செவ்வாய், 16 அக்டோபர், 2018

காதல் ஜோடி மீது நாம் தமிழர் கொலை வெறியாட்டம் .. கடுமையான நிலையில் மருத்துவ மனையில்

பாலிமார் நியூஸ் : நாகர்கோவில் அருகே காதலித்து திருமணம் செய்து
கொண்ட ஜோடியின் காரை மறித்து நாம் தமிழர் கட்சியினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் ஆசையால் கை,கால்களில் வெட்டுப்பட்டு தவிக்கும் இளைஞரின் பரிதாப நிலை குறித்து விவரிக்கிறது
கன்னியாகுமரி மாவட்டம் உசரவிளை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ஸ்டாரின். இவர் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால் என்பவரது மகள் டிக்சோனாவிடம் காதல் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
பள்ளிப்படிப்பை கூட தாண்டாமல் பெயிண்டராக வேலைப்பார்த்து வரும் 25 வயதான இளைஞர் ஸ்டாரின் மீது மென்பொறியாளரான டிக்சோனாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இவர்களது காதல் டிக்சோனாவின் வீட்டுக்கு தெரிய வர அவரது பெற்றோர் டிக்சோனாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதையடுத்து ஸ்டாரினும், டிக்சோனாவும் கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைவதற்காக, வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

காவல் நிலையம் செல்லும் வழியில் காரின் முன் பக்க கண்ணாடியில் எங்கிருந்தோ வந்து கல் ஒன்று விழுந்ததால் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நொடிகளில் டிக்சோனாவின் தந்தை ஜெயபால் நாம்தமிழர் கட்சியினருடன் காதல்ஜோடியின் காரை வழி மறித்து தாக்கத் தொடங்கி உள்ளார்.
தனது பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிய கால்கள் இதுதானே என்று கேட்டு காதலன் ஸ்டாரினின் இரு கால்களையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகின்றது. அதனை தடுக்க வந்த அவரது உறவினருக்கு கையில் வெட்டு விழுந்தது. காருக்குள் ரத்தம் தண்ணீர் போல தேங்கியது.
காரில் இருந்த அனைவரையும் அடித்து உதைத்து விட்டு டிக்சோனாவை தங்கள் காரில் ஏற்றி அழைத்து சென்று விட்டனர். இதில் காயம் அடைந்தவர்கள் தனியார் எலும்பு மூட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞர் ஸ்டாரின் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது கால்கள் இரண்டையும் அறுவை சிகிச்சை மூலம் ஒன்றாக சேர்க்க மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அப்படியே சரியானாலும் பழையபடி அவரால் நடக்க இயலுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இருவரும் ஒரே சாதி, ஒரே மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்றாலும், டிக்சோனாவின் தந்தை ஜெயபால், ரியல் எஸ்டேட் மற்றும் கந்துவட்டி தொழிலுடன் நாம் தமிழர் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருப்பதால் தினக்கூலியான பெயிண்டர் ஸ்டாரினுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
காதலை கைவிடக் கோரி அவர் எச்சரித்தும் கேட்காமல் ஸ்டாரின், டிக்சோனாவை அழைத்துச்சென்று காதல் திருமணம் செய்ததால் உண்டான ஆத்திரத்தில், தனது ஆதரவாளர்களுடன் சென்று கொலைவெறித் தாக்குதல் நடத்தி பெண்ணை மீட்டுச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இங்கே காதலுக்கு சாதி, மதம் மட்டும் பிரச்சனையில்லை, ஒரே சாதியினர் என்றால் அந்தஸ்தும் ஒரு பிரச்சனை தான்..! காதலர்களின் பெற்றோர் பணத்தையும் தங்களது கவுரவத்தின் அடையாளமாக பார்க்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்று..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக