வியாழன், 18 அக்டோபர், 2018

BBC : சபரிமலை: யாரும் அச்சப்பட வேண்டாம், முழு பாதுகாப்பு அளிக்கப்படும் - கேரளா காவல்துறை

சபரிமலை நோக்கி செல்லும் பெண்களை தடுத்து பாஜக ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழம) முதல் போராடி வந்த நிலையில், நிலக்கல் பகுதியில் கல்வீச்சு, தடியடி, கலவரமென போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சபரிமலை நோக்கி சென்ற பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
போலீஸாருக்கு எதிராக போராட்டகாரர்கள் கல்வீசியதை தொடர்ந்து தடியடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பையில் நடந்த போராட்டத்திலும் கல்வீச்சு நடந்துள்ளது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பம்பையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பம்பையில் நடந்த போராட்டத்தில் போலிஸ்காரர் ஒருவர் மிக மோசமாக போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனை சிறப்பு பாதுகாப்புபடை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார்.
இதனிடையே, சபரிமலைக்கு பெண்கள் வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை என சபரிமலை முன்னாள் தந்திரியின் மனைவி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.


நாங்கள் பெண்கள் அனைவரும் வருவதை எதிர்க்கிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. பத்து வயது வரை உடைய பெண்கள் வரலாம் பின்பு 50 வயதுக்கு பின் பெண்கள் இங்கே வரலாம். நானே அந்த வயதில் சென்றிருக்கிறேன் என்கிறார் முன்னாள் தந்திரியின் மனைவி தேவிகா அந்தர்ஜனம்.
இவருக்கு இப்போது 84 வயதாகிறது.
இன்று இவரையும், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக முதன்முதலாக கருத்து தெரிவித்த மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த ராகுல் ஈஸ்வரியின் தாய் மல்லிகா நம்பூதிரியையும் சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை அச்சுறுத்துகிறார்கள் என்று போலீஸார் கைது செய்து, சில மணி நேரங்களில் விடுதலை செய்தனர்.
"நாங்களை இங்கு பிரார்த்தனைதான் செய்து வருகிறோம். எங்களை கைது செய்தது முறையல்ல" என பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர், "ஊடகங்களில் வருவதுபோல எங்களை யாரும் இயக்கவில்லை. தன்னெழுச்சியாக நாங்கள் எங்கள் பண்பாட்டை காக்க போராடுகிறோம்" என்றார்.
யாரும் அச்சப்பட வேண்டாம்
யாரும் அச்சப்பட வேண்டாம். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுமென பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை சிறப்பு அதிகாரி சைமன் தெரிவித்தார். <> மலைக்கு ஏறும் பெண்கள் அச்சப்பட்டால், அவர்களுடன் காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
மேலும் அவர். "கல்வீச்சில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பாதுகாப்பு ஆலோசனை
பாதுகாப்பு குறித்து போலீஸாருடன் கலந்து ஆலோசித்து வருவதாக பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


re>இன்று மாலை சபரிமலை நடை திறக்க உள்ள நிலையில், வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து போலீஸாருடன் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
சபரிமலை போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தம் நிறுவனத்தின் செய்தியாளர் தாக்கப்பட்டதாக நியூஸ் மினிட் தளத்தின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, முதல் முறையாக கோயில் நடை திறக்கும் நாளான இன்று (புதன்கிழமை) மலைக்கு வரும் பெண்களை தடுக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்படும் என கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் சபரிமலை நோக்கி செல்லும் பெண்களை தடுத்துப் போராடிவந்த பாஜக ஆதரவு அமைப்பைச் சேர்ந்த பெண்களை போலீசார் நிலக்கல் கிராமத்தில் இருந்து அகற்றிய நிலையில் பெண் பக்தர்கள், பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பம்பை வரை செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களையும் பாஜக ஆதரவு போராட்டக்காரர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாகின்றன.
சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் வாகனத் தணிக்கை செய்து, இளம் பெண்கள் இருந்தால் அவர்களை அங்கேயே இறக்கிவிட்டும் வந்த போராட்டக்காரர்கள் முன்னதாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் அமைத்திருந்த முகாம் பந்தலை போலீசார் அகற்றினர். இரவு முழுதும் பாட்டுப்பாடியும், பயணிகளை தடுத்து நிறுத்தியும் பெரிய அளவில் அமளியில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்கள் இப்போது அங்கு இல்லை.
அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக