செவ்வாய், 2 அக்டோபர், 2018

புதுச்சேரி .. எம் எல் ஏயின் மைக்கை நிறுத்திய கிரண் பேடி ... மேடையில் தகராறு ..விடியோ


மின்னம்பலம் :புதுச்சேரி துணைநிலை ஆளுநரோடு அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பொது நிகழ்ச்சியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாநிலத்தைத் திறந்த வெளிக் கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டனர். தொகுதி எம்.எல்.ஏ.வான அதிமுகவின் அன்பழகனும் நிகழ்வில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அன்பழகன், தனது தொகுதியில் பொதுக் கழிப்பிட வசதி இல்லையென்று தெரிவித்ததோடு தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார். அவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்ததால், மைக்கை ஆஃப் செய்யும்படி அதிகாரிகளுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். தொடர்ந்து அன்பழகன் பேசிக்கொண்டே இருந்ததால் அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்பழகன் கிரண் பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, இங்கிருந்து வெளியேறுங்கள் என அவரிடம் கிரண் பேடி கூறியுள்ளார். எனினும், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அன்பழகன் நீங்கள் வெளியேறுங்கள் என கிரண் பேடியிடம் கூறினார். அமைச்சர் நமச்சிவாயம் சமாதானம் செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆவேசமாகக் கூச்சலிட்டபடியே அங்கிருந்து அன்பழகன் வெளியேறினார். பின்னர் சபாநாயகர் வைத்தியலிங்கத்தைச் சந்தித்து கிரண் பேடி மீது உரிமை மீறல் புகார் அளித்தார். எம்.எல்.ஏ.வின் செயல்பாடு ஒழுங்கீனமாக இருந்ததாலேயே மைக்கை நிறுத்தச் சொன்னதாக கிரண் பேடி விளக்கமளித்துள்ளார்.
"பேச்சை நிறுத்தும்படி அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் அன்பழகன் பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து கூச்சல் எழுப்பினார். அவர் இதுபோன்று செய்வதை முன்னரே ஒருமுறை பார்த்துள்ளேன்” என்று ட்விட்டரில் கிரண் பேடி பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரியில், துணைநிலை ஆளுநருக்கும் அரசுக்கு இடையே மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரும் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆளுநர் குறித்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக