்சார்பற்ற சக்திகளின் தொடர்ச்சியான விமர்சனம்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு தலைவர்களும் கூட திமுகவுடனான கூட்டணி குறித்து ஒருவித தயக்கமான கருத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். தங்களது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான வியூகம் வகுக்கப்படும். அதனடிப்படையிலேயே தாங்கள் செயல்படப் போவதாக பட்டும் படாமல் கூறுகின்றனர். பிரகாஷ் காரத்தின் காங்கிரஸுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டால் திமுகவுடனான இயல்பான கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறதே என்கிற அதிருப்தியை, மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலக் குழு தலைவர்களின் ‘விரக்தி’யான பேட்டிகளே வெளிப்படுத்தி வருகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக