சனி, 6 அக்டோபர், 2018

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுத பாஜக முயற்சி..

அகழ்வாராய்ச்சி அறிக்கை - மாற்றி எழுத  முயற்சி!மின்னம்பலம் : கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுத பாஜக முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை 2014ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தியது. இரண்டு ஆண்டுக் கால ஆராய்ச்சியில் சுமார் 7,000 தொன்மையான பொருட்கள் கிடைத்திருக்கின்றன. கீழடி அகழ் வாராய்ச்சியில், ஆறு மீட்டர் தோண்டப்பட்ட தொல்லியல் குழிகளில் மூன்றாவது குழியில் எடுக்கப்பட்ட பொருட்களின் காலம் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் இரண்டை மட்டும் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்’ என்ற நிறுவனத்திற்குக் கரிம பகுப்பாய்வுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் அசாமுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கீழடி சம்பந்தமான எந்த வித அறிக்கையையும் அமர்நாத் தயாரிக்கக்கூடாது என்று தொல்லியல் துறை அறிவித்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வைகோ இன்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க நிறுவனத்தின் கரிம பகுப்பாய்வு அளித்த அந்த முடிவுகளை, 2017 ஜூலை 28ஆம் தேதி மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதில், “கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வுச் சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“கீழடி ஆய்வை இழுத்து மூடுவதற்காகத்தான் என்னைப் பணியிட மாற்றம் செய்துள்ளனர். என்னை மட்டுமல்ல; மொத்தம் 25 பேரை பல்வேறு இடங்களுக்குப் பணி இட மாற்றம் செய்துள்ளனர். கீழடி ஆய்வை நாங்கள் உணர்வுப்பூர்வமாக மேற்கொண்டோம். வேறொருவர் தலைமையிலான குழு அப்படிச் செயல்படும் என்று கூற முடியாது,” என்று அமர்நாத் தெரிவித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சியைப் பலவிதமான நெருக்கடிகள், சோதனைகளுக்கு இடையில் தொடர்ந்து நடத்திய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மத்திய பாஜக அரசின் ‘உள்நோக்கத்தால்’ அசாம் மாநிலத்திற்குப் பணி இட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை அவர் தயாரிக்கக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டு இருப்பதற்கு, வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கும் இந்துத்துவா கும்பலின் சதித் திட்டம் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை அடியோடு சீர்குலைக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. தற்போது ஒரேயடியாக ஆய்வறிக்கையை மாற்றி, உண்மை வரலாற்றைக் குழிதோண்டிப் புதைக்க நினைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ள வைகோ இந்துத்துவாக் கூட்டத்தின் அட்டூழியங்களுக்குத் தமிழக மக்கள் உரிய வகையில் பதிலடி கொடுப்பார்கள். கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கையை அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிப்பதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக