சனி, 13 அக்டோபர், 2018

நெடுஞ்சாலை துறையில் 4500 கோடிக்கும் மேல் ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமி .. கலங்கரை விளக்கம்


Savukku · : தமிழ்நாடு இன்று அவலமானதொரு சூழலில் இருக்கிறது.   இது  போன்ற சூழல் தமிழகத்துக்கு என்றுமே நேர்ந்தது கிடையாது. ஊழலும், கொள்ளையும் எல்லா காலங்களிலும் நடந்துதான் வந்தது என்றாலும், இது போன்ற முடைநாற்றமெடுக்கும் ஊழலும், அலங்கோலமும் எப்போதும் இருந்தது கிடையாது.  எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்தை ஆண்டவர்களில் ஊழல் செய்யாதவர்களே கிடையாது.
ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் நடைபெறுவது போன்ற கொள்ளை  எப்போதும் நடைபெற்றது இல்லை.   ஒவ்வொரு அமைச்சரும், எம்எல்ஏவும், அதிகாரிகளும் கட்டற்ற முறையில் ஊழல் புரிகிறார்கள்.  தங்கு தடையின்றி ஊழல் செய்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கோ சீர்கெட்டுப் போய் இருக்கிறது.  நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை, குண்டர் சட்டத்தில் அடைக்கிறது அரசு.   ஒரு மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கு எதிராக போராடினால், துப்பாக்கிச் சூடு நடத்தி சொந்த மக்களையே கொலை செய்கிறது இந்த அரசு.

ஹைகோர்ட்டாவது மயிறாவது என்று ஒரு தேசிய கட்சியின் தலைவன் பேசுகிறான்.  அவனை ஒரு பெண் பித்து பிடித்த ஆளுனர் வரவேற்று உபசரிக்கிறார்.   கவர்னர் என்ற பெயரை, கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பெண் உச்சரித்த நிலையில், அந்த கவர்னரே அதை விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துக் கொள்கிறார்.
அது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை, வெள்ளையன் கூட பயன்படுத்திராத உளுத்துப் போன சட்டப்பிரிவில் கைது செய்கிறது இந்த அரசு.
நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் உறவினர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று கேள்வி எழுப்பினால், தாய், தந்தை, மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோர் மட்டுமே உறவினர்கள். சம்பந்தியெல்லாம் உறவினர் கிடையாது என்று சட்டப்பேரவையில் பேசும் ஒரு முட்டாளை முதல்வராக பெற்றிருக்கிறோம்.  என் சம்பந்திக்கு நெடுஞ்சாலை ஒப்பந்தம் அளித்தால் என்ன தப்பு என்று இறுமாப்போடு பேசும் ஒரு கயவனை முதல்வராக பெற்றிருக்கிறோம்.
தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர், முதல்வரின் உறவினருக்கு நெடுஞ்சாலை கான்ட்ராக்ட் கொடுத்தால் என்ன தவறு என்று உயர்நீதிமன்றத்திலேயே வாதாடும் ஒரு அவலச் சூழலில் நாம் வாழ்கிறோம்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் ஒரு பெண் காவல் கண்காணிப்பாளரை ஒரு பொறுக்கி ஐஜி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குகிறான் என்று புகார் அளித்தால், புகார் அளித்த பெண் அதிகாரியை மாற்றி விட்டு, அந்த பொறுக்கிக்கு மாலை போட்டு ஆராதனை செய்யும் ஒரு நயவஞ்சகனை முதல்வராக பெற்றிருக்கிறோம்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தை இடியடா என்று உயர்நீதிமன்றமமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பின்னரும், பார்ப்பனத் திமிரோடு அந்த கட்டிடத்தை இடிக்க மறுக்கும் ஒரு பார்ப்பன தலைமைச் செயலாளர் இறுமாப்போடு ஆளுகை செய்யும் காலத்தில் வாழ்கிறோம்.
நாட்டில் எத்தனையோ முக்கியமான ஊழல்கள் நம் அன்றாட வாழ்வை பாதித்துக் கொண்டிருக்கையில், அது குறித்த விவாதங்களை நடத்தாமல், கவைக்குதவாத பொருள்களில் விவாதங்களை நடத்தும் தரங்கெட்ட ஊடகங்களின் நடுவினிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஊடகத் தொழிலை வெறும் லாபத்துக்காக மட்டுமே நடத்தி, அரசு விளம்பரத்தை மட்டுமே நம்பி, எடப்பாடி போன்ற கயவனுக்கு ஒத்திசை இசைக்கும் மரணித்த ஊடகப் பிணங்களின் மீது வாழ்கிறோம்.
இப்படிப்பட்ட சூழலில் நமக்கு விரக்தி ஏற்பட்டு ஏன் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற வெறுப்பு ஏற்படுவது இயற்கையே.   ஆனால் இது போன்ற தருணங்களில் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நிகழும்.
அப்படி நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.   எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறையில் செய்த ஊழல்களை மூடி மறைக்க பழனிச்சாமி முயன்றபோதும், அந்த ஊழல் விசாரணையை சிபிஐக்கு மாற்றி இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் அப்படி நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய அந்த சம்பவம்.
முக்கிய எதிர்க்கட்சியாக திமுக தனது பணிகளை தொய்வு இருந்தாலும், தொடர்ந்து செய்தே வருகிறது.  அப்படி அந்த பணிகளின் ஒரு பகுதியாக திமுக செய்த ஒரு வேலைதான், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.
வெறுமனே சட்டமன்றத்தில் குரல் கொடுத்து விட்டு வெளிநடப்பு செய்வதோடு தனது பணியை நிறுத்தி விடாமல், திமுக பழனிச்சாமிக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, லஞ்ச ஒழிப்புத் துறையில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி மூலமாக புகார் அளித்தது.
லஞ்ச ஒழிப்புத் துறை எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் செயல்படும் ஒரு துறை.  அதில் உள்ள எஸ்பி, டிஐஜி, ஐஜி, இயக்குநர் உள்ளிட்ட அத்தனை பேரையும் நியமனம் செய்வது எடப்பாடிதான்.  அப்படி இருக்கையில் அத்துறை எப்படி ஒரு நியாயமான விசாரணையை மேற்கொள்ளும் ?  அதுவும், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பிக்க எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் முருகன் போன்ற ஒரு பொறுக்கியை அதிகாரியாக கொண்ட ஒரு துறை எப்படி எடப்பாடி பழனிச்சாமி மீது நியாயமான விசாரணையை நடத்தும் என்ற கேள்வி எழலாம்.  ஆனால், நமது ஜனநாயக முறையில் இருக்கும் அமைப்புகளிடம்தானே புகார் அளிக்க முடியும் ?
அந்த வகையில்தான், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறையில் 4500 கோடிக்கும் மேல், எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அறுபடை வீடு கொண்ட முருகன் இருக்கையில் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக கவலைப்பட வேண்டும் ?
இரண்டு மாதங்களாகியும், அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படுகிறது.   வழக்கு தொடுக்கப்பட்டதும், அரசு வழக்கறிஞர் ஆஜராகி, பூர்வாங்க விசாரணை (Preliminary Enquiry) பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  அதன் விபரத்தை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அதை பிரித்துக் கூட பார்க்கவில்லை.  என்ன விசாரணை செய்தீர்கள் என்று கேட்கிறார்.  அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், நாங்கள் விசாரணையை முடித்து, அதன் அறிக்கையை கண்காணிப்பு ஆணையருக்கு (Vigilance Commissioner) அனுப்பி விட்டோம்.  கண்காணிப்பு ஆணையர் அந்த அறிக்கையின் மீது எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு கட்டுப்படுகிறோம் என்றார்.  நீதிபதி, கண்காணிப்பி ஆணையரை யார் நியமிக்கிறார் என்று கேட்கிறார்.  முதலமைச்சர் என்று பதில் வருகிறது.   முதல்வர் மீதே புகார் இருக்கையில் அவர் எப்படி  சுதந்திரமாக முடிவெடுப்பார் என்ற கேள்விக்கு அரசு வழக்கறிஞரிடம் பதில் இல்லை.

அடுத்ததாக அரசு வழக்கறிஞர் கையாண்ட தந்திரம், இது நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டுகள் சம்பந்தப்பட்டது.  இந்த டெண்டரில் போட்டியிட்டு, அதில் தோல்வியுற்ற ஒருவர்தான் வழக்கு தொடுக்க முடியும். திமுகவுக்கு இந்நேர்வில் வழக்கு தொடுக்க முகாந்திரம் இல்லை என்கிறார்.
சரி. எத்தனை பேர் டெண்டரில் போட்டியிட்டார்கள் என்றால் அதற்கு அரசு வழக்கறிஞர் அளித்த பதில், ஒரே ஒரு நிறுவனம்.
திமுக சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, நெடுஞ்சாலைத் துறையில் பல திட்டங்கள் உலக வங்கி நிதி உதவியோடு செயல்படுத்தப்படுபவை.  உலக வங்கியின் விதிகளில், இத்திட்டங்களை செயல்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியின் தலைவராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இருப்பார்.  அந்த கமிட்டியில் தலைவராகவோ, உறுப்பினராகவோ உள்ளவர்களின் உறவினர்கள் ஒருவர் கூட டெண்டரில் பங்கேற்கக் கூடாது என்ற விதியை சுட்டிக் காட்டினார்.

என் ஆர்.இளங்கோ
அதற்குத்தான் அரசு வழக்கறிஞர் உறவினர்கள் என்றால் என்ன என்ற அயோக்கியத்தனமான வாதத்தை முன் வைத்தார்.  இந்த விபரங்களையெல்லாம் கேட்டுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 9 அக்டோபர் 2018 அன்று ஒத்தி வைத்தார்.
இதற்கு முன் இருந்த தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜியைப் போலவே, குறைந்தது மூன்று மாதங்கள் கழித்துத்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று அனைவராலும் அனுமானிக்கப்பட்டது.  மூன்றே நாட்களில் இன்று எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரை, சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இதற்கு முன் குட்கா விசாரணை இதே போல சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜியால் தீர்ப்பளிக்கப்பட்டது.  ஆனால் அந்தத் தீர்ப்பில் ஏன் சிபிஐக்கு அனுப்புகிறோம் என்று எந்த விதமான விபரங்களும் இல்லை.  விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதால், சிபிஐ விசாரணைக்கு அனுப்புகிறோ என்றதோடு, இப்படி சிபிஐக்கு அனுப்புவதால், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கருதக் கூடாது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.  சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கையான தீர்ப்பு அது.
ஆனால் நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் தீர்ப்பு ரசிக்கும்படியாக, உரிய காரணிகளை விவாதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.   அதன் முக்கிய பகுதிகளை மட்டும் மொழி பெயர்க்கிறேன்.
“அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ள காண்ட்ராக்டர்கள் முதல்வருக்கு உறவினர்கள்தான் என்றாலும், அரசு ஊழியர் நடத்தை விதிகளில் குறிப்பிட்டுள்ள “நெருங்கிய உறவினர்கள்” என்ற வரையறைக்குள் அவர்கள் வரமாட்டார்கள். டெண்டர்கள் எடுத்த காண்ட்ராக்டர்கள் 1991 முதல் இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.  இதில் முரண் ஏதுமில்லை.  
முதல்வர்,  ஐஏஎஸ் ஐபிஎஸ் நியமனங்கள் தொடர்பான துறையை தன்னிடம் வைத்திருந்தாலும்  அவர் எந்த விசாரணையிலும் தலையிடவில்லை. இந்த வழக்கில் பூர்வாங்க விசாரணை நியாயமான நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது.  எந்த தலையீடும் இல்லை.  விசாரணை செய்ததில் இதில் வழக்கு பதிவு செய்யும் வகையில், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.  பூர்வாங்க விசாரணை அறிக்கை கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டு விட்டது.  
இந்த வழக்கில் மேல் நடவடிக்கை தேவையில்லை என்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது  அரசு வழக்கறிஞர் மேல் நடவடிக்கை தேவையில்லை என்று அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளதால், அரசு அளித்த சீலிடப்பட்ட உறையை பிரிக்க வேண்டிய அவசியமில்லை.   
அரசு வழக்கறிஞரிடம், புகார் அளித்தவரை விசாரித்தீர்களா, உலக வங்கி அதிகாரிகளை விசாரித்தீர்களா, என்று கேட்டபோது இல்லை என்று பதில் அளித்தார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன்
அரசு வழக்கறிஞர், காண்ட்ராக்டுகள் வழங்கியதில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், திட்டங்களின் மதிப்புகள் கூட்டப்படவில்லை என்றும், பூர்வாங்க விசாரணை நேர்மையாக நடைபெற்றுள்ளது என்றும், அறிக்கை கண்காணிப்பு அதிகாரியிடம் அனுப்பப்பட்டு விட்டது என்றும் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு வழக்கறிஞரின் கூற்றுப்படி, முதல்வரின் உறவினர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்த புகாரை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வரின் கீழ் செயல்படுகிறது.  புகார் அளித்தவரை கூட விசாரிக்காமல், இந்த விசாரணையில் நடவடிக்கை கைவிடப்பட்டு அறிக்கை கண்காணிப்பு ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.  அந்த கண்காணிப்பு ஆணையரையும் நியமனம் செய்பவர், குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சரே.
இதை “முறையற்ற விசாரணை” என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது ?
தீவிரமாக ஆராயாமல் வெளிப்பார்வைக்கே இந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.  முக்கியமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஒரு புகார்தாரரை கூட விசாரிக்காமல் நடைபெறும் விசாரணை எப்படிப்பட்ட விசாரணையாக இருக்க முடியும் ?
புகாரை பெற்றது முதல், இந்த விசாரணையை இழுத்து மூடி, குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்றுவதற்காகவே முயற்சிகள் நடந்துள்ளன என்பதை கண்டுபிடிக்க ஒரு மேதையின் அறிவு அவசியமில்லை.  
புகார்தாரரை கூட விசாரிக்காமல் விசாரணை நடந்துள்ளது என்பதில் இருந்தே, இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது   குற்றச்சாட்டுகள் முதல்வரின் உறவினர்களுக்கு காண்ட்ராக்டுகள் வழங்கினார் என்பது. காண்ட்ராக்டுகளை வழங்கிய துறை, முதல்வரின் கீழ் செயல்படுகிறது.   இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்யும் லஞ்ச ஒழிப்புத் துறை முதல்வரின் கீழ் செயல்படுகிறது.  
உயர் பதவிகளில் உள்ள உயர்ந்த அதிகாரம் படைத்தவர்கள் மீதான தீவிரமான குற்றச்சாட்டுகள் இவை.   
நீதி வழங்குவது மட்டுமல்ல.  நீதி வழங்கப்படுகிறது என்பது தெரிய வேண்டும்.  இது அதிகாரத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.  நியாயமான முறையில் செயல்பாடுகள் இருப்பது, ஒரு சிறந்த நிர்வாகத்துக்கு அவசியமாகும்.
இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்குகளின் கீழ் வருகிறது.   அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த நீதிமன்றத்தின் மீது, நீதியின் மனசாட்சிக்கு பதிலுரைக்கும் கடமை சுமத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு, அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களின் மீது நம்பிக்கையை உறுதி செய்வது அவசியமானதாகும்.”
இப்படி விரிவாக காரணங்களை பட்டியலிட்டு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.
கலங்கரை விளக்கங்கள் விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில், நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்களுக்கு கரையை காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் கலங்கரை விளக்கங்கள்.
இன்று தமிழகம், பல்வேறு சிக்கல்களில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், கலங்கரை விளக்கம் போல வந்துள்ளதுதான் இன்று வந்துள்ள தீர்ப்பு.
கடலில் தத்தளிப்பவனுக்கு மரக்கட்டை போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
சிபிஐக்கு சென்றால் மட்டும் நியாயம் நடந்து விடுமா ?  சிபிஐயிலும் பணம் கொடுத்து தப்பித்து விடுவார்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.  லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்தவரை, குட்கா விசாரணையில் ஏதாவதொரு முன்னேற்றம் ஏற்பட்டதா ?  சிபிஐ விசாரைணையை கையில் எடுத்த பிறகு, இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  டிஜிபிக்கள் டிகே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதுபோலத்தான் இதன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
வழக்கை தளர்ச்சியடையாமல், தொடரந்து நடத்தி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவை பெற்ற திமுகவின் மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோவுக்கு வாழ்த்துக்கள்.
இத்தகையதொரு நம்பிக்கையை தமிழக மக்களுக்கு ஏற்படுத்திய நீதிபதி ஜெகதீஷ் சந்திராவுக்கும் வாழ்த்துக்கள்.
ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களிடம் சலுகைகளை எதிர்ப்பார்த்து நீதிபதிகள் கையேந்தி நிற்கும் காலம் இது.   இத்தகையதொரு சூழலில் இப்படியொரு தீர்ப்பை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வழங்கியுள்ளதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
உரை :
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக