வியாழன், 18 அக்டோபர், 2018

BBC : சபரிமலையில் தற்போதைய நிலவரம்

கேரளாவில் சபரிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி இருப்பதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவிக்கிறார். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இந்து அமைப்புகளின் கடை அடைப்பு அழைப்புக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிப்பதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர்.
"நேற்று இருந்த நிலைமையை காட்டிலும் முற்றும் மாறாக இன்று (வியாழக்கிழமை) பத்தனம்திட்டா பகுதிகளில் பேரமைதி நிலவுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கிறது." என்கிறார் பிபிசி செய்தியாளர்.
சாமானியர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
"இந்த கடையடைப்பால் சாமானியர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் பணம் படைத்தவர்களுக்கு இது மற்றொரு விடுமுறை நாள்" என்கிறார் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த பிரிட்டோ. "சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய விஷயத்தை, வீதிக்கு கொண்டு வந்து மக்களை வஞ்சிப்பது சரியல்ல" என்கிறார் நிலக்கல் பகுதியை சேர்ந்த பெயரிடப்பட விரும்பாத ஒருவர்.

பிரவீண் தொகாடியாவின் அந்தர்ராஷ்ட்ரிய இந்து பரிஷத் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முனைப்புடன் செயல்படுகிறது.
நேற்று பிபிசியிடம் பேசிய, மல்லிகா நம்பூதிரி, "எங்களை யாரும் இயக்கவில்லை. தன்னெழுச்சியாக நாங்கள் எங்கள் பண்பாட்டை காக்க போராடுகிறோம்" என்று தெரிவித்து இருந்தார்.
இவர், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக முதன்முதலாக கருத்து தெரிவித்த மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த ராகுல் ஈஸ்வரின் தாய் ஆவார்.
போராட்டக்காரர்கள்
கேரளாவில் சபரிமலையை நோக்கிச் செல்லும் பெண்களைத் தடுத்து போராடிவந்த போராட்டக்காரர்கள், பக்தர்களுடன் கலந்து விட்டதால், யார் போராட்டக்காரர்கள், யார் பக்தர்கள் என கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.பம்பையைத் தாண்டியே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடியும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முதல் முறையாக கோயில் நடை புதன்கிழமையன்று திறந்தபோது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெண்கள் உள்ளே நுழையக்கூடாது என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களையும் பாஜக ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில் இன்று அப்பகுதி முழுவதும், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை போராட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும் எந்தப் பெண்களும் வரவில்லை என்றும் பம்பையில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் பக்தர்களுடன் ஒன்றாக கலந்திருப்பதால், யாரையும் தடுத்த நிறுத்தி சோதனை செய்தால் பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
தடுத்து நிறுத்தப்பட்டார்
இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்ற நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி ராஜ், தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை யாரேனும் தாக்கக்கூடும் என்பதினால், போலீஸார் அவரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.<
நேற்று செய்தி சேகரிக்க வந்த வாகனங்களை தாக்கிய போராட்டக்காரர்கள், செய்தியாளர்களையும் அவதூறாக பேசியுள்ளனர்.
செய்தியாளர்களும், காவல்துறையினருமே போராட்டக்காரர்களின் இலக்காக உள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் சிலர், 'சேவ் சபரிமலா' என்ற பதாகைகளை கழுத்தில் ஏந்தி செல்கின்றனர்.இன்று (வியாழக்கிழமை)காலையில் இருந்து போராட்டம் ஏதும் நடைபெறவில்லை என்றாலும், அப்பகுதி முழுவதிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பத்து முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பாரம்பரியமாக பலஆண்டுகளாக கட்டுப்பாடு இருந்துவந்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நீக்கிவிட்டாலும், சபரிமலைக்கு செல்லும்வழியில் உள்ள இந்த நிலக்கல் கிராமத்தில், கடந்த ஒரு வாரகாலமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடந்துவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக