ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அமெரிக்காவுக்கு ரூ. 700 கோடி லஞ்சம் .. ஜமால் கொடூர கொலையில் சமரச முயற்சி?

THE HINDU TAMIL< பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு, சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இந்த சூழலில் இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டு ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்எச்சரித்தார். சவுதியை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகளும் சபையும் கடுமையாக விமர்சித்துள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தது.
ஜமால் விவாகாரம் தொடர்பாக சவுதி அரசரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். மேலும், சவுதி மன்னரை சந்திக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை ட்ரம்ப் அனுப்பி வைத்தார். இதனால் சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. கோபத்தை தணிக்கும் முயற்சியாக பாம்பியோ சவுதி அரேபியா சென்று பேச்சுவார்த்தை நடததினார்.
அதேசமயத்தில் அமெரிக்காவின் கோபத்தை தணிக்கும் பொருட்டு அந்நாட்டுக்கு சுமார் 700 கோடி ரூபாயை சவுதி அரேபியா உதவி நிதியாக அளித்துள்ளது. சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாம்பியோ ரியாத் வந்த நாளில், சவுதி அரேபியாவால், அமெரிக்காவுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பத்திரிகையாளர் ஜமால் படுகொலையில் ட்ரம்ப் உறுதியாக இல்லாமல், சவுதி அரேபியாவிடம் பணம் பெறும் நேரம் இதுதானா? என அந்த பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. சவுதி பணம் அனுப்பியதற்கும், பாம்பியோ அங்கு சென்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக