புதன், 17 அக்டோபர், 2018

Ajeevan Veer : மைத்ரியும் றோவும் ...படு கொலை செய்ய என்ற குண்டைத் தூக்கிப் போட்டார்.

Ajeevan Veer : மைத்ரியும் றோவும்
இலங்கை அரசியலிலும் ஆட்சி மாற்றங்களிலும் வெளிநாட்டு புலனாய்வு துறைகளின் பங்கு என்பது தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கிறது. அது கண்ணுக்கு புலப்படாவிட்டாலும் சர்வதேசம் என்பது வெளிநாட்டு புலனாய்வாளர்களது செயல்பாடுதான்.
இந்த உள் நுழைவு 1960களுக்கு பின்னரே உக்கிரமைகிறது. சிறிமாவோ பண்டாரநாயக்க சீஐஏ குறித்த அச்சத்தோடு அவரது அரசை நடத்தி வந்தார். அதனால் சோவியத் தேசத்தோடு மிக நெருக்கமாக இருந்தார். அதனால் இந்திய உறவும் அவருக்கு இருந்தது. அக்காலத்தில் இந்தியா சோவித் நாட்டோடு மிக நெருக்கமாக இருந்த காலமாகும்.
அவரை இல்லாமல் செய்ய அமெரிக்க உளவுத்துறை களத்தில் இறங்கியது. அவர்களுக்கு இலங்கையை ஒரு தளமாக பாவிக்கும் தேவை உருவானது. அந்த அமெரிக்க ஆதரவை வைத்து சிறிமா, ஜேஆரினால் அரசியல் வரலாற்றிலேயே இல்லாமல் செய்யப்பட்டார். ஜேஆர் ஆட்சிக்கு வந்ததும் சிறிமாவோவின் குடியுரிமையை பறித்து மூலையில் உட்கார வைத்தார்.
அதன்பின் அமெரிக்காவின் பலத்தில் ஜேஆர் இந்தியாவோடு முட்டி மோதத் தொடங்கினார். ஜேஆரை தண்டிக்க நினைத்த இந்தியா றோவினூடாக ஜேஆரை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கையையும் 30 வருடங்களுக்கு மேலாக ஈழப் போராளிக் குழுக்களை வைத்து இலங்கையை தலை தூக்கவே விடாமல் பண்ணியது. பின்னர் அதே ஈழ போராட்ட குழுக்களை அழிக்க இந்தியாவே முன் நின்று முடித்துக் கொடுத்தது.

பிரேமதாச கூட மொசாட் குறித்து பீதியோடு இருந்தார். மொசாட் குறித்து விசாரணை செய்ய விசாரணைக் கமிசன் ஒன்றைக் கூட பிரேமதாச அமைத்தார். மொசாட் என்பது சீஐஏயின் தம்பி. அதன் பிரதி பலனாக கடைசியில் பாபுவின் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். புலிகளால் பிரேமதாச கொல்லப்பட்டாலும் அதற்கு பின்னால் இருந்தது மொசாட். புலிகள் இந்தியாவை விட்டு வேறு திசையில் பயணிப்பதை இந்தியா உணர்ந்த தருணம் இது.
ஆரம்பத்தில் ஈழப் போரை தூபம் போட்டு தொடக்கிய இந்தியாவே அதை முடிவுக்கு கொண்டு வர மகிந்தவின் தோளோடு தோளாக நின்றது. போர் முடிவுக்கு வந்த பின் இந்தியாவை விட்டு மகிந்த சீனாவோடு மிக நெருக்கமானார். இந்த மனநிலைக்கு மகிந்த 2014 ல்தான் மாறினார். அதன்பின்தான் இந்தியா முகமே தெரியாத ஒருவரான மைத்ரிபால சிரிசேனவை கொண்டு வர அனைத்தையும் பின்னால் நின்று செய்தது.
இனி ஒருபோதும் மகிந்த ஜனாதிபதி ஆக முடியாதபடி 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மகிந்தவின் எதிர்கால ஜனாதிபதி கனவை இல்லாமலே செய்தது. அதனால்தான் தனது தோல்விக்கு றோ காரணம் என மகிந்த பகிரங்கமாக சொன்னார். இங்கே இந்தியாவின் எதிர்ப்பு பட்டியலில் மகிந்த இன்னமும் இருக்கிறார். இலங்கையில் உள்ள அநேகர் மகிந்த அல்லது அவரது குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவதை றோ விரும்பவில்லை என உணர்கிறார்கள். மகிந்த மீண்டும் வருவதை றோ விரும்பவில்லை என்கிறார்கள். அதுவே கட்சி உட் பூசல்களுக்கு காரணம்.
றோவின் காய் நகர்த்தல் ஊடாக இன்றைய ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்ரி இப்போது இந்தியாவை எதிர்க்கத் தொடங்கியுள்ளார். அதை அவர் வெளிப்படையாக நேற்று போட்டு தாக்கினார். மைத்ரி அவரது ஜனாபதி பதவி குறித்த கனம் அறியாத ஒரு அரசியல்வாதியாகவே பலரால் இப்போது கருதப்படுகிறார். ஒரு ஜனாதிபதி என்ற முறையில் அவரது பேச்சுகள் இல்லை என பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். இப்படியான பேச்சுகள் இலகுவானதல்ல.
மைத்ரி தனது அடுத்த ஜனாதிபதி கனவுக்காக தொடர்ந்து முயன்று வருகிறார். போர் குற்றவாளியாக தன்னை மின்சார கதிரையில் உட்கார வைக்கப் போகிறார்கள் என மகிந்த அனுதாப வாக்குகளை பெற முயன்றது போல , தன்னை ரணில் படுகொலை செய்ய திட்டம் போடுகிறார் என ஒரு நாடகத்தை ஆடினார். ஆனால் அதில் ஈடுபட்டதாக கருதப்படுவோர் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அதிலிருந்து மீளவும் இந்திய எதிர்பினூடாக தனக்கான அனுதாபத்தை பெறவும் நேற்றைய கெபினட்டில் வைத்து றோ தன்னை படு கொலை செய்ய முனைகிறது எனும் குண்டைத் தூக்கிப் போட்டார். கெபினட்டில் இருந்தவர்கள் ஆடிப் போய் விட்டார்கள் என்கிறார் அங்கிருந்த ஒருவர். ஒரு நாட்டுக்கு எதிராக அல்லது அந்த நாட்டு புலனாய்வு துறைக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுவதென்பது பாரதூரமானது. அதை ஒரு ஜனாதிபதி சொல்வதென்பதென்பது மிக ஆபத்தானது. இதை இலங்கையின் புலனாய்வு துறைதான் சொல்லியிருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் இருக்கவும் வேண்டும்.
இப்படியான கருத்து அவரது அரசியல் எதிர்காலத்துக்கு அவரே வைத்துக் கொண்ட வேட்டாகவே கருதப்படுகிறது.
- அஜீவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக