திங்கள், 8 அக்டோபர், 2018

மோடி- எடப்பாடி; டெல்லி டீல்!.. .. டுபாக்கூர்களில் சந்திப்பு ..

மின்னம்பலம் :”பிரதமரை சந்தித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிரதமரைப் பார்த்துவிட்டு வந்ததும், ‘அண்ணாவுக்கும், அம்மாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கச் சொல்லி கேட்டேன். எம்.ஜி.ஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வைக்கச் சொல்லி கேட்டேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவை மானியங்களை வழங்கவும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை சீக்கிரம் அமைக்கவும் கேட்டுக் கொண்டேன். நிதி சம்பந்தமாக சில விஷயங்களைப் பேசினேன்...’ என ஆரம்பித்து ஃபைலில் என்னவெல்லாம் கொண்டு போனாரோ அத்தனையும் மீடியா முன்பு ஒப்பித்தார். இதெல்லாம் தெரிந்ததுதான். ஃபைலில் இல்லாதது என்ன பேசினார் எடப்பாடி என்பதை சொல்கிறேன்.
எடப்பாடியோடு அமைச்சர் ஜெயகுமாரும் டெல்லி வந்திருந்தார். தமிழக அரசின் மீது மத்திய அரசு கொஞ்சம் கோபத்தைக் காட்டி வந்தாலும், இந்த முறை எடப்பாடி அப்பாயின்ட்மெண்ட் கேட்டதும் கிடைத்தது. ‘நாங்க கேட்டதும் எங்களை பார்க்க நேரம் ஒதுக்கியதுக்கு நன்றி’ என்று உள்ளே சென்றதுமே பிரதமரிடம் முதல்வர் சொல்லியிருக்கிறார். அதன் பின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டு எடுத்துக் கொண்டு போன கோரிக்கைகள் அடங்கிய ஃபைலை பிரதமரிடம் கொடுத்திருக்கிறார் .

அதை வாங்கிக் கொண்ட மோடி, ஃபைல் தொடர்பாக எதுவும் பேசவில்லையாம். நேரடியா அரசியல் நிலவரத்துக்கு வந்துவிட்டாராம். ‘தமிழ்நாட்டுல இருந்து எனக்கு வரும் ரிப்போர்ட் எதுவும் சரியாகவே இல்லை. நான் அத்தனை விஷயங்களையும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். எங்க ஆட்கள் எதாவது சொன்னால் அதை உங்க ஆட்கள் கடுமையாக விமர்சனம் செய்யுறாங்க. தமிழ்நாட்டில் பிஜேபி வந்துடவே கூடாது என்பதில் எல்லோரைப் போலவே நீங்களும் உறுதியாக இருக்கீங்க...’ என்று நேரடியாகவேக் கேட்டிருக்கிறார் பிரதமர்.
இதை கொஞ்சமும் எடப்பாடி எதிர்பார்க்கவே இல்லையாம். ‘அப்படி நாங்க நினைக்கவே இல்லைங்க. நாங்க எந்த சூழ்நிலையிலும் உங்களை எதிரிகளாக பார்க்கவே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்த சிக்கல் வந்தாலும் நாங்கதான் அரணாக இருந்து காப்பாத்திக்கிட்டு வர்றோம். எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை என எல்லோருக்கும் சட்ட ரீதியா பல சிக்கல் வந்தது. அதில் எல்லாம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எச்.ராஜாவுக்கு எதிராக தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால், இன்று வரை அவரை நாங்கள் கைது செய்யவில்லை. தமிழ்நாடு போலீஸ் நினைத்திருந்தால், அவரைப் பிடிப்பது பெரிய வேலையே இல்லை. உங்களுக்கு எப்போதுமே நாங்க நன்றி உடையவர்களாகத்தான் இருக்கிறோம். தேர்தல் என்று வரும் போது கூட்டணி பற்றி பேசி முடிவு பண்ணிக்கலாம். அதுவரை தனித்தனியாகவே இயங்கலாம்.
தமிழக மக்களுக்கு பிஜேபி மீது கோபம் இருப்பது உண்மைதான். அதை உடனே சரி செய்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றி ஆகணும். அதுக்கு நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.’ என பதில் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
‘கூட்டணி பற்றி யாராவது பேசினால் ஏன் அதை இப்போது பேச வேண்டாம் என சொல்லிடுறீங்க?’ எனவும் பிரதமர் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு முதல்வர், ‘உங்களோடு கூட்டணி என இப்போது இருந்தே சொல்ல ஆரம்பித்தால், அது மக்களிடம் வெறுப்பைத்தான் அதிகமாக்கும். தேர்தல் வரை தனித் தனியே செயல்பட்டு கடைசி நேரத்தில் கைகோர்க்கலாம். அப்போதான் நாங்களும் வளர முடியும். உங்களையும் பாதுகாப்பாக வளர்க்க முடியும்...’ என்று சொன்னாராம். முதல்வர் சொன்ன வார்த்தைகளில் சமாதானம் ஆகிவிட்டாராம் பிரதமர்.
‘ஒருவகையில் நீங்க சொல்றதும் சரியாகத்தான் இருக்கு... நான் உங்களோடு எங்க தலைவர்களை பேசச் சொல்றேன்.,’ என்று சொல்லி கை கொடுத்திருக்கிறார் பிரதமர். அதனால்தான் உள்ளே போகும்போது இருந்த உற்சாகத்தை விட, படு உற்சாகத்துடன் திரும்பி வந்து மீடியா முன்பு பேசினார் எடப்பாடி” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்
அதற்கு லைக் போட்ட வாட்ஸ் அப், மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டு ஆஃப்லைனில் போனது. “துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து எடப்பாடியால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பன்னீர் படத்தை எங்கேயும் போடாமல் தவிர்க்கச் சொன்னார் முதல்வர். இப்போ அதே வழிமுறையை தமிழகம் முழுக்கவே பின்பற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து அனைத்து மாவட்ட பி.ஆர்.ஓ.க்களுக்கும் உத்தரவு போயிருக்கிறதாம்.
வண்டலூர் அருகே நன்மங்கலத்தில் இன்று வன உயிரின வார விழா நடந்தது. இதில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயவர்த்தன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவிலும் ஜெயலலிதா படமும் எடப்பாடி படமும் மட்டுமே போடப்பட்டிருந்தது. பேருக்காக கூட பன்னீர் படம் இல்லை. இந்த தகவல் பன்னீர் கவனத்துக்கும் போக, ‘திட்டமிட்டு எல்லாத்தையும் பண்றாங்க. பண்ணட்டும் பார்த்துக்கலாம்...’என சொல்லி வருகிறாராம் பன்னீர்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக