சனி, 13 அக்டோபர், 2018

கே.டானியல் .. தமிழின் தலித் இலக்கிய முன்னோடி

keetru.com : கே.டானியல் மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட
மகத்தான மனிதன்; கம்யூனிச இயக்கத்தின் நீண்டகால தொண்டன்; தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவன்; அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சஞ்சலங்களையும், வெஞ்சமரையும் சித்தரித்த சிறப்பானதோர் இலக்கியவாதி! களம் பல கண்ட புரட்சிப் போராளி; அவரது வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை; பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்குத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை; மக்களின் நல்வாழ்வுக்காக அவர் தன்னையே எரித்துக் கொண்டு அரசியல், சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். கே.டானியல் தாழ்த்தப்பட்ட மக்களின் சுகதுக்கங்கள், போராட்டங்களின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றையே தமது இலக்கியப் படைப்புக்களின் கருப்பொருளாகக் கொண்டார். மக்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பயிற்சி பெற்ற எழுத்தாளர். ‘மக்களிடமிருந்து மக்களுக்கு மக்கள் மொழியில் ’ என்பதைத் தாரகமாகக் கொண்டவர்.
மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்களைப் படைக்க வேண்டும்; இலக்கியம் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த வழியில் நெறி பிறழாது நின்று பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், நாடகங்ளையும், நாவல்களையும் எழுதியுள்ளார் என ‘மக்கள் எழுத்தாளர்’ கே.டானியலை விமர்சகர் வட்டுக்கோட்டை வீ. சின்னத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.

“சமூக முற்போக்கு இயக்கத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றான தீண்டாமை எதிர்ப்பியக்கத்தில் டானியலின் ஈடுபாடு பூரணமானது, யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் பிரதான முரண்பாடாகச் சாதிக் கொடூரத்தையே டானியல் கருத்திற் கொண்டு வந்துள்ளார். டானியலின் எழுத்துக்கள் சமூக வரலாற்றுக்கான சான்றாக அமைந்துள்ளன. சமூகக் கொடூரங்களுக்கெதிராகக் குரலெழுப்பும் ஆவேச மனிதாயவாதக் குரல் டானியலுடையது.”
k danial ஈழத்தின் தமிழ்ப்புனைகதை வரலாற்றில் சமூக மெய்மையை அதன் இரத்தமும், சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மைக் கணிப்பிற்குரியவர் தான் டானியல் ”.
                “ டானியலுடைய மொத்த நாவல்களையும் ஒரு தொடர் வாசிப்பிற்கு உள்ளாக்கும் பொழுது யாழ்ப்பாணத்தினுடைய சமூகத்தின் ஒரு மொத்த வரலாறு கிடைக்கின்றது.”
                “சமூகத்தின் அடிநிலையில் இருந்து மேல் நோக்கிப் பார்த்தார். அதனால் மேலே இருந்தவர்களிடம் மற்றவர்கள் காணாதவற்றையும், கண்டும் தமது படைப்புக்களில் காட்ட விரும்பாததை அவர் தமது இலக்கியங்களில் ஒளிவு மறைவின்றிச் சொல்லியிருப்பது தான் கடுமையான விமர்சனங்களை இவர் எதிர் நோக்கக் காரணம். யாழ்ப்பாணத்தின் சமூக ஏற்றத்தாழ்வுகளை, சாதிவழி வரும் தீண்டாமையை, அது ஏற்படுத்தும் மனிதாயச் சிதைவுகளை, அவற்றால் பாதிக்கப்பட்டவராய், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அந்நியப்படாதவராய் எழுதியவர் டானியல்.”
                “நீண்டகாலப் போராட்ட அனுபவம், மனித உறவுகள் பற்றிய எண்ணத்தெளிவு, வரலாற்றின் போக்குப் பற்றிய எண்ணத்தெளிவு, வரலாற்றின் போக்குப் பற்றிய மார்க்சிச விளக்கம் முதலியவற்றை உள்ளத்தில் கொண்டவர் டானியல். டானியலின் அண்மைக்கால நாவல்கள், ஈழத்தின் தலை சிறந்த நாவல்களாக விளங்குகின்றன.”
                “ டானியலுக்குத் தெரிந்த யாழ்ப்பாண வாழ்க்கை, யாழ்ப்பாணத்தவர் மறைக்க விரும்பும், மறுக்கு விரும்பும் யாழ்ப்பாண வாழ்க்கை, சைவத் தமிழ்ப் பாரம்பரியம், மிக்க கவனத்துடன் கட்டியெழுப்பிய சமூகப் பாரம்பரியத்தின் இருண்ட பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் .”
                “டானியல், ஒரு நல்ல நண்பர். அற்புதனமான படைப்பாளி, படைப்பாளிகள் மறைவதில்லை. ஏனெனில் அவர்கள் தாங்கள் விரும்பும் உலகத்தை தங்கள் எழுத்துக்களில் வென்றெடுத்துவிடுவார்கள். நீ அழிக்க விரும்பிய உலகம் உன் எழுத்துக்களில் உள்ளது. அது விரைவில் அழிந்துவிடும். உன் புகழ் எழும் !” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி டானியலின் இலக்கியப் படைப்புகள் குறித்து தமது ஆய்வில் பதிவுசெய்துள்ளார்.
                கே.டானியல் 15.04.1927 ஆம் நாள் யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள ஆணைக்கோட்டை என்னும் கிராமத்தில், கிறகொரி- மரியாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்புக்கு மேல் தொடர முடியவில்லை.
தமது பதினேழாவது வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களில் முக்கியமானவரான ப. ஜீவானந்தம் தலைமறைவாக இலங்கையிலிருந்த போது அவரை சந்திக்கவும், அவரது உரைகளை கேட்கவும் டானியலுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதன்மூலம் கம்யூனிசத் தத்துவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
                கே.டானியல் தமக்கு விவரம் தெரிந்த காலம் முதல் பொதுவுடைமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, சளையாத தொண்டனாகச் செயற்பட்டவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புரட்சிகர எழுத்தாளர் அமைப்பு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய அமைப்புகளில் இணைந்து முக்கிய பங்காற்றினார்.
                கே. டானியல் சிறுவனாக இருந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்த கொண்டார். 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் தன்னையும் ஒரு அங்கத்தவனாக இணைத்துக் கொண்டு அவ்வியக்கத்தின் போராட்டங்களில் ஆர்வத்தோடு பங்காற்றினார்.
                எனது குடும்பத் தொழில் சீலை வெளுப்பு . இதைச் சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான், அதைவிடவும் தமிழர்களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதனால் ‘ கட்டாடி ’ என்று சுருக்கி விடலாம். இதை ஏன் குறிப்பாக நான் கூற வேண்டும் ? சமூக அடக்கு முறைக்குள் மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளவு தூரத்திற்குச் சாதியின் கொடுமையை அனுபவித்திருக்க முடியும் என்பதனை எனது வாசகர்களை அறிய வைப்பதற்காகவும், இந்நாள் நெடுகச் சாதியை எழுதுது, ஏன் இப்படிச் செய்யுது ? என்று என் மீது கேலிக்கீதம் பாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை இவர்கள் சற்றுத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.” என கீழ்நிலை வாழ்க்கையின் நிலைமையை கே.டானியல் ‘ என் கதை’ என்னும் நூலில் விவரித்துள்ளார்.
                கே. டானியல் சலவைத் தொழிலாளி, கள்ளுக் கொட்டில், கடல் தொழில், கூலித் தொழில், கால்நடை வளர்ப்பு, தீந்தை பூசுதல், குளிர்பான வியாபாரம், பழைய இரும்பு வியாபாரம், வெல்டிங் கடைசல், இயந்திரங்கள் பழுது பார்த்தல் முதலிய பல்வேறு தொழில்கள் செய்து தமது வாழ்க்கையை நடத்தியுள்ளார்.
                யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் குடிமக்கள் என்ற பிரிவினுள் கோவியர், நளவர், பள்ளர், பறையர், சாண்டார், சிவியார், அம்பட்டர், துரும்பர் முதலியோர் அடங்குவர். இக்குடிமக்கள் வெள்ளாளரின் விவசாய வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் அடிநிலை மக்களாகவே நடத்தப்பட்டு வந்தனர். இக்குடிமக்களில் ஒரு பிரிவினரான கோவியரின் சமூக நிலை சற்று வித்தியாசமானதாகும். இவர்கள் உயர் சாதியினரின் வீட்டினுள் சென்று அவர்களைத் தொட்டுச் சேவகம் புரியும் சிறைக் குடிகளாவர். இவர்களைவிட எஞ்சியோருள் நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், துரும்பர் என்னும் ஐந்து சாதியினரும் பஞ்சமர் என்னும் பெயரில் வீட்டுக்குப் புறம்பாக வைக்கப்படுகின்றனர். பஞ்சமர்களுக்கு சமூகத்தில் ஏனையவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளில் பல மறுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இப்பட்டியல் காட்டுகின்றது.
1. ஆண்கள் மேலங்கி அணியக் கூடாது.
2. ஆண்கள் கணுக்கால் வரைக்கும் வேட்டி கட்டக் கூடாது.
3. ஆண்கள் தோளில் துண்டு போடக்கூடாது .
4. பெண்கள் மேற்சட்டை போடக்கூடாது.
5. பெண்கள் தாவணி போடக் கூடாது.
6. சாலைகளிலும் பொது இடங்களிலும் கண்டபடி நடமாடக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதைகளில் நடமாடும் போது தமது வருகையை உணர்த்தும் வகையில் காவோலையை இழுத்துச் செல்லுதல் வேண்டும்.
7. பெண்கள் நகை அணியக் கூடாது.
8. திருமணத்தில் தாலி கட்டக் கூடாது.
9. உயர் சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது.
10. விசேட சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது.
11. பிரேதங்களை தகனம் செய்யாது புதைக்க வேண்டும்.
12. தாழ்த்தப்பட்ட மக்கள் கடல்மீன் சாப்பிடக் கூடாது. குளத்து மீன் தான் சாப்பிட வேண்டும்.
13. நன்மை தீமைகளின் போது வாத்தியங்கள் பயன்படுத்தக் கூடாது.
14. உயர் சாதியினரின் குளங்களைப் பயன்படுத்தக் கூடாது.
15. குடை பிடிக்கக் கூடாது.
16. பாதணிகள் அணியக் கூடாது.
17. கல்வி கற்க கூடாது.
18. உயர் சாதியினரின் தெய்வங்களைத் தமது கோயில்களில் பிரதிஷ்டை செய்யக் கூடாது.
19. உயர் சாதியினரின் கோவிலுக்குள் செல்லக் கூடாது.
20. தேனீர் சாலைகளுக்குள் போகக் கூடாது .
21. பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளக் கூடாது.
22. சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்யக் கூடாது. அவற்றைச் செலுத்தவும் கூடாது.
23. பஸ், வண்டிகளின் ஆசனங்களில் உட்காரக் கூடாது.
24. பிற்காலத்தில் பாடசாலை அனுமதி கிடைத்த போதும், ஆசனங்களில் உட்காரக் கூடாது.
 ‘ஈழத்துத் தமிழ் நாவல்கள்’ என்னும் நூலில் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் நிலவிய சாதிய அடக்குமுறைகளை டாக்டர்.ம. குருநாதன் பதிவு செய்துள்ளார்.
‘சுதந்திரன் ’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கே. டானியலின் ‘அமரகாவியம் ’என்னும் சிறுகதை முதல் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானார். ஈழநாடு, வீரகேசரி, சரஸ்வதி, தாமரை, மரகதம், மக்கள் இலக்கியம் ஆகிய இதழ்களில் கே.டானியல் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
‘டானியல் சிறுகதைகள்’, ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன’ முதலிய சிறுகதைத் தொகுப்புகளை படைத்து அளித்துள்ளார்.
கே.டானியலின் ‘திருநாள் ’ என்னும் சிறுகதை ஆண்டிற்கு ஓருமுறை வருகின்ற திருநாளைப் பணக்காரர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் களிப்பதையும்- ஏழைகள் அதைப் பார்த்து ஏங்குவதையும் சித்தரிக்கிறது.
மேலும், ‘ தாளுண்டநீர் ’ என்னும் சிறுகதை தேர்தல் காலத்தில் நடைபெறும் முறை கேடுகளையும், பணக்கார வர்க்கம் தமது பணபலத்தால் ஏழைகளின் வாக்குகளை விலைக்கு வாங்குவதையும், அதற்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வருவதையும் எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.
‘தெய்வ பரம்பரை’ என்னும் சிறுகதை கோயிலின் பெயரால் ஏழைகளின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சித்தரிக்கிறது.
‘மானம் ’ என்னும் சிறுகதையில் யாழ்ப்பாணப் பட்டிணத்திலிருந்து தென்மேற்கே கடற்கரை எல்லைக் கோட்டைத் தொட்டபடி உள்ள சேரிப்புறமான திட்டியில் வாழும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வின் சோகங்களை எடுத்துக் காட்டுகிறது.
‘பூமரங்கள்’, ‘முருங்கையிலைக் கஞ்சி’, ‘மையக்குறி’, ‘சொக்கட்டான்’, ‘இருளின் கதிர்கள்’, ‘ சாநிழல்’ முதலிய குறுநாவல்களை கே. டானியல் படைத்து அளித்துள்ளார்.
கே. டானியலின், ‘ இருளின் கதிர் ’என்னும் குறுநாவல், சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் கதையைச் சித்தரிக்கிறது. சாக்கடை போலான அவள் வாழ்வு. தன் வயிற்றுக்காக சுயம் கொன்று பிழைக்க வேண்டிய யதார்த்தநிலை அவள் வாழ்வு என்பதை பதிவு செய்துள்ளார்.
மகன் சிங்களப் பெண்ணை மணம் புரியத் துணிந்ததை ஏற்றுக் கொண்ட உயர்சாதித் தந்தை, அவன் தாழ்த்தப்பட்ட இனம் என்று கருதப்படும், ஒரு சமூகத்தின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சாதி வெறி அவ்வளவுக்கு மனித உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை ‘முருங்கையிலைக் கஞ்சி ’ என்னும் குறுநாவல் உணர்த்துகிறது.
வீட்டின் வெளிமுற்றத்தில் கல்வைத்து, அடுப்பு மூட்டி, கஞ்சி கொதிக்கிறபோது முருங்கை இலைகளை அதில் உருவிப் போட்டு உரிமைக் கஞ்சி காய்ச்சி, அதை குடிப்பது என்பது அன்றிலிருந்து அந்த மகன் அந்த வீட்டின் சாவுக்கும் இல்லாமல் வாழ்வுக்கும் இல்லாமல் போய்விடுவதை உணர்த்தும் செயலாகும், மேலும் தனது மகன் இறந்து விட்டான் என்று இறுதிக் கடன் கழிக்கும் நடவடிக்கையாகும் என்பதை மேற்கண்ட குறுநாவலில் கே. டானியல் பதிவு செய்துள்ளார்.
‘பஞ்சமர்’, ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’, ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’, ‘தண்ணீர்’, ‘நெடுந்தூரம்’, ‘கானல்’, ‘பஞ்சகோணங்கள்’ முதலிய நாவல்களை கே.டானியல் எழுதி அளித்துள்ளார்.
“புதிதாக கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதன் உருவாக்கத்திற்குப் புதிதாக மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களும் மிகவும் உற்சாகமாக பொருள் பண சரீர உதவிகள் செய்கிறார்கள். ஆனால், அந்த சர்ச் கட்டப் பெற்று நடக்கிற உற்சவத்தின் போது, அந்த சர்ச்சிலேயே உயர்சாதியாருக்கு ஓரிடம், தாழ்த்தப்பட்டவருக்கு தனிப்பட்ட ஓரிடம் என்று இட ஒதுக்கீடு ஞானமுத்தரின் நல்லாசியுடன் நடக்கிறது. இப்படி பாரபட்சங்கள் அங்கு கூடத் தொடர்கிறது. இதே வேளை, தாழ்த்தப்பட்ட சாதியினர், தங்கள் வீட்டுப் பெண்களை இனி வேளாள வீடுகளுக்கு குடிமை வேலைக்காரிகளாக அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கின்றனர். இதனை அடுத்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர் சாதி வேளாளர்களின் நிலத்தில் வேலை தரப்படாது மறுக்கப்படுகின்றது.”
பரம்பரை பரம்பரையாக சைவ மதத்தையே தழுவி வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர், இடைக்காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றியதன் மூலம் தங்கள் அவல வாழ்வை விடுவிக்க எத்தனித்தனர். இந்த எத்தனிப்பினால் ஏற்பட்ட பலாபலன்களைச் சித்தரிப்பது தான் இந்த ‘கானல்’ நாவல் என கே. டேனியல் குறிப்பிட்டுள்ளார்.
டானியலின் ‘ கானல் ’ என்னும் நாவலில் உயர்சாதியினரின் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்காக கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய மக்கள் தேவாலயத்தில் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்ட போது மதமாற்றம் என்பது வெறும் கானல் நீர் தான் என்பதை புலப்படுத்துகிறது.
பட்டினியால் வாழும் தாழ்த்தப்பட்ட புதிய கிறிஸ்தவர்கள் உயர்சாதி கிறிஸ்தவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். மத மாற்றத்தின் ஊடாக அவர்கள் எதிர்பார்த்த உயரிய, உன்னத வாழ்வு வெறும் கானல் நீராக மாறிப் போகிறது.” என ‘கானல்’ நாவல் குறித்து வே மு. பொதியவெற்பன் அந்நாவலின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
 ‘பஞ்சமர் ’ பிரக்ஞைபூர்வமாக சனநாயக உணர்வுகளுடன் பஞ்சம சாதியைச் சேர்ந்தவர்கள் இயக்க அடிப்படையில் ஒரு திட்டத்துடன் திரண்டெழுந்து சாதி இழிவுகளுக்கெதிராகப் போராடத் தொடங்கிய வரலாற்றைச் சித்தரிக்கும் நவீனமாகும்.” என விமர்சகர், பேராசிரியர் அ.மார்க்ஸ் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்
‘பஞ்சமர்’ நாவலில் “ யாழ்ப்பாணக் கிராமங்களில் சமூக அமைப்பு முறை இரண்டு தலைமுறை காலத்துக்கு முன்னர் எவ்வளவு குரூரமாக இருந்ததென்பதை டானியல் நிர்வாணமாகக் காட்டுகிறார். உயர்சாதி மக்களின் மேலாதிக்க மனோநிலையை சின்னச்சின்ன வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் பளீரென்று சித்திரமாக உணர்த்துகிறார்.” என பேராசிரியர் எஸ். சுந்திரமூர்த்தி கருத்துரைத்துள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில், நிலமில்லாத சொத்தில்லாத, உரிமைகள் இல்லாத, பெரும் படிப்பறிவில்லாத, இழப்பதற்கெதுவும் இல்லாதவர்களாகக் கணக்கெடுப்பின், அது பெரும்பாலும் இந்த மக்கள் கூட்டத்தினரையே சுட்டும். அதனால், நான் இவர்களுக்காக எழுதுவதென்பது வர்க்கத்துக்காகத்தான் எழுதுவதாகிறது. நான் வர்க்க சார்பற்ற இலக்கியக்காரன் என்று சொல்லப்படுவதெல்லாவற்றையும் நான் மறுக்கிறேன்.” என ‘பஞ்சகோணங்கள்’ நாவலின் முன்னுரையில் கே. டானியல் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சமர் நாவல்கள் 1950-1970 கால கட்ட சமுதாய வரலாற்றுப் போக்கைச் சித்தரிப்பதுடன், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்ட காலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய வரலாற்றுப் போக்கையும் எடுத்துக் காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக ‘ அடிமைகள் ’ நாவல் 1890-1956 காலகட்ட வரலாறாக அமைந்தது, ‘ கானல் ’, ‘தண்ணீர்’ ஆகிய நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் சென்ற நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று நான்கு தலைமுறைகளின் வரலாறு இவற்றில் விரிகின்றன.
பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்திலும் பொதுவான கதையம்சத்தை இரு கூறுகளில் அடக்கிவிடலாம்.
(அ ) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக்கொடுமைகளின் விவரணம்.
(ஆ) அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனித நேயம் கொண்டோரும் இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளின் விவரணம்.
யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு, சம்பிரதாயங்கள், உடை, நடை, பாவனை, வீடு வாசல் அமைப்பு, விவசாய வாழ்க்கை வளர்ச்சி, அரசியல் நடைமுறைகள், அவலங்கள், வீழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவற்றினை ‘பஞ்சமர் ’ நாவலில் டானியல் உள்ளடக்கியுள்ளார்.
‘அடிமைகள் ’ நாவல் உயர்சாதி வேளாளக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியை பேசுகிறது. நிலம், புலம், சொத்து, அதிகாரம், அடிமை, குடிமை என்பனவற்றுடன் ராச வாழ்வு நடத்திய அக்குடும்பம் கேளிக்கைகள், ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலியவற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக காட்டியமைகின்றது.
கொட்டாங்கச்சியில் காப்பி, சட்டியில் சோறு, ஆலய நுழைவு மறுப்பு போன்ற தீண்டாமை ஒதுக்கல்களுக்கு எதிராக சுன்னாகம் பகுதி தாழ்த்தப்பட்ட பஞ்சம மக்கள் போராடுகிற வரலாற்றை ‘பஞ்சகோணங்கள் ’ நாவல் சித்திரிக்கிறது என விமர்சகர் பேராசிரியர் அ. மார்க்ஸ். தமது ஆய்வில் பதிவுசெய்துள்ளார்.
முற்று முழுதாக கடல்புற மக்களின் வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்கிலே எழுதப்பட்ட நாவல். ‘ போராளிகள் காத்திருக்கின்றனர். ’
யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடிதண்ணீர்ப் பிரச்சனை மிக நீண்டகாலப் பிரச்சனை ஆகும். அதிலும் வடமாராட்சிப் பகுதிக்கு இது மிக மிக மோசமான பிரச்சனையாகும். ஒரு குடம் நீருக்காக மூன்று மைல்களுக்குப்பால் நடந்து சென்று தங்கள் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் மிக அதிகம். பல தலைமுறைகளாக இந்தத் துர்பாக்கிய நிலை இருந்து வருகிறது. இன்றுங்கூட அப்படியேதான் இருக்கிறது. உயர் சாதியினர் வாழும் பகுதியில் உள்ள கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுத்ததற்காக, அக்கிணற்றில் நஞ்சைக் கலந்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை அறிந்து அந்த இடத்திற்கு நேராகப் போயிருந்த போது அந்த மக்கள் பட்ட அவதியையும், ஆத்திரத்தையும், வேதனையையும் கண்ட போது எனக்கு கண்ணீர் வந்தது. இப்படியான வாழ்வும் ஒரு வாழ்வா ? என்று நினைத்து ‘ தண்ணீரை ’ எழுத ஆரம்பித்தேன்.”
“ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திலிருந்து பஞ்சம மக்கள் தண்ணீருக்காக பட்டகஷ்டங்கள், வேதனைகள், மனக்கொதிப்புகள், போராட்டங்கள், ஏனைய நடவடிக்கைகள் ஆகியவற்றினை ‘ தண்ணீரு’க்குள் கொண்டு வந்துள்ளேன்.” என ‘தண்ணீர் ’ நாவலின் முன்னுரையில் கே. டானியல் நாவல் பிறந்த அடிப்படையை பதிவு செய்துள்ளார்.
‘தண்ணீர்’ நாவலின் மதிப்புரையில் ஜப்பான் மானிடவியல் பேராசிரியர் யசுமச செக்கினை “ மானிடவியல் ரீதியிலே டானியலுடைய நாவல்கள் யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தினை விவரணஞ் செய்யும் ஒழுங்கான இனச்சரிதைகள் (டிசவாடிபசயயீhநைள) எனக் கூறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. யாழ்ப்பாணத்து மரபுவழிப் பண்பாட்டின் அடிச்சுவடுகளைக் கண்டு கொள்வதற்கான பல முக்கியமான தகவல்கள் அவருடைய நாவல்களிலே காணப்படுகின்றன. உதாரணமாக திருமணம், இறப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் கிரியைகள், நடைமுறைகள் ஆகியவற்றைச் சரியாக இவர் அவதானித்துக் கூறியவை பலவற்றால் நான் பெரும் பயன் அடைந்துள்ளேன். இவற்றின் மூலமாக உறவு முறை பற்றியும், சாதிகளுக்கிடையேயுள்ள உறவுகள் பற்றியும் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அத்துடன் கிராமவாசிகளின் நாளாந்தர வாழ்க்கையின் நடத்தை, பேச்சு ஆகியவற்றின் அவருடைய விவரணம் எம்முடைய ஆய்வுக்குப் பெரிதும் உதவுகின்றது.” என்று பதிவு செய்துள்ளார்.
“அடிமைத்தனங்களை நிலைத்திருக்க வைத்துள்ள நிலமில்லாக் கொடுமையை நீக்க, எமது மக்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும். நிலமற்ற விவசாயிகளுக்கு நலன் பயக்கும் விதத்தில் நெற்காணிச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குடியிருப்பு நிலங்களிலிருந்து எமது மக்களை வெளியேற்ற தடைவிதிக்க சட்டமியற்ற வேண்டும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இயந்திர ரீதியான தொழிற்சாலைகள் ஏற்படுத்திட சோசலிச நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும். இளம் குழந்தைகளின் மனதில் சாதி, மத, இன பாகுபடுகளைக் கொண்ட பாட புத்தகங்களை நீக்கிட வேண்டும். மேலும், பட்டிணங்கள் உட்பட, பட்டிதொட்டிகள் தோறும் சாதி ஒழிப்புச் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்புச் சட்டத்திற்கு பணியாத ஸ்தல ஸ்தாபனங்களுக்கு எமது மக்கள் வரி செலுத்துவதை நிறுத்திட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி போராட வேண்டுமென 1962 ஆம் ஆண்டிலேயே ‘அடிமை விலங்கறுப்போம் ’ என்னும் நூலில் பஞ்சம மக்களுக்கும், இலங்கை அரசுக்கும் வேண்டுகோள் விடுத்தார் கே . டானியல்.
‘கே. டானியலின் கடிதங்கள்’ என்னும் தொகுப்பு நூலை பேராசிரியர். அ. மார்க்ஸ் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூலில் 1982-1986 கால கட்டத்தில் பேராசிரியர் அ. மார்க்சுக்கும், அவரது தோழர்களுக்கும் டானியல் எழுதிய கடிதங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்’ என இந்நூல் மதிப்பிடப்படுகிறது.
‘சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை ’ அமுல்படுத்தக்கோரி 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தினார். அந்த ஊர்வலத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய குண்டாந்தடிகளின் தாக்குதலை எதிர் கொண்டு வெற்றிகரமாக ஊர்வலத்தை நடத்தினார். மாவிட்டபுரம் ஆலயம் பிரவேசப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பஞ்சமருக்காக குரலெழுப்பியதற்காக தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இலங்கையில் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனதா விமுக்தி பெரமுனா (துஏஞ) கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமி கோவில் நுழைவுப் போராட்டம் 14.04.1968 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போராட்டத்தில் டானியல் கலந்து கொண்டார். டானியல் தமது வாழ்நாளில் 11 மாதங்கள் சிறையில் கழித்தார்.
டானியல் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் அமைப்பாளராக 1966 ஆம் ஆண்டு செயற்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆலயப்பிரவேசப் போராட்டம், தேனீர்க் கடைப் போராட்டம் முதலியவற்றில் முன்னின்று செயற்பட்டார். யாழ்ப்பாணத்தில் 1979 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் மாநாட்டடை மிகவும் எழுச்சியுடன் நடத்தினார்.
டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ நாவல் 1973 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. மேலும், ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன ’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது.
டானியலின் ‘தண்ணீர் ’ நாவலுக்கு 1986 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. ஆனால், அப்பரிசை பெறுவதற்கு அவர் உயிரோடு இருக்கவில்லை.
டானியலின் படைப்புகள் சிங்களம், ஜப்பான் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.‘சொல் அகராதிக்கு’ டானியல் படைப்புகளிலிருந்து சொல் சேகரிக்கப்படுகிறது.
டானியலின் படைப்புகள் உயர்கல்விக்கான பாடநூலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் இடம் பெற்றுள்ளது. டானியலின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு ஜப்பான் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் 1982 ஆம் ஆண்டு ‘பஞ்சமர் ’ நாவல் வெளியீட்டு விழாவில் டானியல் கலந்து கொண்டார். நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்கு 1981 ஆம் ஆண்டு சென்று, 44 விவசாயக் கூலி, ஒடுக்கப்பட்ட பெண்கள் என உயிரோடு எரிக்கப்பட்டவர்களுக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் வீர அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள மக்களிடம் உரையாடல் நிகழ்த்தினார். சென்னை, பாண்டிச்சேரி, கும்பகோணம் முதலிய நகரங்களில் 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்த கொண்டு உரையாற்றினார்.
டானியல் 23.03.1986 அன்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் காமானார். அவரது உடல் செங்கோடி போர்த்தப்பட்டு முற்போக்கு, புரட்சிகர இடதுசாரி இயக்கத் தோழர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது உடல் மதநம்பிக்கையற்றவர்களைப் புதைக்கும் மயானத்தில், பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் சமாதிக்கு முன்பாக தஞ்சையில் புதைக்கப்பட்டது. அவர் புதைக்கப்பட்ட இடத்தில் கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.
“இளமைக்காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுசன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவு மிக்கப் போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்து விட்டேன்.” என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ) பொதுச் செயலாளர் நா. சண்முகநாதன் தமது இரங்கல் செய்தியில் பதிவு செய்துள்ளார்.
“எழுத்தாளர் கே. டானியல் துடிக்கும் இளமைப் பருவமான 16 வயதிலேயே பொது வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்டார். யாழ்ப்பாண மண்ணுடன் இரண்டறக் கலந்திருந்த சாதிவெறித் தாக்குதலுக்கு இலக்காகி சாதி, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும்பி, அந்தப் போராட்டங்களில் எல்லாம் முன்னணிப் போராளியாக முகங்கொடுத்துள்ளார்.” என மலையக இலக்கியப் படைப்பாளி அந்தனி ஜீவா புகழ்ந்துரைத்துள்ளார்.
“டானியல் வர்க்க சிந்தனையுடன் தமது இலக்கியப் பணியினை இறுதிக் காலம்வரை மிகச் சிறப்பாகச் செய்த வந்த ஒருவர். தமிழர் சமுதாயத்தில் வர்க்க அடிப்படையில் அடிநிலை மக்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமை விலங்குகளை அறுத்தெறியும் நோக்குடன் இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி. டானியல் மற்ற எழுத்தாளர்கள் மறைத்த பல விடயங்களைத் தமது படைப்புக்கள் மூலம் வெளிக்கொண்டு வந்த ஒருவர். பொய்மையின்றி வாழ்வின் பல கோணங்களை இலக்கியங்களில் சித்தரித்து காட்டியவர்.”என ஈழத்து எழுத்தாளர் தெணியான் பதிவு செய்துள்ளார்.                         
யாழ்ப்பாணத்துத் தமிழர்களுடைய உள் நோக்குகள், சமூக உணர்வு, நடைமுறைகள், நம்பிக்கைகள், மரபுகள் ஆகியனவற்றுடன் நன்கு அவதானித்துத் தன்னுடைய நாவல்களிலே பேணியுள்ளமை அவரை ஒரு ‘பண்பாட்டு நாவலாசிரியன் ’என்று கூறுவதற்கு ஆதாரமாகின்றது.” என பேராசிரியர் . அ. சண்முகதாஸ், 1986 ஆம் ஆண்டு ஈழமுரசு வாரமலர் இதழில் பதிவிட்டுள்ளார்.
டானியலின் நாவல் தனித்துவம் வாய்ந்தவை. மக்களின் மொழியும் உள்ளடக்கமும் யாழ்ப்பாணத்துத் தமிழ் நடையும் அந்த மூடத்தனங்களை முறித்தெறிந்த தெளிவும் அவரது வெற்றிகளாய் உயர்ந்தன. நீண்ட தமிழ் மரபில் கலப்பற்ற நிஜத்தை உண்மைகளை அப்படியே மண் மணம் மாறாது, படைப்புகளாக்கியவர் டானியல். யாழ்ப்பாணப் பிரதேசம், அதன் தமிழ் பேசும் மக்கள், அங்குள்ள சாதி வெறி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களின் பிரச்சனைகள், அவர்கள் பேசும் தமிழ், அதன் சங்கீத ஜாலம், அது மக்களின் வாழ்வோடு புரளும் தன்மை, அவர்களின் நம்பிக்கை, அவர்களின் அரசியல், அவர்களின் காலம் இப்படி எல்லாவற்றையும் அபூர்வமாகச் சித்திரிக்கின்ற நாவல் ‘பஞ்சமர் ’. இலக்கியத்தின் மிக உயர்ந்த அம்சம் அது எத்தனை தூரம் சத்தியத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதில் தான் அடங்கியிருக்கிறது என எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
கே.டானியலின் சிறுகதைகளோ, நாவல்களோ, வெறும் கற்பனை நிகழ்வுகளையோ, கற்பனைப் பாத்திரங்களையோ, அமானுஷ்யப் பாத்திரங்களையோ கொண்டு எழுதப்பட்டவையல்ல. தாய் மண்ணில் வாழ்ந்த, வாழும் மண்ணின் மைந்தர்களின் இன்பம், துன்பம், அடக்குமுறை போன்ற வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிப்பதாகவே அமைந்துள்ளன. இதனால் இவரது படைப்புக்கள் உயிர்த்துடிப்புள்ள மக்கள் இலக்கியமாக மட்டுமின்றி ஈழத்தமிழ் மக்களின் ஒரு காலகட்டத்தின் சமூக வரலாற்று ஆவணமாகவும் திகழும்.” என விமர்சகர் எஸ். சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார்.
“ஈழத்தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து வறுமையோடு தவழ்ந்து சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து கடுமையாகப் போராடி ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து அவர்களைச் சக மனிதர்களுடன் சமானமாக நிலை நிறுத்துவதற்குத் தன் உடல் பொருள் ஆவி என அத்தனையும் அர்ப்பணித்துப் பணியாற்றி மறைந்தவர் டானியல்.” எனப் புகழ்ந்துரைத்துள்ளார் ஈழத்து எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன்.
“வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்.” எனது கடைசி மூச்சுப் போகும்வரை எனது பேனாவுக்கு வலுவிருக்கும் வரை, நான் காண எண்ணும் சமூகநீதி அதிகாரப் பூர்வமாக பஞ்சப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வரை நான் இதைச் செய்து கொண்டே இருப்பேன். நலங்காத-உடல் வாடாத- நாட்டுப் புற மண்ணை மிதித்தும் அறியாத எந்த விமர்சனப் புலிக்குட்டிகளாலும் என்னைத் தடுத்து நிறுத்திவிட முடியாது.”
“இலக்கியக்காரர்கள், கலை இலக்கியங்களுக்கப்பால், சமூகத்தால் தோற்றுவிக்கப்படும் சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடாது அவைகளை இனங்கண்டு வேண்டியவைகளுக்கு வேண்டிய விதத்தில் உதவி ஒத்தாசை தந்து உற்சாகம் அளிப்பது தான். இதைச் செய்யத் தவறும் எந்த இலக்கியக்காரனும் தொடக்கத்திலிருந்து தனதுவாழ் நாள் கடைசிவரை கூறவும் திராணியற்ற ஒருவித முதுகெலும்பற்ற விமர்சனப் பூச்சியாகவே இருக்க முடியும். அவனால் மனித சமூகம் அடையப் போகும் பயன் எதுவுமே இருக்கப் போவதில்லை.” என இலக்கிய படைப்பாளர்களுக்கு கே. டானியல் அறைகூவல் விடுத்துள்ளார்.
பேச்சு, எழுத்து, செயல் இம்மூன்றையுமே சமூக நீதி, சமூக சமத்துவம், சுரண்டலற்ற ஆட்சிமுறை தம் தாயகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற அர்ப்பணிப்புடன் பயன்படுத்தியவர் கே. டானியல். தலித் இலக்கியம் உள்ளவரை கே.டானியல் பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக