செவ்வாய், 9 அக்டோபர், 2018

வீரப்பனை காட்டி கொடுத்த கோவை ஷண்முக பிரியாவுக்கு 5 கோடி ரூபாய்; வீட்டுமனை! இன்னும் கொடுபட வில்லையாம்

விகடன் :தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் வீரப்பன் மற்றும் அவரின்
கூட்டாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, அவர்களைக் கொல்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
இந்த நிலையில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளை கோவையில் உள்ள வடவள்ளி பகுதியில் போலீஸார் தங்க வைத்தனர்.
அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன், முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களைப் பெறும்படி தனது குடும்ப நண்பரான சண்முகப்பிரியா என்ற பெண்ணின் உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து, முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களைப் பெற்று அதிரடிப் படையினருக்குத் தெரிவித்தார். குறிப்பாக வீரப்பன் நடமாட்டம் குறித்தும் வீரப்பனுக்குக் கண் பார்வை குறைந்திருப்பது குறித்தும் தகவல்களைச் சேகரித்து அதிரடிப் படையினரிடம் கொடுத்தார்.


இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர். சண்முகபிரியா2004-ம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வீரப்பனை என்கவுன்டரில் முக்கியத் தகவல்கள் அளித்த சண்முகப்பிரியாவுக்கு, மத்திய அரசின் சார்பில் 5 கோடி ரூபாயும் மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும் வீட்டுமனையும் பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை எதுவும் வழங்கப்படவில்லை.

 இதுகுறித்து சண்முகப்பிரியாவிடம் பேசினோம். “ மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறேன். இதுவரை கிடைக்கவில்லை. தற்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்னை போன்ற பல சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, எனக்கு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் போட்டார். அதன்படி, 6 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்ட நிலையில், அதில் ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டும் எனக்குக் கொடுக்கப்பட்டது. மீதித் தொகை வழங்கவில்லை. ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்.

இதுதொடர்பாக, தமிழக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட நடிகர்கள் சங்கம் ஆகியோரிடம் முறையிட்டும், அவர்களிடமிருந்து, எனக்கு நியாயம் கிடைக்கவில்லை” என்கிறார் ஆதங்கத்துடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக