புதன், 17 அக்டோபர், 2018

: “மீ டூ”.. திரைத்துறையில் 98 சதவிகிதம் பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், வன்முறைகள்?

Savukku : “மீ டூ” இந்த சொற்றொடர், ஹாலிவுட்டை உலுக்கி எடுத்து விட்டு, தற்போது இந்தியாவையே உலுக்கி வருகிறது.   பிரபல நாவலாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. நாடெங்கும் பெரும் விவாதத்தை தொடங்கியருக்கிறது இந்த மீ டூ
பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்களும், தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் / கொடுமைகளை பட்டியலிடுகிறார்கள்.  இந்த மொத்த பட்டியலில் மிக மிக மோசமான கொடூரனாக உருவெடுத்திருப்பவர் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர்.   அவரிடம் பணியாற்றிய பல்வேறு பெண் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் அனுபவங்களை விவரிக்கையில், ரத்தம் கொதிக்கிறது.

அவர் ஏன் இத்தனை நாளாக மாட்டாமல் இருந்தார் என்பதையும் ஒரு பத்திரிக்கையாளர் விவரித்திருந்தார்.  ஊடகத்தை பொறுத்தவரை, எம்.ஜே அக்பர் ஒரு கடவுள்.  அந்த கடவுளின் ஆசியோடு, ஊடகத் துறையில் நுழைந்தால், பெரும் ஊடகவியாளராக  உருவெடுக்கலாம் என்றே நாங்கள் அனைவரும் நம்பினோம்.  அதனால்தான் வானத்தை அண்ணாந்து பார்ப்பது போல அவரைப் பார்த்தோம் என்றார்.

முதன் முதலில் பிரியா ரமணி என்ற பத்திரிக்கையாளர்தான் அக்பர் மீதான புகாரை பொது வெளியில் போட்டு உடைத்தார்.  அவர் அந்த முதல் கல்லை எரிந்ததும் பல்வேறு திசைகளில் இருந்தும், புகார்கள் வந்து குவியத் தொடங்கின. பல பெண் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் அனுபவங்களை விவரிக்கையில், அந்த நேரத்தில் அவர்கள் எப்படி உடல் கூசியிருப்பார்கள் என்பதை உணர முடிகிறது.  எம்ஜே.அக்பருக்கு எதிராக இத்தனை பெண்கள் ஒரே நேரத்தில் புகார் கூற வேண்டிய அவசியம் இல்லை.

எம்ஜே அக்பர், இந்தியாவின் தலைச் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் என்பது மிகைச் சொல் அல்ல.
திறமை இருப்பதாலேயே ஒருவர் நல்லவராகி விட மாட்டார் என்பதற்கு அக்பர் ஒரு உதாரணம்.
ஆங்கிலத்தில் Whore என்று ஒரு பதம் சொல்லுவார்கள்.  அதற்கான சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை.  அந்த வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர் எம்ஜே அக்பர்.
1971ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியாவில் பயிற்சி நிருபராக சேர்கிறார் அக்பர்.  பின்னர் சில காலம் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி.  பின்னர் அதன் ஆசிரியராகிறார்.   ஆனந்த பாஸார் பத்திரிக்கா குழுமம் தொடங்கிய சண்டே இதழின் ஆசிரியராகி, மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் வார இதழாக அதை ஆக்குகிறார்.
1982ம் ஆண்டு, இன்றும் இந்தியாவின் மிக மிக சிறந்த நாளிதழாக திகழும் டெலிகிராப் பத்திரிக்கையை உருவாக்குகிறார்.
பின்னர் 1989ம் ஆண்டில், காங்கிரஸ் கட்சி சார்பாக பீகாரில் போட்டியிடுகிறார்.  மீண்டும் 1991 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்யிட்டு தோல்வியடைகிறார். ராஜீவ் காந்தியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராகிறார்.  ராஜீவ் பிரதமராக இருந்து போபர்ஸ் ஊழலில் சிக்கிய காலத்தில், ராஜீவுக்கு ஆதரவாக இருந்தவர் அக்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  1991ல் மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆலோசகராக அரசுப் பதவியில் சேர்கிறார்.  1992ல் மீண்டும் ஊடகத் துறை.   1994ம் ஆண்டு, ஏசியன் ஏஜ் என்ற நாளிதழை தொடங்குகிறார்.

கோனியாவோடு எம்ஜே.அக்பர்
பின்னர் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் என்ற இதழின் ஆசிரியர். பின்னர் டெக்கான் க்ரானிக்கிள் ஐதராபாத் ஆசிரியர். சில காலம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். சண்டே கார்டியன், இந்தியா டுடே என்று சில பத்திரிக்கைகளில் பணியாற்றி விட்டு, மீண்டும் காங்கிரஸில் சோனியா காந்தியின் கவனத்தை பெற முயற்சித்தபோது, அவர் நிராகரிக்கப்படுகிறார்.
நிராகரிக்கப்பட்டவுடன், சற்றும் மனம் தளராமல், காவ கும்பலோடு ஐக்கியமாகிறார். 2014 தேர்தலில் மோடியின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.   பின்னர் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகிறார்.
இப்போது Whore என்ற வார்த்தைக்கு எம்ஜே.அக்பர் உகந்தவரா இல்லையா என்று தெரிந்திருக்கும்.
14க்கும் மேற்பட்ட பெண் பத்திரிக்கையாளர்கள் எம்ஜே அக்பர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சொன்னபோதும், பிரதமர் மோடி இது குறித்து வாயே திறக்கவில்லை.  அவர் வாய் திறக்காமல் ஏன் அமைதியாக இருந்தார் என்பது, எம்ஜே.அக்பர் 97 வழக்கறிஞர்களை வைத்து, பாட்டியாலா நீதிமன்றத்தில், பிரியா ரமணி மீது தொடுத்த அவதூறு வழக்கை வைத்து புரிந்து கொள்ளலாம்.
எம்ஜே.அக்பரைத் தவிர்த்து, பிஜேபியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது, இதே போன்ற பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று டெல்லி பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். இன்று எம்ஜே.அக்பரை ராஜினாமா செய்ய வைத்தால், இது நாளை தொடர்கதையாகி விடும் என்பது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நன்கு தெரியும்.
இந்த வழக்கை பத்திரிக்கையாளர் பிரியா ரமணி எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல.  இனி, அக்பருக்கு எதிராக வலுவாக எழுந்த குரல்கள் மெல்ல மெல்ல அடங்கும்.
தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஒரு ஆணுக்கு பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும் ஈர்ப்பு என்பது இயல்பானது.   இயற்கையானது.    காதல் ஒரே ஒரு முறைதான் பூக்கும் என்பதெல்லாம் அறிவியலுக்கு எதிரானது.  ஒரு ஆண் அல்லது பெண் மீதான ஈர்ப்பு என்பது, எப்போதும், எந்த வயதிலும் வரும்.  அப்படித்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். பேசுகிறோம், சிந்திக்கிறோம், சிரிக்கிறோம் என்பதைத் தவிர விலங்குகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு ?
பத்திரிக்கை துறை என்று இல்லை.  சினிமா துறை என்று இல்லை.  எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  வீட்டில் வேலைக்கு வரும் வேலைக்காரிகளை படுடி என்று அதிகாரத்தோடு படுக்க வைக்கும் சம்பவங்கள் பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.   விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு செல்லும் பெண்களை, நில உரிமையாளர் படுக்கைக்கு அழைத்து, அதில் வெற்றி பெறும் பல சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்றுமதி ஆடையகம், சிறு தொழிற் கூடங்களில், ஏழைப் பெண்கள் இன்னும், சத்தமில்லாமல், ஆண்களின் கட்டளைக்கு கீழ்படிந்து, ஆண்களின் தேவைகளுக்கு, தங்கள் பொருளாதார தேவை காரணமாகவோ, வேலை வேண்டுமே என்ற அச்ச உணர்வு காரணமாகவோ, பாலியல் உறவு கொண்டுதான் வருகிறார்கள்.
இந்த மீ டூ என்ற இயக்கம், படித்த நடுத்தர வர்க்கத்துக்கானது. படித்த பெண்கள், இனியும் இந்த அக்கிரமத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.   இது வரவேற்கத்தக்கதா என்றால் நிச்சயம் வரவேற்கத்தக்கதே.  ஏன் வரவேற்கத்தக்கது என்றால், இந்த இயக்கம், அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணை அடைய நினைக்கும் ஆண்களுக்கு அச்சத்தை ஊட்டும். தனக்கு கீழ் பணி புரியும் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கவோ, அல்லது அவளது உடலை தொடவோ நினைக்கும் ஆணுக்கு இது நிச்சயம் பய உணர்வை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுக்க முழுக்க உண்மைதானா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இதில் சில பொய்க் குற்றச்சாட்டுகளும் இருக்கலாம் அல்லவா ?
வரதட்சிணை கொடுமைக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி, தனக்கு பிடிக்காத கணவன், மாமியாரை, நாத்தனாரை பழிவாங்க, ஒரு ஐந்து சதவிகித பெண்களாவது இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்தானே ?
ஒரு புறம், பாலியல் சீண்டல்களுக்காக பெண்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில், பாலியல் சீண்டல்களை, விருப்பத்தோடு ஏற்றுக் கொண்டு, அதனால் கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.  இத்தகைய பெண்களின் காரணமாகத்தான், முடியாது என்று ஒரு பெண் சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாமல், ஆண்கள் பாலியல் வன்முறையிலும், சீண்டலிலும் இறங்குகிறார்கள்.
எது பாலியல் அத்துமீறல் ?
எந்த வயதாக இருந்தாலும், அவர்களில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ திருமணம் ஆகியிருந்தாலும்  ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு, இயற்கை.  குறிப்பாக, ஒன்றாக பணிபுரியும் இடங்களில் இது மிக மிக சகஜம்.  ஒரு ஆண், நாகரீகமாக, திருமணமாகியே இருந்தாலும் ஒரு பெண்ணிடம், எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறுவதுதான் எல்லைக்கோடு.  அந்த பெண் அதை ஏற்றுக் கொள்ளலாம்.  அல்லது மென்மையாக மறுக்கலாம்.  இல்லை செருப்பை கழற்றிக் காட்டலாம்.  அத்தோடு அந்த ஆண், தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது என்பது வரை, அதை அனுமதிக்கலாம்.   பெரும்பாலான பெண்கள், நாகரீகத்தோடு மறுத்து, நண்பர்களாக பழகும் நேர்வுகளும் உள்ளன.
சிக்கல் எங்கே வருகிறதென்றால், பெரும்பாலான ஆண்களுக்கு “நோ” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை.  அது எப்படி அவள் என்னை வேண்டாம் என்று சொல்லலாம் என்ற இறுமாப்போடு, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டுவது, ஆபாச செய்திகளை அனுப்புவது, மிரட்டுவது என்று இறங்கும்போதுதான் பெண்கள் வெறுப்படைகிறார்கள், கோபமடைகிறார்கள், அருவருப்படைகிறார்கள்.   அதிலும் குறிப்பாக, ஒரு பெண்ணுக்கு உயர் அதிகாரியாக இருக்கும் ஒரு ஆண், தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்தவே முயல்கிறான்.   அந்த அதிகாரத்தை செலுத்தி, அவளை மிரட்டி, வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று அச்சுறுத்தி அவளை அடைய நினைக்கிறான்.
அங்கேதான் சிக்கல் எழுகிறது.   தனக்கு கீழ் பணியாற்றும், தான் நினைத்தால் வேலையை விட்டு தூக்கி விட முடியும் என்ற அதிகாரம் பொருந்திய இடத்தில் இருக்கும் ஒரு ஆண், ஒரு பெண்ணை தன் அதிகாரத்தை செலுத்தி அடைய முயல்வதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சம். இதைத்தான் பெண்கள் பாலியல் வன்முறை என்று கூறுகிறார்கள்.
கலவி என்பது இன்பத்தின் உச்சம்.

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,
அதனாலே மரணம் பொய்யாம்.
எத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறான் பாருங்கள் பாரதி.  காதலினால்தான் கலவி.   கலவியிலே கவலை தீரும்.  அந்த காதலினால், கவிதை, கானம், சிற்பம் உள்ளிட்ட கலைகள் கிட்டும்.   காதல்தான் இவ்வுலகின் தலைமையின்பம் என்கிறான்.   காதலினால் சாக மாட்டாய்.  அந்த காதலினால் மரணமே பொய் என்கிறான்.
இப்படியல்லவா நடக்க வேண்டும் காதலும் கலவியும்.   உயர் அதிகாரியாக இருந்து கொண்டு, தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு பெண்ணை மிரட்டி கலவி கொள்வது என்ன இன்பத்தை தந்து விடும் ?
தன் அதிகாரத்தை பயன்படுத்தி, விருப்பத்துக்கு மாறாக ஒரு பெண்ணை படுக்க வைக்கும் ஒரு ஆண், அவளிடம் கலவி சுகத்தை எதிர்ப்பார்ப்பதில்லை.  தனது அதிகாரத்தை அவளிடம் செலுத்தி வெற்றி பெறுவதே அவனுக்கு இன்பம் தருகிறது.
நான் பணியாற்றிய அரசு அலுவலகத்தில், கணவனோடு வாழும் பெண்கள் பெரும்பாலும் தொல்லைகளுக்கு ஆளாவதில்லை.  ஆனால், கைம்பெண்களாக, மண முறிவு ஏற்பட்டவர்களாக பணியாற்றும் பெண்களை, அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பல ஆண்கள் வல்லூறுகள் போல அபகரிக்க முயன்றதை நானே நேரில் கண்டிருக்கிறேன்.   முகத்தை சுளித்து, அந்த பெண் தன் விருப்பமின்மையை தெரியப் படுத்தினாலும், சற்றும் உரைக்காத ஜென்மங்கள், அந்த பெண்களை நெளிய வைக்கும் அளவுக்கு நடந்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தையே எடுத்துக் கொள்ளலாமே.   லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியாக உள்ள முருகன், அவருக்கு கீழ் பணியாற்றிய ஒரு பெண் எஸ்பிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார்.    இரவு நேரங்களில் வாட்ஸப்பில் அழைக்கிறார். அந்த எஸ்பி அவர் அறைக்குள் நுழைந்தால், அவரை தனது செல்போனில் புகைப்படம் எடுக்கிறார்.

முருகன் ஐபிஎஸ்
உச்சகட்டமாக, ஒரு நாள், அந்த எஸ்பி ஐஜி முருகனின் அறைக்குள் நுழைகையில், கதவை தாழ் போட்டு கட்டிப் பிடிக்க முயற்சிக்கிறார்.  அந்த எஸ்பி, கத்தவும் பின்வாங்குகிறார்.
முருகன் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தது முதல் தனக்கு கீழ் பணியாற்றிய பெண் அதிகாரிகளை வேட்டையாடியே வந்திருக்கிறார்.   பல பெண்கள் அவர் விருப்பத்துக்கு இணங்கியதால், அவருக்கு அதிகார போதை தலைக்கேறுகிறது.
அது எப்படி ஒரு பெண் என்னை பிடிக்கவில்லை, வேண்டாம் என்று கூறலாம் என்ற அதிகார திமிரும், ஆணவமுமே, முருகனை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது.
அந்த பெண் எஸ்பி முருகன் மீது புகார் அளித்தால், முருகனுக்கு பதிலாக அந்த பெண் எஸ்பியை மாற்றுகிறார்கள்.   அவர் மீது விசாரணை நடத்த முறையற்ற ஒரு கமிட்டியை அமைக்கிறார்கள். அந்த கமிட்டி விசாரணையை சிபி.சிஐடிக்கு அனுப்புகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.
விடுமுறையில் இருக்கும் ஹுலுவாடி ரமேஷ், முருகனை காப்பாற்றுவதற்காகவே, விடுமுறை நாளில் வந்து, முருகனுக்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தடை விதித்ததோடு, இது குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவும் தடை விதித்தார்.
நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால், தனக்கு நீதி கிடைக்காது என்றும், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறும், தலைமை நீதிபதிக்கு கடிதம் அளித்தும், இந்த வழக்கு, இன்னமும் ஹுலுவாடி ரமேஷ் அமர்விலேயே விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பெண் எஸ்பிக்கே இந்த கதியென்றால், ஒரு அரசு அலுவலகத்திலோ, அல்லது தனியார் அலுவலகத்திலோ பணியாற்றும் சாதாரண பெண்களின் நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.
மும்பையை சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “ஊடகத் துறையை சேர்ந்த பெண்கள் இப்போதாவது இது குறித்து பேசுகிறார்களே என்பது மகிழ்ச்சி.   எம்ஜே.அக்பர் குறித்து பெண் பத்திரிக்கையாளர்கள் கூறியது அனைத்தும் உண்மையே.  இப்போதாவது அவர்கள் பேசுகிறார்களே என்று நான் மகிழ்கிறேன்.   மனவியல் ரீதியாக, பெண்கள், வெளிப்படையாக பேச முடியாத வண்ணம் வளர்க்கப் படுகிறார்கள்.  வெளிப்படையாக உண்மையை பேச தயங்கும் வகையிலேயே அவர்கள் வார்க்கப்படுகிறார்கள். 
ஊடகத் துறை எம்ஜே.அக்பரைப் போல பல மிருகங்களை கொண்டுள்ளது.  ஊரகப் பகுதியிலிருந்து ஊடகத் துறைக்கு வரும் அப்பாவிப் பெண்கள் அல்ல இப்போது உள்ள பெண்கள்.   உலகம் எப்படிப்பட்டது, எத்தகைய நபர்களால் சூழப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்தே உள்ளனர்.   
மற்ற துறைகளைப் போல அல்லாமல், ஊடகத் துறை என்பது, ஒரு காதலோடு செய்யப்படும் தொழில்.  அத்தகைய தொழிலில் இப்படி சமரசம் செய்துகொண்டுதான் வாழ வேண்டுமென்றால், அது ஒரு பெண்ணின் உளவியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரும் இதே கருத்தை பிரதிபலித்தார்.
பணியாற்றும் இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக பெண்கள் குரல் எழுப்ப முன்வந்திருப்பது வரவேற்கதக்கது. பல ஆண்டுகளாக, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு, பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பு என்பதைப் பற்றியெல்லாம் நாம் தொடர்ந்து பேசியே வந்திருக்கிறோம்.  ஆனால், நாம் ஊடகத் துறையிலேயே பணியாற்றும் பெண்களுக்கு எந்த பாதுகாப்பையும் வழங்கவில்லை என்ற அவமானகரமான உண்மையை மீ டூ இயக்கம் உணர்த்தியுள்ளது. 
சமூக அவமதிப்பு, இழிவு இவற்றையெல்லாம் மீறி, மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களையும், மூத்த பத்திரிக்கையாளர்களையும் அவர்கள் செய்த பாலியல் சீண்டல்களை அம்பலப்படுத்திய பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  உடன் பணியாற்றும் சக ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு ஆணுக்கும் இது பாடம் கற்றுத் தர வேண்டும். 
ஒரு பெண் உங்களைப் பார்த்து சிரித்தாலோ, இயல்பாக பேசினாலோ, உங்களை தொட்டுப் பேசினாலோ, அவள் உங்களோடு படுக்கத் தயாராக இருக்கிறாள் என்று பொருளல்ல. 
ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் அது வேண்டாம்தான்.  அதற்கு வேறு பொருளே இல்லை.   இதைத்தான் மீ டூ இயக்கம், உரத்த குரலில் உணர்த்தியிருக்கிறது. பெண்ணின் சம்மதமின்றி தொடுவது வன்முறை என்பதையும் இந்த இயக்கம் உணர்த்தியுள்ளது. 
இந்த மீ டூ இயக்கத்தில் இருந்து, ஊடக நிர்வாகங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.   அவர்கிளிடம் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் சக பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் நிர்வாகங்கள் தெள்ளத் தெளிவாக வரையறுத்து உரைக்கும்படி கூற வேண்டும். 
ஒரு ஆண், ஒரு பெண்ணிடம், தன் விருப்பத்தை பண்பாக தெரிவிப்பது பாலியல் சீண்டல் ஆகாது.  
பெண் ஊழியர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளானால், எங்கே புகார் தெரிவிப்பது, எப்படி புகார் தெரிவிப்பது என்பதை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியது நிர்வாகங்களின் கடமை.   இது பெரும் அளவில் பாலியல் சீண்டல்களை குறைக்க உதவும். 
இது வரை, மீ டூ இயக்கத்தில் வெளிப்படையாக பேசிய பெண்கள், அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.   அதுதான் இந்த இயக்கத்தை சரியான முடிவுக்கு இட்டுச் செல்லும். 
இல்லையென்றால், மீ டூ இயக்கமும், சேற்றை வாரி இறைக்கும் ஒரு இயக்கமாக மாறி விடும் அபாயம் இருக்கிறது.” என்றார் அந்த டெல்லி பத்திரிக்கையாளர்.
வைரமுத்து சின்மயி விவகாரம்
முதல் மரியாதை படத்துக்கு பிறகு, பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா என்ற கூட்டணி உடைந்தது.  1991ம் ஆண்டு ஏஆர்.ரகுமான் அறிமுகமாகிறார்.   வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.   அதன் பிறகு, தெனாலி படம் வரை, ரகுமான் இசையில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து மட்டுமே எழுதுவார்.  ஏறக்குறைய சினிமாத் துறையையே தனது பாடல்களால் ஆண்டு கொண்டிருந்தார் வைரமுத்து என்றால் மிகையல்ல.
வைரமுத்துவின் கவிதை நூல்கள் ஆயிரக்கணக்கில் விற்கும்.  அப்போது அவருக்கு போட்டி ஏது ?   வேறு பதிப்பகம் அதை பதிப்பித்தால், லாபம் அவருக்கு போய் விடுமே என்று, வைரமுத்துவே சூர்யா பதிப்பகம் என்று ஒரு பதிப்பத்தை தொடங்கி அவர் நூல்களை அவரே விற்பனை செய்து வந்தார்.

அப்போதெல்லாம், வைரமுத்துவின் கவிதையில் மயங்கி, அவரிடம் ஆட்டோகிராப் வாங்க, கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவிகள் வைரமுத்துவை சந்திக்க வருவார்கள்.  அவர்களிடமே தனது திருவிளையாடல்களை காண்பித்தவர்தான் வைரமுத்து.  வைரமுத்து ஒரு பச்சை பொம்பளை பொறுக்கி என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஆனால், 15 ஆண்டுகள் கழித்து சின்மயி அவர் மீது சொல்லும் புகார்களைத்தான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.    திரைத் துறையில் நுழைகையில், வாய்ப்பு வேண்டி சில சமரசங்களை செய்யும் கட்டாயம் நேரிடும்.  இதை தவிர்க்க இயலாது.  ஒரு பெண் தன் விருப்பத்துக்கு மாறாக சமரசம் செய்ய நேரிட்டால், அவளது கோபம் அவள் இறக்கும் வரை மாறாது.
வைரமுத்து தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சி செய்தார் என்று கூறும் சின்மயி, அவர் திருமணத்துக்கு வந்த வைரமுத்துவின் காலில் விழுந்து வணங்கியது நெருடலாகவே உள்ளது.   அவர் திருமணத்துக்கு ஆயிரக்கணக்கானோர்     வந்திருப்பார்கள்தானே ?  அனைவர் காலிலுமா சின்மயி விழுந்தார் ?  வைரமுத்து காலில் எதற்காக விழ வேண்டும் ?  காலில் விழுமாறு வைரமுத்து கட்டாயப்படுத்தினாரா என்ன ?
Video Player
00:00
00:12
அதன் பின்னர் ஒரு ட்வீட்டில், வைரமுத்து எழுதிய சர சர சாரக்காத்து பாடலில் வரும் முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.  பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்ற ஒரு கயவனைப் பற்றி இப்படி எந்தப் பெண்ணாவது எழுதுவாரா ?

இதே போல, 2012ம் ஆண்டில், இவரைப் பற்றி தவறாக ஒரு ட்வீட் போட்டார் என்பதற்காக, 7 இளைஞர்கள் மீது காவல்துறையில் சின்மயி புகார் அளித்தார்.  அப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எந்த புகாரும் பதிவு செய்யப்படாது.   சங்கீத சபாக்களில் பாடியதன் மூலம், அவருக்கு பார்ப்பனரான ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்ஸின் நட்பு கிடைத்தது.  அந்த செல்வாக்கை பயன்படுத்தி, அப்போது, ஆணையராக இருந்த ஜார்ஜின் மூலம் வழக்கு பதிவு செய்ய வைத்து, இருவரை கைது செய்ய வைத்தார் சின்மயி.  இது குறித்த கட்டுரையின் இணைப்பு
அதே செல்வாக்கை பயன்படுத்தி, சின்மயி, அப்போதே வைரமுத்து குறித்து புகார் அளித்திருக்கலாம்தானே ?  ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
சின்மயி விவகாரம் குறித்து பேசிய அந்த மும்பை பெண் பத்திரிக்கையாளர், “மீ டூ விவகாரத்தில் திரைத் துறை நுழைந்திருப்பது, இந்த இயக்கத்தையே நீர்த்துப் போகச் செய்ய வல்லது.   நான் வயதில் சிறியவளாக இருந்ததால் அப்போது எனக்கு பேசத் துணிச்சல் இல்லை என்று சின்மயி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் வயதில் சிறியவராக இருந்தால், அவருக்கு ஆதரவாக உள்ள அவர் தாயார் அவரோடுதானே இருந்தார் ?  அப்போதே அவரோ அவர் தாயாரோ இதை வெளியிட்டிருக்கலாமே ?  

இதில் மற்றொரு முக்கியமான கேள்வி, வைரமுத்து மட்டும்தான் சிலுவையில் அறையப்பட வேண்டியவரா ?  மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களா என்ன ? 
கடந்த ஆண்டு, மிர்ச்சி சுசித்ரா மற்றும் வரலட்சுமி போன்றோர் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசினார்கள்.  திரைத் துறையிலிருந்து ஒருவர் கூட அவர்களுக்கு ஆதரவாக வரவில்லை.  மாறாக, சுசித்ராவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்கள்.  அப்போது சின்மயி இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாரா ?  அல்லது தனக்கு நேர்ந்ததாக தற்போது கூறும் கொடுமைகள் குறித்து அப்போதாவது கூறினாரா ?”  என்று கேள்வி எழுப்புகிறார் அந்த மும்பை பத்திரிக்கையாளர்.
திரைத்துறை
திரைத்துறையில் 98 சதவிகிதம் பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், வன்முறைகள் நடக்கத்தான் செய்கின்றன.  தயாரிப்பாளர் அல்லது இயக்குநரின் விருப்பத்துக்கு இணங்காதவர்கள் கதாநாயகிகளாகவோ, அல்லது துணை நடிகையாகவோ கூட வர முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை.  இந்த உண்மை குழந்தைக்கு கூட தெரியும்.
தங்களது விருப்பத்துக்கு இணங்க மறுத்த பல கதாநாயகிகளை அடுத்த படத்தில் புக் செய்யக் கூடாது என்று நிர்பந்தம் விதிக்கும் பல கதாநாயகர்களும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.
இந்த சமரசத்துக்கு தயாராக உள்ள பெண்கள்தான் திரைத்துறையில் இணைகிறார்கள்.   இதில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், கதாநாயகர்களும், செய்வது சரி என்று நான் ஒரு போதும் கூற மாட்டேன்.  ஆனால் இது யதார்த்தம் அல்லவா ?
நான் சமரசம் செய்து கொள்ளத் தயார். எனக்கு இந்த சமரசத்தை விட, புகழ் வெளிச்சம்தான் முக்கியம் என்று துணிந்து இத்துறையில் கால் பதித்து விட்டு, 15 ஆண்டுகள் கழித்து, குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் ?
பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோதே, அவர் தன்னை பணிய வைத்து, தன்னோடு உறவு கொண்டதாக மோனிகா லெவின்ஸ்கி அறிவித்து, நீதிமன்றத்திலும் சாட்சி சொன்னதை நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.
தனி மனித உறவு மற்றும் பாலியல் உறவுகள் தனி நபர் சம்பந்தப்பட்டவை.  இதில் தலையிட்டு, நியாயத் தராசை பிடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
அதே நேரத்தில், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் விருப்பத்துக்கு மாறாக, அவரை சீண்டினாலோ, வன்முறைக்கு உள்ளாக்க நினைத்தாலோ, அது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல.  தண்டிக்கவும் பட வேண்டியதே.
இந்த மீ டூ இயக்கம், ஒரு பெண்ணை அனுமதி இல்லாமல் தொட நினைக்கும், அவரை மிரட்டி அடைய நினைக்கும், ஆபாச செய்திகளை ரகசியமாக அனுப்ப நினைக்கும், அவள் அன்பை பெறாமல், அவளை பணியவைத்து அடைய நினைக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.
பணியிடங்களில் ஏற்படும் பாலியல் சீண்டல்களை, இனியாவது அரசுத் துறைகளும், தனியார் துறைகளும் உரிய தீவிரத் தன்மையோடு எடுத்துக் கொண்டு, புகார் அளிக்கவும், தண்டனை அளிக்கவும், போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இனியாவது பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக