வியாழன், 25 அக்டோபர், 2018

கேரளா முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி?

தினத்தந்தி :முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள கேரளாவை அனுமதிப்பதற்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
 சென்னை, முல்லைப் பெரியாறு அணை பல வீனமாக இருப்பதாகவும், எனவே அதன் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்றும் கேரள அரசு கூறி வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக தொடர்ந்து கூறி வரும் கேரள அரசு அதற்கு பதிலாக புதிய அணை ஒன்றை கட்ட முயற்சி செய்து வருகிறது.
இந்தநிலையில், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள கேரள அரசு வைத்துள்ள முன்மொழிவுக்கு அனுமதி அளிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, நிபுணர்கள் குழு சில நிபந்தனைகளுடன் பரிந்துரைத்து இருக்கிறது.

அதாவது, புதிய அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறுவதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெறவேண்டும், தற்போதுள்ள அணையின் நிலைத்தன்மை குறித்து டாக்டர் தாத்தே குழு வழங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. தற்போதைய அணை மற்றும் நீர்த்தேக்க பகுதிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழகத்தின் முன்அனுமதியை பெறுவது கட்டாயம் என்று கூறி இருக்கிறது.

இவ்வாறு சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு இருப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுதல் துறையின் கீழ் வரும் ஆற்றுப்படுகை, புனல்நீர் மின்சார திட்டங்களுக்கான நிபுணர்கள் மதிப்பீட்டு குழு கடந்த 27.9.2018 அன்று தனது 18-வது கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணையை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்காக கேரளா அரசு வைத்துள்ள முன்மொழிவின் வரைமுறைக்கு அனுமதி அளிக்க அந்த குழு பரிந்துரைத்து உள்ளது. இது தமிழக மக்களிடையே பீதியையும், திகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசை கேரள அரசு அணுகி இருப்பதும், கேரள அரசின் முன்மொழிவுகளை மத்திய அரசு ஊக்குவிப்பதும், 7.5.2014 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அப்பட்டமாக மீறும் செயலாகும். அந்த உத்தரவில், “புதிய அணை கட்டப்பட வேண்டிய விஷயத்தில் இரண்டு தரப்பினரும் ஒப்பந்தம் செய்ய வேண்டும். கேரளா அரசு வைத்துள்ள இந்த திட்டத்தை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முற்றிலும் எதிராக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை நடத்துவதற்காக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலும், கலந்து ஆலோசனை செய்யாமலும், தகவல் சொல்லாமலும், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் திருட்டுத்தனமாக ஒப்புதலை கேரள அரசு பெற்றபோது, தேசிய வனங்கள் வாரிய நிலைக்குழுவின் உறுப்பினர் செயலாளருக்கும், வனப் பாதுகாப்பு அதிகாரிக்கும் கடந்த 16.5.2015 அன்று கோர்ட்டு அவமதிப்பு தொடர்பான நோட்டீசை தமிழக அரசு அனுப்ப வேண்டியதாகிவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி கேரள அரசு கொண்டு வரும் முன்மொழிவுகளை எதிர்காலத்தில் ஏற்கவோ, அவற்றை ஊக்குவிக்கவோ பரிசீலிக்கவோ கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுதல் துறை மற்றும் அதன் முகமைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று உங்களுக்கு கடந்த 10.6.2015 அன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த சூழ்நிலையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான வரைமுறை அனுமதி வழங்குவதற்கான பரிந்துரையை உடனே திரும்பப் பெறுமாறு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுதல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

எதிர்காலத்திலும் புதிய முல்லைப் பெரியாறு அணைக்கான கேரள அரசின் எந்தவொரு முன்மொழிவையும் பரிசீலிக்கவோ, ஊக்கப்படுத்தவோ கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் வகையில் வைக்கப்படும் முன்மொழிவுகளை நிராகரிக்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுதல் துறை மற்றும் அதன் முகமைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் கேரள அரசுக்குமான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், கேரள அரசு அணைகட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதை சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது கோர்ட்டு அவமதிப்புக்கு உரியதாகும்.

தமிழகத்தின் நலன்களை தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜனதா அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும். எனவே இதனை எதிர்த்து, மத்திய அரசு மீதும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. புதிய அணை கட்டிய பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழப்பு செய்யப்பட்டு உடைக்கப்படும். இந்த புதிய அணை 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய குறிப்புகளில் தெரிவித்து உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று பொய்யான பரப்புரை செய்து, புதிய அணை கட்டும் கேரளாவின் சதித்திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு 2014-ல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இந்தநிலையில், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி இருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்பட முனைவதும், அதற்கு மோடி அரசு துணை போவதையும் தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசும், மத்திய அரசும் எடுத்துவரும் இந்த அநீதியை உடனடியாக தமிழக அரசு, தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு ரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு விரோதமாக செயல்படும் கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறப்பட்டு உள்ளது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையானது தமிழக அரசின் அதிகாரத்துக்குள் இருப்பதால் மத்திய அரசு எக்காரணத்திற்காகவும் முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய கேரள அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. குறிப்பாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய கேரள அரசுக்கு அளித்திருக்கும் அனுமதியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதற்காக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகனும், புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக