வெள்ளி, 19 அக்டோபர், 2018

BBC : இந்து முஸ்லிம் என பிரிந்து நிற்கிறதா இந்திய ராணுவம்? அதிர்ச்சிதரும் புத்தகம்

இந்திய ராணுவம். இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான லெப்டினெண்ட் ஜெனரல் ஜமீருதீன் ஷா 'தி சர்காரி முஸ்லிம்' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். குஜராத் கலவரங்களின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றியவர் ஜமீருதின் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராணுவப் பணிகளைப் பற்றியும் குஜராத் கலவரத்தின் போது தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் ஜமீருதீன் ஷா தனது புத்தகத்தில் விரிவாக விவரித்திருக்கிறார். பிபிசி உடனான நேர்க் காணலில் ஜமீருதீன் ஷா பகிர்ந்துகொண்ட தகவல்கள்:
நான் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அரசில் பணிபுரியும் முஸ்லிம்களில் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் உண்டு.
அரசு ஊழியர்களாக பணிபுரியும் முஸ்லிம்களில் ஒரு வகையினர் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என குற்றம்சாட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மதிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.
இரண்டாவது வகையினர் பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும், தங்கள் மனசாட்சியை விற்றவர்கள். அவர்கள் இஸ்லாமுக்கு எதிராக எழுதுகிறவர்கள்.

நான் மசூரியில் லெஃப்டினெட்ண்டாக பணிபுரிந்த காலத்தில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை சந்தித்தேன். அவர்கள் குதிரை சவாரி செய்துக் கொண்டிருந்தனர். ராணுவத்தில் குதிரை சவாரி செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்கு புரிய வைக்க விரும்பினேன், அவர்கள் ராணுவ அதிகாரிகளாக தயாராக வேண்டும் என்றும் அவர்களிடம் சொன்னேன்.


அவர்களிடம் பேசி முடித்த பின்னர், அந்த இளைஞர்களில் ராணுவத்தில் சேர விரும்புபவர்களை கையுயர்த்தச் சொன்னேன். ஆனால் அவர்களில் யாருமே கைகளை உயர்த்தவில்லை.
ஏன் என்று கேட்டதற்கு, நீங்கள் அரசுக்கு ஆதரவான முஸ்லிம் என்று அனைவரும் சொன்னார்கள். அதாவது அரசு என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு ஜால்ரா அடிப்பவன் என்பதே அதன் அர்த்தம். அவர்களது அறியாமையை நினைத்து சிரித்தேன். அதை புறக்கணித்துவிட்டேன்.
குஜராத் வன்முறைகள்
2002ஆம் ஆண்டு குஜராத்தில் பெரிய அளவிலான வகுப்புவாத வன்முறைகள் வெடித்தன. அதில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்பட்டனர்.
பிப்ரவரி 27ஆம் நாளன்று கோத்ராவில் ரயிலுக்கு தீவைக்கப்பட்ட கொடுமையான சம்பவம் அரங்கேறியது. அடுத்த நாள் 28ஆம் தேதியன்று மாலை சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குஜராத்தில் கலவரம் வெடித்தது.
அப்போது, வன்முறை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை கூறுமாறு மூத்த ராணுவ அதிகாரி ஜெனரல் பத்மநாபன் தொலைபேசியில் என்னை கேட்டார். நானும் பதிலளித்தேன்.


பிறகு உடனடியாக ராணுவத்தின் சில பிரிவுகளை அழைத்துக்கொண்டு, கலவரம் நடந்த பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். நாங்கள் இரவு 10 மணிக்கு ஜோத்புரில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து விமானம் மூலம் அகமதாபாதிற்கு சென்றோம்.

அதிக பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. தேவையான எல்லா பொருட்களும் அகமதாபாதிலேயே கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அகமதாபாதில் சென்று இறங்கியபோது, பல இடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
இரவு 12 மணிவாக்கில் நான் அங்கு சென்றபோது, என்னை அழைத்துச் செல்ல வந்த அதிகாரியிடம் தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளதா என்று விசாரித்தேன். ஆனால் அவரோ, மாநில அரசு அதற்கு ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்தார்.
மாநில தலைமைச் செயலரிடம் பேச வேண்டும் என்று கூறியதற்கு, அவர் வெளிநாட்டிற்கு சென்றிருப்பதால், அவருக்கு பதிலாக பொறுப்பை கவனிக்கும் பெண்மணியை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசிவரை அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.


சரி, நேரிடையாக முதலமைச்சரிடமே பேசிவிடலாம் என்று நினைத்து அங்கே சென்றபோது, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டசும் இருந்தார். எனக்கு தேவையான பொருட்களைப் பற்றிய விவரங்களை கூறிவிட்டு, நான் விமானப்படைத் தளத்திற்கு சென்றுவிட்டேன்.
அடுத்த நாள் காலை வரை எந்த பொருட்களும் வந்து சேரவில்லை. அதிகாரிகள் யாரும் வரவில்லை. 10 மணி சுமாருக்கு விமானப்படைத் தளத்திற்கு வந்த பாதுகாப்பு அமைச்சர், எந்தவித பாகுபாடும் காட்டாமல் பணியாற்றவேண்டும் என படைவீரர்களிடையே உரையாற்றினார்.
அடுத்த நாள், எங்களுக்கு தேவையான வாகனங்களும், பொருட்களும் வழங்கப்பட்டன. நாங்கள் களத்தில் இறங்கிய அடுத்த 48 மணி நேரத்தில் கலவரங்கள் அடங்கின.
முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களா?
முன்னேற வேண்டும் என்ற துடிப்புடைய முஸ்லிம்களிடம் சிறப்பான கல்வி இருந்தால் அவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. எனது மற்றும் எனது பிள்ளைகளின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியவில்லையே?
ஆனால் சில விஷயங்களை உணர்கிறோம். குறிப்பாக பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தி, உயிரிழப்புகள் ஏற்பட்டபோது நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதோடு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு உச்சநீதிமன்றத்திற்கும் கடிதம் எழுதினேன்.

இதைத்தவிர, சமூக ஊடகங்களில் இடப்படும் சில பதிவுகளும் ஆச்சரியமாக உள்ளன. ராணுவத்தில் இணக்கமாக பழகி ஒன்றாக பணிபுரிந்த வீரர்கள், வாழ்க்கை முழுவதும் எங்களுடன் வாழ்ந்தவர்கள், தற்போது இன ரீதியிலான பதிவுகளை எழுதுவதையும் பார்க்கிறேன்.
இவை அனைத்தும் ஆபத்தான அறிகுறிகள் என்பதால், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிக்கிறதோ என்ற கவலைகள் எழுகின்றன.
அன்றும் இன்றும் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம்
அன்றைய முஸ்லிம் இளைஞர்களிடையேயும், இன்று இருப்பவர்களிடையேயும் பல விதமான வித்தியாசங்கள் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. நான் ராணுவப் பணிக்கு சேர்ந்தபோது, முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், இன்று ராணுவப்பணிகளில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வது அதிகரித்துள்ளது.
ராணுவத்தில் சேருவதற்கு பல இளைஞர்களை நான் ஊக்கப்படுத்தியிருக்கிறேன். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பணியாற்றிய போதும் இளைஞர்கள் ராணுவத்தில் சேரவேண்டும் என்று நான் வலியுறுத்தியிருக்கிறேன்.


ராணுவத்தை நோக்கிய இளைஞர்களின் கண்ணோட்டம் மாறிவிட்டதா?
ராணுவம் எப்பொழுதும் மதச்சார்பற்ற அமைப்பாகவே இருந்திருக்கிறது. இதை நான் என்னுடைய ராணுவ வாழ்க்கை முழுவதும் உணர்ந்திருக்கிறேன். நான் இந்துவல்ல, வேற்று மதத்தவன் என்ற எண்ணமே எனக்கு தோன்றியதில்லை.
நூற்றுக்கணக்கான இந்து (படைவீரர்)களுடனே நான் வாழ்ந்திருக்கிறேன். ஆலயங்களோ, அல்லது மசூதியோ நாங்கள் அனைவரும் மத பேதமின்றி நாடு என்ற ஒற்றைக் குறிக்கோளில் அணிவகுத்து நின்றிருக்கிறோம். ராணுவத்தைப் பொறுத்த வரையில் அங்கு யாரும் மதம் சார்ந்து அல்ல, ஒரு படை வீரராகவே அறியப்படுவார்கள், ஒருவரின் மதம் என்பது அவரது தனிப்பட்ட விஷயமாகவே இருந்திருக்கிறது.
ராணுவத்தைப் பொறுத்த அளவில் எங்கள் மதம் என்பது 'இந்தியா' மட்டுமே. வீட்டிற்குள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கும், பணியிடத்திற்கும் சம்பந்தமே இருந்ததில்லை.

நான் பதவியில் இருந்த காலத்தில், யாருக்கும், எதற்காகவும் தொந்தரவோ பாகுபாடோ காட்டவில்லை என்பதை உறுதியுடன் சொல்வேன்.
ராணுவ அதிகாரி அல்லது பல்கலைக்கழக துணைவேந்தர்- இரண்டில் கடினமான பணி எது?
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பதுதான் மிகவும் கடினமானது என்று நினைக்கிறேன். ராணுவத்தில் பிறருக்கு உத்தரவிடவேண்டும். எங்களுடைய வீரர்கள் அவற்றை செய்து முடிப்பார்கள்.
ராணுவத்தில் ஒரு கட்டுப்பாடுள்ள ஒழுங்குமுறை கடைபிடிக்கப்படும். பொதுவாக அது ஒரே சீராக சென்றுக் கொண்டிருக்கும்.
ஆனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பலவிதமான குறைபாடுகள் உள்ளன. இதனால்தான் நம் நாட்டு பல்கலைக்கழகங்கள் எதுவுமே உலகின் முன்னணி 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்
கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் முஸ்லிம்கள் மீதான புதிய தாக்குதல்களை தடுக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது அவ்வாறு நடைபெறுவதில்லை.
அதற்கு பதிலாக, தாக்குதல் நடத்துபவர்களுக்கு மாலை போடப்படுகிறது. அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இனவாத செயல்களை செய்யும் எந்தவொரு மனிதராக இருந்தாலும், அவர் எந்த மதத்தை சேர்ந்திருந்தாலும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குடும்பமும், சகோதரர் நசீரும்
என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட இன்ப துன்பங்கள் என பலவிதமான அனுபவங்களையும் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். கடந்த ஆண்டு மே மாதம் இந்த புத்தகத்தை எழுதத் தொடங்கினேன்.
என்னுடைய குடும்பத்தைப் பற்றியும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். 19ஆம் நூற்றாண்டில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். விடுதலைப் போராட்டத்தின்போது ஆங்கிலேய நிர்வாகத்தில் பணிபுரிந்தோம். இது தொடர்பான காரணங்களையும் விளக்கங்களையும் எனது புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.


எனது அண்ணன் மிகவும் புத்திசாலி. அவர் ஐ.ஐ.டியில் படித்தார். ஆனால், நான் அதிகம் படிக்கவில்லை. ராணுவத்தில் சேர்ந்துவிட்டேன், அங்கு எனக்கு கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அங்கு படித்த பாடங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை.
என் தம்பி நசீர், பாலிவுட் நடிகராக அனைவராலும் அறியப்பட்டவர். நசீருதின் ஷா என்றால் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அவனும் அதிகம் படிக்கவில்லை. அவன் நடிகனாகப் போகிறேன் என்று எங்களிடம் சொன்னபோது நாங்கள் அனைவரும் சிரித்தோம்.
மீரட்டில் படித்துக் கொண்டிருந்த நசீர் ஒரு நாள் அங்கிருந்து காணமல் போய்விட்டான்.
ஆளைக் காணோமே என்று தேடினால், பொருட்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, மும்பைக்கு சென்றுவிட்டான் என்று தெரியவந்தது. பிறகு அவனை தேடியதில் திலீப் குமார் ஐயா மூலமாக எங்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதிர்ச்சி என்று சொல்வதற்கு காரணம், நசீர் திரைப்பட படபிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் எடுபிடியாக (ஷுட்டிங் பாய்) வேலை பார்த்துக் கொண்டிருந்தான் என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக