புதன், 17 அக்டோபர், 2018

ஸ்டாலின் : எடப்படியின் பாலங்கள் உடைவது போலத்தான் .. அவரின் கமிசன் கலெக்ஷன் கரப்ஷன் ஆட்சியும் ..

எடப்பாடியின் ஊழல் பாலம் உடையும் : ஸ்டாலின்மின்னம்பலம்: புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவே அதிமுக ஆட்சியின் கமிஷன்,கரப்ஷன், கலெக்ஷனுக்கு உதாரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், பேயாடிக்கோட்டை கிராமத்தில் புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்ட எல்லையில், பாம்பாற்றின் மீது புதிதாக பாலம் கட்டப்பட்டு, 2018 ஜூன் மாதம் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பாலத்தை திறந்து வைத்தார். ஆனால் பாலம் திறக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில் பாலத்தின் மூன்று இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தவிர பாலம் அருகே உள்ள மூன்று இணைப்பு சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தரமான பொருட்களைப் பயன்படுத்தி முறையான கட்டுமானம் மேற்கொள்ளப்படாததே விரிசலுக்குக் காரணம் என்றும் இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, தார்ச்சாலையை சீரமைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 17) தனது ட்விட்டரில், "புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது!
கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம். விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்!" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக