சனி, 13 அக்டோபர், 2018

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
vinavu.com: கிளினிக்கில் ஐம்பதுகளில் ஒரு பெண்மணி, தனக்கு சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் சிறுநீர்ப்பாதை எரிச்சல்,  அடிக்கடி வருவது குறித்து என்னை சந்தித்தார்.
மாதம் ஒரு முறை மீண்டும் மீண்டும் சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, அவரது சிறுநீர் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுநீரில் சராசரியாக இருக்க வேண்டிய கிருமி தாக்கிய செல்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக கிருமி பிடிகொண்ட செல்கள் இருந்தன.

ஆகவே, மீண்டும் சிறுநீரை கிருமியை வளர்த்து கண்டறிந்து அந்த கிருமியை அழித்தொழிக்கும் கிருமிக்கொல்லியையும் சேர்த்து நமக்கு கூறும் culture & sensitivity பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன்.
இந்த பரிசோதனையில் சிறுநீரில் உள்ள கிருமிக்கு ஏற்ற வளரும் சூழ்நிலையில் ஆய்வகத்தில் பாதுகாக்கப்படும். இதன் மூலம் கிருமிகள் நன்றாக வளரும். இதன் மூலம் நுண்ணுயிரியல் வல்லுனர்கள் எந்த கிருமி என்பதை கண்டறிந்து கூறுவார்கள். மேலும் இந்த கிருமியுடன் பல்வேறு கிருமி கொல்லிகளை சோதித்து, எந்த கிருமிக்கொல்லி சிறப்பாக வேலை செய்கிறது என்றும் கூறுவர்.
இது எதிரியின் தன்மை மற்றும் எதிரியை அழிக்கும் ஆயுதத்தையும் ஒரு ஒற்றன் இருந்து நமக்கு காண்பித்து கொடுப்பதற்கு ஒப்பானது. அவ்வாறு பார்த்த பரிசோதனையில் Enterococcus faecalis என்று வந்திருந்தது.
இதே பிரச்சனைக்கு ஆறு மாதம் முன்பு எடுத்த கல்ச்சர் & சென்சிட்டிவிட்டி ரிப்போர்ட்டிலும் இதே கிருமி இருப்பதும் அதற்காக மருத்துவம் செய்யப்பட்டதும் அறிந்தேன்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் வள்ளுவரின் சொல்படி இந்த நோய் ஏன் அடிக்கடி வருகிறது என்று சிறிது யோசித்த பிறகு நீங்கள் அடிக்கடி வீட்டிற்கு வெளியே இருக்கும் பொது கழிப்பிடங்களை உபயோகிக்கிறீர்களா? என்று கேட்டேன்
“இல்லை” என்று பதில் வந்தது.
“நான் கூறுவதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு அடிக்கடி இந்த சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்றை ஏற்படுத்தும் அந்த கிருமியானது மலத்தில் பொதுவாக காணப்படும் கிருமியாகும். தாங்கள் மலம் கழித்த பின் எந்த திசையில் இருந்து எந்த திசை நோக்கி மலத்தை சுத்தம் செய்வீர்கள்? மல துவாரத்தில் இருந்து சிறுநீர் கழிக்கும் துவாரம் நோக்கி சுத்தம் செய்வீர்களா? அல்லது அதற்கு மாறாகவா” என்று கேட்டேன்.
படிக்க :
♦ சிறுநீர் : பெண்களுக்கு சிறு பிரச்சினையல்ல !
♦ ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?
அதற்கு அந்த பெண்மணி சிரித்து விட்டு “என்ன சார் இப்டிலாம் கேக்குறீங்க. அதெல்லாமா பாத்துட்ருப்பாங்க?” என்றார்.
“இல்லமா. அதையும் நோட் பண்ணுங்க . நாளைக்கு வந்து சொல்லுங்க” என்றேன்.
மறுநாள் வந்தார் ” மலதுவாரத்தில் இருந்து கைகளை கீழ் நோக்கி சிறுநீர் துவாரம் நோக்கி கொண்டு சென்று சுத்தம் செய்வதாக கூறினார்”
நான் ” இனிமே அதற்கு மாற்றமாக … கீழிருந்து மேல் நோக்கி மல துவாரத்தை சுத்தம் செய்யுங்கள். உங்களுக்கு சிறுநீர் தொற்று வரும் வாய்ப்பு குறையலாம்.. பார்ப்போம்” என்று அனுப்பி வைத்தேன்.
பிரதி மாதம் சிறுநீர் தொற்று என்று வந்தவர். அடுத்த ஆறு மாதங்கள் அந்த பிரச்சனை என்று வரவில்லை. “நான் வேறு மருத்துவரை பார்க்க போய் விட்டார் போல” என்றே நினைத்தேன்..
ஆனால் அந்த நற்செய்தி காத்திருந்தது. ஆறு மாதத்திற்கு பிறகு வேறு பிரச்சனைக்காக வந்தவரிடம் நான் ஆர்வக்கோளாறில் கேட்டேன்
“யூரின் இன்ஃபெக்சனுக்கு டாக்டர மாத்திட்டீங்களாம்மா?”
அவர் சிரிப்புடன் “சார்.. க்ளீனிங் மெத்தட மாத்துனதுக்கு அப்புறம் எனக்கு அந்த பிரச்சனை வரவே இல்லை சார்..தேங்க்ஸ் சார்” என்றார்.
எனக்கு அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…
இந்த நிகழ்வு நடந்து நான்கு வருடம் ஆகியும் இன்னும் பசுமரத்தாணி போல் என் மனதில் பதிந்துவிட்ட நிகழ்ச்சி.
அப்போது ஆங்கிலத்தில் எழுதி பதிந்த அந்த பதிவை இப்போது தமிழில் எழுதுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இதுபோன்ற பிரச்சனைகளில் இருக்கும் யாருக்கேனும் இந்தப் பதிவு உதவலாம்.
இறைவனுக்கே புகழனைத்தும்.
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr.ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக