புதன், 3 அக்டோபர், 2018

மாறன் - விஜய் கூட்டணி, கோபத்தில் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: மாறன் - விஜய் கூட்டணி, கோபத்தில் ஸ்டாலின் மின்னம்பலம்:  “ஊரெல்லாம் சர்கார் பற்றிதான் பேச்சாக இருக்கிறது. அதுவும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். நேற்று தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் நடந்த சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுதான் அதற்கு காரணம்.
சர்கார் ஆடியோ விழாவில் விஜயை மேடையேற்றும்போதே, தளபதி, தளபதி, தளபதி என அரங்கம் முழுதையும் கோஷம்போட வைத்தார் தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா. இது எதேச்சையா நடந்ததில்லையாம். விஜய், கலாநிதி மாறன் சேர்ந்து போட்ட ப்ளான்படிதான் விஜயை தளபதி என்ற பெயரிலேயே ஃபுல் ப்ரமோஷன் செய்கிறார்களாம்.
விழாவில் பேசிய விஜய், ‘எல்லோரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தை சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு ஓட்டு போடுங்கள். சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால், முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன். மக்களுக்காக உண்மையாக உழைப்பேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். ஆனால் அதை ஒழிப்பது என்பது எளிதான விஷயமாக எனக்குத் தெரியவில்லை. நாம் அன்றாட வாழ்வில் நாம் பழகிபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த அளவுக்கு ஒழிக்க முடியும் என்று தெரியவில்லை. வேறு வழியில்லை ஒழித்துதான் ஆக வேண்டும். இந்த இடத்தில் நான் ஒரு குட்டிக் கதை சொல்றேன்.

ஒரு மன்னன் நகர் வலம் போனார். வழியில் ஒருவர் அவருக்கு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்தார். அதை ஒரு மடக்கு குடித்த மன்னர், ‘கொஞ்சம் உப்பு கொடுங்க..’ என கேட்டார். அவர் வீட்டிலோ உப்பு இல்லை. ‘நான் கடைத் தெருவுக்கு போய் எதாவது ஒரு கடையில் இருந்து உப்பு எடுத்துட்டு வரேன் மன்னா...’ என ஒரு காவலன் கிளம்பினான். அவனை தடுத்த மன்னன், ‘நீ உப்பு எடுத்துட்டு வர வேண்டாம். அதற்கு என்ன விலையோ அதை கொடுத்து வாங்கிட்டு வா...’ என்று சொன்னார். அதற்கு காவலனோ, ‘கொஞ்சம் உப்புதானே மன்னா.. அதுல என்ன வந்துடப் போகுது?’ என்று சொல்ல... ‘மன்னரே காசு கொடுக்காம உப்பு வாங்கிட்டாருன்னு ஊருக்கெல்லாம் தெரியும். மன்னரே வாங்கிட்டாரு நமக்கு என்னனு நீங்க எல்லோரும் கை நீட்டுவீங்க. அப்புறம் நாட்டுல தன்னால சிக்கல் வரும்..’ என்று மன்னர் சொல்ல... தலையாட்டி இருக்கிறார் காவலன். இதுதான் உண்மை. ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பயம் வரும். ஒரு தலைவன் சரியாக நடந்தால், அவன் வழியில் அவன் கட்சியும் நல்ல கட்சியாக இருக்கும். இது நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவே இல்லை. பொதுவாகத்தான் சொன்னேன். ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க. எங்கேயும் தர்மம்தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். என்ன... கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்” என்பதுதான் விஜய் பேசியது.
அரசியலுக்கு வரப் போவதை விஜய் சொல்லாமல் சொல்லிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். முன் வரிசையில் அமர்ந்திருந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் விஜய் பேச்சுக்குக் கைதட்ட, அது திமுக வட்டாரத்தைக் கொஞ்சம் கோபமாக்கியிருக்கிறது.
சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வை வீட்டில் இருந்தபடியே பார்த்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இது சம்பந்தமாக ஸ்டாலினிடம் பேசியவர்கள், ‘இது விஜய் படம் என்பதைவிட அரசியல் படம்தான். அவரு என்னதான் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தாலும், அவரு தனிக் கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில்தான் பேசிட்டு இருக்காரு. அதை மாறன் சகோதரர்கள் என்கரேஜ் பண்ணிட்டு இருக்காங்க. மெர்சல் படத்துலேர்ந்துதான் விஜய்யை தளபதினு அழைக்க ஆரம்பிச்சாங்க. இப்ப சர்கார் பட ப்ரமோஷன்ல விஜய் அப்படிங்குற பேரைவிட தளபதி என்ற பட்டத்தைத்தான் ப்ரமோட் பண்றாங்க. திமுகவுக்கு எதிராக விஜய்யை கொம்பு சீவி விடுறாங்களா? இது இப்படியே போச்சுன்னா நமக்குதான் சிக்கல்” என்று சொல்லி இருக்கிறார்கள். ‘நானும் பார்த்தேன். விசாரிக்கிறேன்..’ என்று மட்டும் ஸ்டாலின் கொஞ்சம் கடுப்பாகத்தான் சொன்னதாக சொல்கிறார்கள். ஆனால், இதுவரை மாறன் சகோதரர்கள் இருவரிடமும் விஜய் படம் தொடர்பாக ஸ்டாலின் பேசவில்லை” என்று முடிந்தது மெசேஜ்.

அதற்கு லைக் போட்ட ஃபேஸ்புக், “எதிர்பார்த்ததுதானே... சரி... அதிமுக ரியாக்‌ஷன் என்ன?” என அடுத்த கேள்வியை போட்டது.
பதிலும் வாட்ஸ் அப்பில் டைப்பிங் ஆக ஆரம்பித்தது. “திமுகவைவிட, அதிமுக உக்கிரமாக இருக்கிறது. ஏற்கெனவே ஜெயலலிதா இருந்த சமயத்தில் கத்தி படத்துக்குச் சிக்கல் வந்தது. இப்போது அராசாங்கத்தைக் காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார் விஜய். ஜெயகுமாருக்கு முன்பாகவே அரசு தரப்பில் கருத்து சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஆர்பி உதயகுமார். ‘நாங்க நாட்டை கவனமாகவும் பத்திரமாகவும் பார்த்துக்குறோம். அதுல நடிகர்களுக்கு எதுக்கு கவலை? எங்க வேலையை நாங்க பார்க்கிறோம். அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். நாங்க சரியாக இருக்கும்போது நடிகர்களுக்கு எதுக்கு முதல்வர் கனவு?’ என்று கேட்டிருக்கிறார் உதயகுமார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ‘விஜய் ஒண்ணும் இதெல்லாம் ப்ளான் பண்ணாமல் பேசவே இல்லை. பக்காவாக ப்ளான் பண்ணித்தான் பேசியிருக்காரு. அவருக்கும் அரசியல் ஆசை வந்துருச்சு. இப்போ தேவையில்லாமல் நாம அதுக்குள்ள தலையிட்டு படத்தை தடுக்கவோ அவரை விமர்சனம் செய்யவோ செய்தால், அதை வெச்சு அவரு இன்னும் விளம்பரம் தேடிக்குவாரு. கண்டுக்காம அமைதியாக இருக்கிறதுதான் நல்லது. இவரு பேசி எதுவும் ஆகப் போறது இல்லை. சொல்லப்போனால் இப்போ விஜய் என்ன பேசினாலும் அது திமுகவுக்குதான் இழப்பு. ஏன்னா விஜய் இப்போ நிற்கிறது கலாநிதி மாறன் பேனர்ல. அதனால் நாம எதுவும் சொல்ல வேண்டாம்’ என அமைச்சர்களிடம் சொல்லி வருகிறாராம்.” என்று முடிந்தது அந்த பதில் மெசேஜ்   மொ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக