திங்கள், 15 அக்டோபர், 2018

பாடகி சின்மயி உட்பட ஆர்.எஸ்.எஸ் இன் ஐந்தாம்படை.. .. இளம் சிந்தனையாளர் குழு என்ற போர்வையில் .... தமிழக அரசியல் பொதுவெளியில்


நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் உறவு இல்லை, கொல்லைப்புறமாக உறவு கொள்ளும் ’நடுநிலை’ அறிவுஜீவிகள்
2018/03/09/ வினவு :டெல்லி அதிகாரம் கையில் இருந்தும், காலால் உத்தரவிட்டால் தலையால் நிறைவேற்றும் மானங்கெட்ட எடுபிடியாக தமிழக அரசு நடந்தும், ஊடகங்களை விரும்பியபடியெல்லாம் ஆட வைக்க முடிந்தும், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் சங்க பரிவாரத்துக்குத் தமிழகத்தில் அமைதி இல்லை. தமிழகத்தின்  சமூக ஊடகங்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் பார்ப்பன பாசிஸ்டுகளைத் தெளியவைத்துத் தெளியவைத்து அடிக்கின்றன “சமூக வலைத்தளங்களைப் பொருத்தவரை தமிழ்நாடு தனித்துவமாக இயங்குகிறது. சமூக வலைத்தளங்களைப் போராட்ட அரசியலுக்குப் பயன்படுத்துவதும், அதில்  இடதுசாரி கருத்துக்கள் ஆதிக்கம் பெற்று வருவதும் அதிகரித்திருக்கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்.”
இந்தக் கருத்து, இளம் சிந்தனையாளர் குழு (Young Thinkers Forum)  என்ற அமைப்பின் சார்பில், சமூக வலைத்தளங்கள் குறித்து சென்னையில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசப்பட்டதாகும். இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினார், அ.தி.மு.க. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். போலீஸ் உளவுத்துறை துணை கமிசனர் திருநாவுக்கரசு ,  தந்தி டி.வி.-யில் விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அசோகவர்ஷிணி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ், ஷ்யாம் சேகர்,  பாடகி சின்மயி,  நியூஸ் மினிட் இணைய இதழின் தலைமை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

TN RSS சமூக வலைத்தள  கருத்தரங்கம்
இக்கூட்டடத்திற்கு ஸ்பான்சர் செய்த ஸ்வராஜ்யா என்ற தீவிர வலதுசாரி (அதிகாரபூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ்.) பத்திரிகையின் சார்பில் பேசிய பிரசன்னா விஷ்வநாதன்,  “தமிழகத்தில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் பொருளாதார கருத்துகள் இடதுசாரி சார்பாக இருப்பது கவலையளிக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான கருத்துகளும், கெயில், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் எதிர்க்கப்படுவதும், ஜல்லிக்கட்டு பிரச்சினையைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் சமூக வலைதளங்கள் களமாகப் பயன்படுவதும் கவலையளிக்கிறது” என்று பேசினார்.   கார்ப்பரேட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்கவும், பா.ஜ.க. அரசுக்கு எதிராக வைக்கப்படும் சகிப்பின்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எப்படிச் செயல்படவேண்டும் என்பதும் இக்கருத்தரங்கில் பேசப்பட்ட விசயங்கள்.
இளம் சிந்தனையாளர்கள் –  ஆர்.எஸ்.எஸ். இன் முகவர்கள்!
2016_-இல் இக்குழுவின் தமிழகப் பிரிவின் தொடக்க நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.-இன்  தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர்  தத்தாத்ரேய ஹோஸபலே, பா.ஜ.க.விற்கு நெருக்கமான ராஜ்யசபா எம்.பி. ஸ்வபன்தாஸ் குப்தா, ஸ்வராஜ்யா  பத்திரிகையின் ஆசிரியர் ஜெகன்னாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பதிலிருந்தே இவர்கள் யார் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வமைப்பைத் தொடங்கிவைத்து உரையாற்றிய  ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே,  அறிவுத்துறையில் தங்களுக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டுமென்றார்.   ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை ஆதிக்கம் செலுத்த வைப்பது எப்படி என்பதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
கருத்தரங்கின்  ஒவ்வொரு அமர்விலும் ஆர்.எஸ்.எஸ். அரசியலை முன்வைத்து ஒருவர் பேசுவது, மற்றவர்கள் பொதுவாகப் பேசுவது என்று இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் வழியே பொதுவான நிகழ்ச்சி போன்ற தோரணையில் இடதுசாரி அரசியலும் போராட்டங்களும் தீங்கானவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இளம் சிந்தனையாளர் குழுக்கள் தமிழகத்தில் மட்டும் உருவாக்கப்படவில்லை. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டு இந்தியா முழுமைக்கும் உருவாக்கப்பட்டுள்ளன.  காஷ்மீரின் இளம் சிந்தனையாளர் குழுவின் கூட்டத்தில் ராம் மாதவ் உடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காஷ்மீரின் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்  கலந்துகொண்டனர். இவர்கள் நடத்தும் கூட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் ஒருவர்,  உள்ளூர் தலைவர், ஒரு பா.ஜ.க. தலைவர், ஜே.என்.யூ. பேராசிரியர் அல்லது ஆய்வு மாணவர் ஒருவர், ஒரு பத்திரிகையாளர், ஒரு பேராசிரியர் ஆகியோர் கலந்து கொள்வதை  ஒரு முறையாக வைத்திருக்கிறார்கள்.




ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே
இளம் சிந்தனையாளர் அமைப்பை இந்தியாவின் அனைத்து  மாநிலங்களிலும் ஆரம்பித்து இயக்கி வருவதும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் இந்தியா பவுண்டேசன் என்கிற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சிந்தனைக் குழாம்.  இந்த சிந்தனைக் குழாமின் இயக்குநர்களாக  மோடி அரசில்  தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலின் மகன்   சவுரியா தோவல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆர்.எஸ்.எஸ். தேசிய செயலர் ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
தீவிர வலதுசாரி அரசியலுக்கு ஆதரவான ஒரு பொதுமேடையை உருவாக்குவது தான் மேற்கண்ட நிகழ்ச்சியின் நோக்கம்.  இதைத்தான் விவேகானந்தா இன்டர்நேசனல் என்ற பெயரில் அவர்கள்  ஏற்கனவே செயல்படுத்தி வருகிறார்கள்.
அன்னா ஹசாரேயின் பின்னால் !
அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆவதற்கு முன்பு வரை விவேகானந்தா இன்டர்நேசனல் பவுண்டேசன் என்ற சிந்தனைக் குழாமை நிறுவி, அதன் இயக்குநராக இருந்தவர். இதன் தளகர்த்தர்களில் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியும் ஒருவர். விவேகானந்தா கேந்திரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விவேகானந்தா இன்டர்நேசனல்.
2011 -இல் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பொது மேடையை அமைத்து, அதன் கீழ் பா.ஜ.க.வுக்குச் சாதகமான அரசியல் அணி சேர்க்கையை வடிவமைத்துச் செயல்படுத்தியது விவேகானந்தா இன்டர்நேசனல். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தொடங்கும் முன்னர் அவ்வாண்டு ஏப்ரல் மாதமே விவேகானந்தா இனடர்நேசனல் நடத்திய கருப்புப் பணம் தொடர்பான கருத்தரங்கில் குருமூர்த்தி, பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், சுப்ரமணிய சாமி,  கிரண்பேடி, கோவிந்தாச்சார்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உலகமயமாக்கல் மற்றும் மறுகாலனியாக்க கொள்கைகள், அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நடத்தும் சுரண்டல், இயற்கை வளச் சூறையாடல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை மறைத்து, அரசியல்வாதிகளின் ஊழல்தான் மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமுதற்காரணம் என்ற கருத்தினை உருவாக்குவது  என்பது உலக வங்கியின் திட்டம். இந்த உலக வங்கித் திட்டத்தை உலக வங்கியின் விருது பெற்ற அன்னா ஹசாரேவை முன்நிறுத்தி தன்னுடைய அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது விவேகானந்தா இன்டர்நேஷனல் அமைப்பு.
அன்னா ஹசாரேவை முன்நிறுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், 2014  நாடாளுமன்றத் தேர்தலின் மையப்பிரச்சினையாக ஊழலை மாற்றியது. மோடியைப் பிரதமராக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டது.
பல  தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுமேடை என்கிற முகத்துடன் ஆர்.எஸ்.எஸ்.-, பா.ஜ.க. வின் நிகழ்ச்சி நிரலை முன்தள்ளுவது விவேகானந்தா இன்டர்நேசனலின் செயல்தந்திரத்தில் ஒன்று. மோடி அரசு பதவியேற்றதும் அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசராக நியமிக்கப்பட்டார். மோடி அரசின் முதன்மைச் செயலாளராக  விவேகானந்தா இன்டர்நேசனல் செயற்குழு உறுப்பினர் நிருபேந்திர மிஸ்ராவும், கூடுதல் முதன்மை செயலாளராக அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் பி.கே.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டனர். நிதி ஆயோக்கின் உறுப்பினர்களாக சரஸ்வத் மற்றும் பிபேக் தேப்ராய் ஆகியோரும் விவேகானந்தா இன்டர்நேசனல் அமைப்பைச் சேர்ந்தவர்களே.
பாசிசத்துக்கு ஜனநாயக வேடம் !





இளம் சிந்தனையாளர்கள் என்ற பெயரில் ஒரு பொது அடையாளத்துடன் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை முன்வைப்பது தான் இந்தியா பவுண்டேசனின் நோக்கமும்.  இந்த அமைப்புகள் பார்ப்பன_பாசிச அரசியலுக்கு ஒரு தாராளவாத ஜனநாயகத் தோற்றத்தை உருவாக்க முனைகின்றன. மேலும்,  நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் உறவு வைத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் அம்பலமாவோம் என்று அஞ்சும் அளும்வர்க்க ‘நடுநிலை’ அறிவுஜீவிகள், அச்சமின்றி  இக்கள்ளக் குழந்தைகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொடர்பைப் பேணிக்கொள்கிறார்கள்.
உ.பி., ராஜஸ்தானைப் போலத் தமிழகத்திலும் பார்ப்பன பாசிசக் கருத்துகளை மையநீரோட்டக் கருத்தாக மாற்ற முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதற்கான முதல்படி, பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதாகும். இட்லரின் ஆரியவெறியை விவாதத்துக்குரிய ஒரு கருத்தாக எடுத்துக் கொண்டு மேடையமைத்துத் தருவதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ததரினன்னா  என்று தொடங்கியவுடனே தமிழகத்தின் சமூக ஊடகவெளியில் காறி உமிழ்ந்து தனிமைப்படுத்தப்படுகிறது பார்ப்பனியம். ஆனால், எங்கே டெபாசிட் போனாலும், விவாதங்களில் பாதிக்குப் பாதி நாற்காலி போட்டுக் கொடுத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை மைய நீரோட்டக் கருத்தாக மாற்ற உதவுகின்றன ஊடகங்கள். இந்த வேலைக்கு அறிவுத்துறையினரைத் தயார்படுத்தும் பட்டறைதான் சிந்தனையாளர் குழுவின் கருத்தரங்கம்.
– ரகு
* * *
பெட்டிச் செய்தி : சிந்தனையாளர் தோற்றமும் மாமாப்பயல் வேலையும்




மோடி அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் அஜித் தோவலின் மகன் சுவுரியா தோவல் (இடது) இயக்குநராக உள்ள ஜெமினி பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான சவூதி மன்னர் குடும்பத்தின் இளவரசர்களுள் ஒருவரான மிஷால் பின் அப்துல்லா (நடுவில்) மற்றும் சையத் அலி அப்பாஸ் (வலது)
இந்தியா பவுண்டேசன் இளம் சிந்தனையாளர் குழுவை மட்டும் இயக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரகு வேலையும் செய்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது “தி வயர்” இணையதளம்.
சமீபத்தில் இந்தியா பவுண்டேசன்,  இந்திய முதலாளிகளின் சங்கமான FICCI – உடன் இணைந்து நடத்திய “ஸ்மார்ட் பார்டர் மேனேஜ்மென்ட்” என்ற நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது. “இந்நிகழ்ச்சியில் நீங்கள் சந்திக்க வாய்ப்பிருக்கும் நபர்கள்” என்று தலைப்பிட்டு 7 மத்திய அமைச்சகங்கள், போலீஸ், சுங்கதுறை உள்ளிட்டு பல்வேறு அரசு துறைகள் இடம்பெற்றிருந்தன. பலான தரகர்கள் பெண்களின் புகைப்படங்களை வைத்துத் தனது வாடிக்கையாளர்களைக் கவர்வது போல,  அமைச்சர்களின் பெயர்களைக் காட்டி முதலாளிகளை  நிகழ்ச்சிக்கு அழைக்கிறது இந்தியா பவுண்டேசன்.  இக்கருத்தரங்கிற்கு இராணுவத் தளவாடம் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் நிதியளித்தன.
இந்தியா பவுண்டேசனின் இயக்குநர் என்கிற முறையில்  அந்நிய இராணுவத் தளவாட நிறுவனங்களிடம்  நிதி பெறும் நிர்மலா சீதாராமன்,  பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெயரில் எந்த நிறுவனத்திடம் கருவிகள் வாங்குவது என்று முடிவும் செய்யும் இடத்திலும் இருக்கிறார் என்கிறது, “தி வயர்” பத்திரிகை.
அதே போன்று, போயிங் நிறுவனம்  ரூ.70,000 கோடி ஆதாயம் அடையும் விதமாக அந்நிறுவனத்திடமிருந்து விமானங்கள் வாங்குவதற்கு மன்மோகன் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சின்ஹா இயக்குநராக இருக்கின்ற இந்தியா பவுண்டேசனுக்கு போயிங்  நிறுவனம் நிதி அளிக்கிறது.
மேலும், அதன் இயக்குநர் சவுரியா தோவல் ஜெமினி ஃபினான்சியல் சர்வீஸ்  என்ற நிறுவனத்தை சவுதி மன்னர் குடும்பத்தின் இளவரசர்களின் ஒருவரான  மிஷால் பின் அப்துல்லாவுடன் இணைந்து நடத்தி வருகிறார். கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு  சப்ளை அண்டு சர்வீஸ்தான் இந்த நிறுவனத்தின் தொழில். ஒருபக்கம் இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் சிந்தனைக் குழாமில் அமைச்சர்களுடன் இயங்கும் சவுரியா தோவல் மறுபக்கம் ஷேக்குடன் சேர்ந்து இயங்குகிறார்.
முன்பக்கம் பார்த்தால் சிந்தனையாளர், பின்பக்கம் பார்த்தால் புரோக்கர். இதுதான்  இந்தியா பவுண்டேசன். இதன் ஒரு பிரிவு தான் இளம் சிந்தனையாளர்கள் குழு.
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்
மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக