திங்கள், 8 அக்டோபர், 2018

திராவிடத்துக்குள் பகை மூட்டிய பகை

வனத்தையன் தமிழரிமா :  1971 ல் தி.மு.க. வின் வெற்றியை சகிக்காமல் அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முடிவு கட்டினால்தான் அகண்ட பாரதம் சாத்தியம், பார்ப்பன மேலாதிக்கம் சாத்தியம், இந்து ராஜ்ஜியம் சாத்தியம் என்று எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வுக்குள் கலகம் விதைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் ஏட்டு சுரைக்காய் மட்டுமே..... ஜெயலலிதாவின் 110 விதியின் கீழ் அறிக்கைகளை போல. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாஸ் தலைமையிலான காவல்துறை அடியாட்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் , சூத்திர பிழைப்புவாத ஊடகங்களும், சாதி சங்க தலைவர்களும் , சினிமாக்காரர்களும் புளுகித் திரிந்தனர்.

சொந்த புத்தி இல்லாத ஜெயலலிதா அடுத்தவர் பேச்சைக்கேட்டு அமைச்சர்களையும், நிர்வாகிகளையும், அதிகாரிகளையும் பதவிகளைப் பறித்து பந்தாடுவதும், கஞ்சா வழக்குகள் பேடுவதும் எம்.எல்.ஏ., எம்பி.க்களைக்கூட தோட்டத்துக்கு இழுத்து வந்து அடிப்பதும் கூட எம்.ஜி ஆரிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்தான். காரியத்தைச் சாதித்துக்கொள்ள அரசியல் பிரமுகர்களுக்குப் பலவகை விருந்து வைப்பதுகூட எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கற்றுக்கொண்ட அரசியல் கலைதான். ஏன், ஜெயலலிதாவையே உளவு பார்த்து, மிரட்டி, ஒதுக்கி வைத்தவர்தான் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா நடத்திய அடிமைக்கட்சிக்கும், அதன் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர். என்பதே உண்மை.
இந்த உண்மை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனை அனுபவித்த முந்தைய தலைமுறையினரோ மறந்து விடுகின்றனர். இதுதான் அன்றாடப் பரபரப்புச் செய்திகளில் மூழ்கடிக்கப்படும் நமது மக்களின் மிகப்பெரிய பலவீனம். இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், அரசியல் அறிவும் ஜனநாயக உணர்வுமற்ற ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கியை வளைத்தது அ.தி.மு.க.
-வனத்தையன் தமிழரிமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக