வியாழன், 4 அக்டோபர், 2018

பேராசிரியர் மீரா ஆஷா மேனன் உடல் அவரது வீட்டில் ... அண்ணா பல்கலை ,, முன்னாள் பேராசிரியர்

தினகரன் : சென்னை: அடையாறு இந்திரா நகரில் கணவர் இறந்ததால் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்த அண்ணா பல்கலை பெண் பேராசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு, இந்திரா நகர் 4வது அவென்யூவை சேர்ந்தவர் மீரா ஆஷாமேனன் (56). அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர். இவரது கணவர் வின்சென்ட் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.  கடந்த 2014ம் ஆண்டு முதல் பணிக்கு செல்லாமல் மீரா ஆஷாமேனன் வீட்டில் தனியாக இருந்ததால் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டார். நீண்ட காலமாக, மீரா ஆஷாமேனன் பணிக்கு வராததால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அவரது வீட்டுக்கு ஆள் அனுப்பி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து சிலர் அங்கு சென்றபோது, ‘‘நான் எவரையும் பார்க்க விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் குழம்பியபடி திரும்பி சென்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீரா ஆஷாமேனன் தன்னுடைய வீட்டின் எதிரே இஸ்திரி கடை நடத்தும் வரதன் என்பவரிடம், ‘‘பணம் இல்லை. பிறகு தருகின்றேன். டிபன் வாங்கி கொடு’’ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை மீரா ஆஷாமேனன் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக வரதன் அளித்த புகாரின்பேரில் திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மீரா ஆஷாமேனன் கட்டிலுக்கு கீழே அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீரா ஆஷாமேனன் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக