வியாழன், 4 அக்டோபர், 2018

தொழிலாளர்கள் கைது: ஸ்டாலின் கண்டனம்!

தொழிலாளர்கள் கைது: ஸ்டாலின் கண்டனம்!மின்னம்பலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும்” என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் (தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு) காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அதற்கு முன்னோட்டமாக, இன்று (அக்டோபர் 4) ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. உள்ளிட்ட பத்து போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் பல கட்டங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று “கோட்டையை நோக்கி” பேரணி செல்வதற்கு முற்பட்டு அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதேபோல் “ஜாக்டோ - ஜியோ” அமைப்பைச் சார்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறப் போகும் மிகப்பெரிய போராட்டத்திற்கு முன்னோட்டமாக இன்றைக்கு அவர்களும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கூட, “வாக்குறுதிகளை” வழங்கி விட்டு போராட்டங்களை வாபஸ் பெற வைத்து விட்டு, பிறகு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கை விரித்து - மீண்டும் போராட்டக் களத்திற்கே திருப்பி அனுப்பும் அராஜகமான நடவடிக்கையில் அதிமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
முதல்வர், அமைச்சர்களின் கவனம் எல்லாம் “இன்றோ நாளையோ”என ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த சட்டவிரோத ஆட்சிக் காலத்தில் பினாமி பெயர்களில் எத்தனை “கம்பெனிகளை” உருவாக்கி எப்படியெல்லாம் “கமிஷன் அடிப்பது, சம்பந்திகளையும், சகோதரர்களையும் அரசு கஜானாவைச் சுரண்ட விடுவதற்கு எப்படி “நூதன டெண்டர்களை” விடுவது என்பதில் மட்டும்தான்” என்று விமர்சித்துள்ளார்.
அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் “திட்டமிட்டு” அவர்களை எல்லாம் வீதியில் இறங்கிப் போராட வைத்து - தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் “சேடிஸ்ட்” மனப்பான்மையுடன் அதிமுக அரசு செயல்படுவதாக கூறியுள்ள ஸ்டாலின், “அரசு ஊழியர்களின் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய தலைமைச் செயலாளரோ “சம்பளத்தைப் பிடிப்போம்” என்று கெடுபிடி செய்து மிரட்டுவதிலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமர்ந்து தி.மு.க.வை விமர்சிக்கும் முதலமைச்சரின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி ரசிப்பதிலும் மும்முரமாக இருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டக் களத்திற்கு விரட்டி அடிக்காமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் . அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையும், அராஜகமும் “அணையப் போகும்” தீபத்தின் கடைசி அடையாளங்கள் என்பதை, எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டிய அதிமுக அரசினை தாறுமாறாக வழி நடத்தும் முதல்வர் பழனிசாமி உணர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக