செவ்வாய், 16 அக்டோபர், 2018

BBC :தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விடுவிப்பு ஏன்?.. பிற் சேர்க்கை..

தி.மு.கவின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ்.
இளங்கோவன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டிருக்கிறார். தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக நீண்ட காலமாக செயல்பட்டுவரும் அவர், திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டில் வட சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இளங்கோவன், 2014ல் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தி.மு.க. சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிப்பது என செயல்பட்டுவந்தார் இளங்கோவன். தி.மு.க. சார்பில் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிப்பதற்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரைக் கொண்ட அந்தப் பட்டியலில் டி.கே.எஸ். இளங்கோவன் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில்தான் செய்தித் தொடர்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நேற்று (திங்கட்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த இளங்கோவன், வரும் நவம்பர் 15ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அதில், கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டதோடு அந்த விழாவிற்கு ஆளும் அ.தி.மு.கவினர் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அவரது அந்தப் பேட்டியே தற்போதைய நடவடிக்கைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு செப்டம்பரில் ஊடகங்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 170 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தார். இது குறித்து கருணாநிதி கண்டித்த பிறகு, அவரிடம் மன்னிப்புக் கோரினார் டி.கே.எஸ்.
மேலும், உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்துக்களை வைத்து, தி.மு.கவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சாடியபோது, கருணாநிதி வெளிப்படையாகவே டி.கே.எஸ். இளங்கோவனைக் கண்டித்தார். டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.கழகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா என்றும் கேள்வியெழுப்பினார். 


splco  :
தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன். அவரை நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதன் பிண்ணனி இப்போது மெதுவாக வெளிவந்துள்ளது ..
கட்சியில் நிக்கப்பட்ட மு.க.அழகிரி பற்றி யாரும் பேசக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.ஆனால் அதை மீறி மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் மு.க.அழகிரி குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார். இது மு.க.ஸ்டாலினிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் மறுநாள் அதற்கு எதிர்மாறான கருத்தை டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். இதுவும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நேற்று பேட்டியளித்த டி.கே.எஸ். இளங்கோவன், ‘‘அறிவாலயத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக சோனியா வர இருக்கிறார்’’ என்ற தகவலை வெளியிட்டார். சிலை திறப்பு விழாவுக்கு டெல்லியில் உள்ள தலைவர்களை அவரே அழைத்து வருவது போன்றும் அவரது பேட்டி அமைந்திருந்தது. டி.கே.எஸ். இளங்கோவன் இவ்வாறு கூறியது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது. கருணாநிதியின் சிலை திறப்பு விழா குறித்து ஆலோசனை நடந்து வரும் நிலையில் அதுபற்றிய தகவல்களை வெளியிட்டதால் மு.க.ஸ்டாலின் அதிருப்தி அடைந்தார்.

மேலும் அவரது ஒரு தொலைக்காட்சி பேட்டி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது சந்தேகம் என்ற ரீதியில் இருந்தது. இது டி.கே.எஸ். இளங்கோவன் மீதான அதிருப்தியை ஸ்டாலினிடம் மேலும் அதிகரிக்கச் செய்தது.
இப்படி நான்கு விஷயத்திலும் தொடந்து சொதப்பியதால் டி.கே.எஸ். இளங்கோவனின் பதவியை தி.மு.க. தலைமை பறித்து நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அவர் பேட்டி அளித்த போது 2016 தேர்தலில் தி.மு.க. எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது பற்றி சில தகவல்களை வெளியிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அன்றைய தலைவர் கருணாநிதி உடனடியாக அவரை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கினார். உடனே டி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கோரி கடிதம் அளித்தார். அதை ஏற்று அவரை மன்னித்து அவருக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் மீண்டும் பதவி பறிபோக காரணமாகி விட்டது என்கிறது கட்சியின் முக்கிய சோர்ஸ் …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக